துகளதிகாரம்

பேசுவாரில்லாமல் மின்கம்பத்தோடு பொழுது கழிக்கின்றன
காலி டெலிபோன் கம்பங்கள்!
***********
அறை மணிநேரப் பேச்சு
ஐம்பது முறையாவது கடித்திருப்பாள் டாலரை
பாவம் பிள்ளையார்!
***********
அது என்னவோ தெரியவில்லை
வயிற்றுப் பிள்ளைக்காரிகளைப் பார்த்து
ஒருநாளும் சபலப்பட்டதில்லை மனசு!
***********
அடுப்புக்கரியை அவ்வப்போதாவது கொண்டாடுங்கள்,
அடித்த கோழியை அனலில் வெந்து அசைவமாக்கிவிட்டு
அடுத்த ஊருக்கு தூக்குச்சட்டியோடு துணைக்குப் போகிறது பேய்களை விரட்டிக்கொண்டே!
***********
மெத்தை,தலையணை பேசுகையில் ஒட்டுக்கேட்டது,
இலவ மரம் முழுவதும் முட்கள்!
***********
காற்றடிக்கும்போதெல்லாம்
அபிநயத்தோடு அரிதாரம் பூசி ஆடுகிறது
அடுக்கலையில் சிலந்திவலை!
***********
எப்போது பெய்தாலும்
புதுக்கவிதைகளைத் தூவிச் செல்கிறது
மழை!
***********
இருக்கின்றவரை எண்ணையையும்,
இல்லாதா நேரத்தில் தன்னையும்
எரித்து ஒளிருகிறது விளக்குத்திரி!
***********
வாழ்நாள் முழுவதும் வீடுவீடாய்
விளக்கையும் தேய்த்த வேலைக்காரிக்கு,
ஒருநாளும் வெளிப்படவில்லை பூதம்!
***********
இறையச்சம் வர வர
காக்கா எச்சம் போல் ஆகிவிட்டது
எப்போதாவதுதான் வந்துவிழுகிறது மனதுள்!