கைக்கடிகாரம்

கைக்கடிகாரம்

அந்த மாதம் நடந்த பரீட்சையில் கணக்குப் பாடத்தில் மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தேன். மதிப்பெண்ணைப் பார்த்ததும் என் தந்தையோ கடுப்பாகிப் போனார், காரணம் கேட்டார்...நான் சொன்ன காரணம் “ பரீட்சைக்கான நேரம் போனதோ எனக்குத் தெரியவில்லை” என்பதாக ஒரு பெரிய பொய்யைச் சொன்னேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அடுத்த நாள் காலையில் பள்ளிக்கூடம் போக கிளம்பினேன், என் தந்தை என்னிடம் வந்து “ பிரேமி”....இன்னைக்கு சீக்கிரமாவே வந்துவிடு என்றார். ஏன்? என்று என் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றின. ஆனால் அவற்றை வெளியே கேட்கமுடியாதே, அப்படி ஒரு பயம்... இல்லை இல்லை மரியாதை.. பள்ளிக்கூடத்திலிருந்து வழக்கத்தை விட முன்னதாகவே வீட்டுக்கு வந்து இருந்தேன். என்னைப்பார்த்ததும் என் தந்தை “ குளித்துவிட்டு சீக்கிரம் கெளம்பு, வெளியே போகவேண்டும்” என்றார். நானும் கிளம்பினேன், இருவரும் போனோம். எங்கள் ஊரின் பிரபல்யமான கைக்கடிக்கடிகார கடையின் முன்னால் என் தந்தையின் சைக்கிள் போய் நின்றது, என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை...கண்ணைப்பறிக்கும் விதத்தில் வித விதமான கடிகாரங்கள் அணிவகுத்து காட்சி தந்தன..அப்போ எனக்கு என்ன வயது தெரியுமா?...12 வயது தான், 8 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..ஒன்றொன்றாக கடிகாரங்களைப் பார்த்தேன், எனக்கு எங்கோ பறப்பது போன்ற உணர்வு. அங்கே என் தந்தை கடையில் இருந்தவர்களிடம் பேசினார், அவர்களில் ஒருவர் விரலை நீட்டி இதைப் பாருங்க சார் என்றார். என் தந்தையோ என்னை திரும்பிப் பார்த்து, “ எது பிடிச்சுருக்குனு சொல்லு” என்றார். நானும் ஆசையோடு, இல்லை... அலைச்சலோடு அதன் மேல் பாயாத குறையாக, ஓர் அழகான, சிறிய, சாக்லேட் போன்ற வடிவம் கொண்ட கைக்கடிகாரத்தை தெரிவு செய்தேன்..அந்த நேரம் வாய்விட்டு ஏதாவது சத்தமாக பாடணும் போல தோன்றியது...என்னை நானே அடக்கிக்கொண்டேன். நான் தெரிவு செய்த கடிகாரதோடு வீடு வந்து சேர்ந்தோம். வீடு வந்ததும், என் தந்தை என்னிடம் அடுத்த பரீட்சைக்கு நேரம் பார்த்தே எழுதலாம் இல்லையா?...அதோட நீ நிறைய மதிப்பெண்ணும் வாங்கணும் என்றார். அன்று தொடங்கிய அந்தப் பழக்கம் இன்று வரை கடிகாரமின்றி நான் வெளியே எங்கும் போனதில்லை...இப்படியாக எத்தனையோ நல்ல விஷயங்களையும், அறிவுரைகளையும் சொன்ன என் தந்தையோ இன்று என்னுடன் இல்லை.அது எனக்கு ஆறாத ரணம் தான் அவர் சொல்லி அப்போது கசந்த பல விஷயங்கள் இன்றும் எனக்கு பலன் அளிப்பதாகவே இருக்கின்றது.. ஒரு தந்தை என்பவர் யாருக்கு எப்படியோ எனக்கு தெரியாது, உலகத்தில் உள்ள தந்தைகளில் என் தந்தைதான் மிகச் சிறந்த தந்தை என்பேன்.. “ மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்”.....

எழுதியவர் : Ranjeni K (7-Jun-20, 1:55 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 200

மேலே