சுவரில் மோதிய பந்து

சுவரில் மோதிய பந்து

ரொம்ப நாட்களாக உடம்பு முடியாமல் இருந்த தன் கணவனை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தாள் பரிமளம். ரொம்ப ரொம்ப கஷ்டமான சூழ்நிலை, மூன்று பிள்ளைகள், படிப்பு, சாப்பாடு என்று அத்தியாவசிய தேவைகளுக்கே திண்டாடவேண்டிய போதிலும் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாது குடும்பத்தை கனகச்சிதமாகவே நடத்திவந்தாள் பரிமளம். எதிர் வீட்டு சுமதிக்கோ இதில் கொஞ்சம்.....இல்லை,...இல்லை அதிகமாகவே வருத்தம் தான். ஆனால் வெளியே காட்டிக்கொள்வதில்லை, அன்றும் அப்படித்தான் பரிமளம் வீட்டிற்கு சுமதி வந்தாள். வரும்போதே, பரிமளம்..பரிமளம்.... என்று குரல் கொடுத்தபடியே உள்ளே வந்தாள். அவள் குரல் கேட்டு வெளியே வந்த பரிமளத்திடம், உங்க வீட்டுக்காரருக்கு இப்போ எப்படி இருக்கு என்றாள். உடனே பரிமளம், ம்...... சுமாரா இருக்கு. மாத்திரைகள் கொடுத்திருக்காங்க, சாப்பிடுகிறார் என்றாள். அதற்கு சுமதி, உடம்ப பாத்துக்கோங்க அண்ணே...என்றவள் வர்றேன்....என்றபடி சென்றுவிட்டாள். இரண்டு நாட்கள் கழித்து, சுமதி வீட்டிற்கு பக்கத்திலிருக்கும், பால்வாடியில் கற்பிக்கும் ரமா டீச்சர், பரிமளம் வீட்டிற்கு வந்தாள். வந்தவள் சொன்ன விஷயம் பரிமளத்திற்கு தூக்கி வாரிப் போட்டது. என்ன உங்க கணவருக்கு “ டி பி ” ஆமே... சுமதி அக்கா சொன்னாங்க.. “ பார்த்து அக்கா உங்களுக்கும் தொத்திக்கப்போகுது கவனமாக இருங்க” என்றாள். இதைக்கேட்டதும் பரிமளம் திகைத்துப்போனாள், உடனே அவள் முகம் மாறியது. யாருக்கு டி பி ? என்றாள் கோபமாக, அதற்கு ரமா டீச்சர், கோவப்படாதீங்க பரிமளா அக்கா...சுமதி அக்காதான் சொன்னாங்க, தீராத நோய் தான் உங்க கணவருக்கு வந்திருக்கு... சீக்கிரத்தில் நீங்க வெள்ளைப் புடவைக் கட்ட போறீங்கன்னு சொன்னாங்க. அதனால் தான் அப்படி சொன்னேன் என்று ஈன சுவரத்தில் பேசினாள்..இவர்களின் இந்த பேச்சுக்கள் பரிமளத்தின் நெஞ்சில் வேலாகப் பாய்ந்தன. எதுவுமே பேசவில்லை ரமா டீச்சர் வெளியே போய் விட்டார். நாட்கள் ஓடின.....ஏழு வருடங்கள் கழித்து ஒரு நாள், சுமதி வீட்டின் முன்பு அவசர ஊர்தி வந்து நின்றது. என்னவென்று போய் பார்த்தாள் பரிமளம், நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட சுமதியின் கணவரை, கஷ்டப்பட்டு தூக்கி அவசர ஊர்தியில் ஏற்றினார்கள். அங்கே நின்றவர்களிடம் கேட்டபோதுதான், அவர்கள் சொன்ன விஷயம்.... “சுமதியின் கணவருக்கு சக்கரை வியாதி அதிகமாகிடுச்சாம் அது தான் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறாங்க”... ஒரு வாரம் கழித்து பரிமளம் வீட்டிற்கு வந்த சுமதி, பரிமளம் இவருக்கு சக்கரை வியாதி ரொம்ப அதிகமா போச்சாம். அதனால கண் பார்வை கூட சரியா தெரியலைனு டாக்டர் சொல்றாங்க என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாள். அதற்கு பரிமளமோ, கவலைப்படாத சுமதி எல்லாம் சரி ஆகும், கடவுள் கைவிட மாட்டார் என்று ஆறுதல் படுத்தினார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சுமதியும் போய் விட்டாள். சில நாட்கள் கழித்து, கடைக்கு போவதற்கு கிளம்பிய பரிமளம் எதோ நினைத்தவளாக வீட்டுக்குள் போய் தன பிள்ளைகளுக்கு கணவர் வாங்கிவந்த ஆப்பிள் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு போய் சுமத்தியிடம் கொடுத்து, அவள் கணவரையும் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தாள். ஒரு வருடங்கள் இப்படியாக ஓடின...வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பிய பரிமளத்தின் கணவர், பதட்டமாக வீட்டிற்குள் நுழைந்தார். நுழைந்தவர் பரிமளம்....பரிமளம்.... என்றார் அவசரமாக, அவர் குரல் கேட்டு ஓடிவந்த பரிமளம் என்னங்க என்றபடி,கணவரைப் பார்த்தாள். சுமதி வீட்டுக்காரர் இறந்து போயிட்டாரு!...இது உனக்குத் தெரியாதா? நீ ஏன் இன்னும் சாவு வீட்டுக்கு போகாமல் இருக்க என்றார்... அவள் அய்யய்யோ!.. எனக்கு தெரியாதுங்க என்றாள். சரி முதல்ல கெளம்பு ரெண்டு பேரும் போயிட்டு வரலாம் என்றார்..இருவரும் சுமதி வீட்டை நோக்கி நடந்தார்கள். அங்கே அழுதபடி இருந்தாள் சுமதி, பரிமளத்தைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். “ வாய் சொல் வரும் சொல்” என்பார்கள்..அடுத்தவர்களை வாழ்த்தாமல் போனாலும் பரவாயில்லை, வசை பாடக்கூடாது. ஒருவரைப் பார்த்து இல்லாத பொல்லாத விஷயங்களை பேசும்போது அது எப்படிப்பட்ட பாதிப்பை உண்டுபண்ணும் என்று யோசிக்கணும்.. சும்மா வாயில் வந்ததெல்லாம் பேசக்கூடாது. அடுத்தவர்கள் எப்போ வெள்ளைப்புடவை காட்டுவார்கள் என்று தவிக்கும்போது எவ்வளவு சந்தோசம் ,குதூகலம்.. அதுவே நமக்கென்றால் எவ்வளவு வருத்தம் துன்பம், தவிப்பு..எதையும் பேசும் முன்பே யோசிக்கணும், சுவற்றில் பந்தை எறிந்தால், எறிந்த நம்மிடமே பந்து திரும்பி வரும்.. இதுதானே உலக நியதி...இந்த நியதி சுமதிக்கு மட்டும் என்ன? விதிவிலக்கா?

எழுதியவர் : (10-Jun-20, 7:40 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 191

மேலே