பிச்சைக்கரர்கள் மகாநாடு

(நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. எவரையும் புண் படுத்தும் நோக்கம் அல்ல. பிச்சைக்காரர்களும், மற்றவர்களும், தெரு நாய்களும் மன்னிக்கவும்.)

"பிச்சாண்டியே சரணம் சரணம்;
எங்கள் வாழ்வு மலர, நீ வரணும் வரணும்;
தாழ்வை நீக்கி தலை நிமிர்ந்து நிற்க,
ஊக்கம் நீ தரணும் தரணும்"

இந்த வாழ்த்துப் பாவுடன் கோலாகலமாக தமிழ்நாடு பிச்சைக்காரர்கள் முன்னேற்றக் கழக மகாநாடு துவங்கியது. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள் டிக்கெட் எடுத்தும், டிக்கெட் எடுக்காமலும், ஓசி சவாரி மற்றும் ஒட்டு சவாரி செய்தும் மகாநாட்டு மைதானத்தை நோக்கி கடலெனத் திரண்ட வண்ணம் வந்து கொண்டே இருந்தார்கள்.

மகாநாட்டின் வரவேற்புரைத் தலைவர் தம் வரவேற்பு உரையை ஆரம்பித்தார்.

மதிப்புக்கும் மரியாதைக்கும் பண்புக்கும், பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய பேரவைத் தலைவர் பிச்சமுத்து அவர்களே, நேர்மைக்கும் நியாயத்துக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நிமிர்ந்து நிற்கும் பிச்சுமணி அவர்களே, நமது பிச்சைக்கார இனம் செழிக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த பிச்சுராஜ் அவர்களே, பிச்சை புகினும் கற்கை நன்றே கற்கை நன்றே என்ற பழம் சொல்லை மாற்றி அமைத்து கற்கை ஆயினும் பிச்சை நன்றே, பிச்சை நன்றே என்று மாற்றி பிச்சைத் தொழிலுக்கே பெருமை கூட்டித் தந்த பிச்சாடனர் அவர்களே, மற்றும் நமது ஸ்பெஷல் அழைப்புக் கிணங்கி எங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் பிச்சுரத்தினம் அவர்களே, மேலும் இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிரமம் பாராது பஸ்களிலும் ரெயில்களிலும் நெருக்கியடித்துக் கொண்டு வந்து இங்கு குழுமியிருக்கும் கோடிக் கணக்கான தோழர்களே, தோழிகளே, நம் கூட்டத்தைக் கண்டு மலைத்து நிற்கும், நம்மை இத்தொழிலிலிருந்தே விரட்டி அடிக்கப் பாடு படும், நமது நாளைய சகோதர்களே, சகோதரிகளே அனைவருக்கும் முதற்கண் என் நெஞ்சார்ந்த, மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு அனைவரும் வருக, வருக என்று வரவேற்கிறேன்.
( கை தட்டல்)
நமது சிறப்பு விருந்தினர் பிச்சுரத்தினம் அவர்கள் பெரிய பட்டப் படிப்புடன் பெரிய வேலைக்குச் சென்று அமெரிக்காவில், அவர் மூன்றாண்டுகள் சம்பாதித்ததை எல்லாம் Los Vegas நகர சூதாட்ட காஸினோக்களில் இழந்து, இருந்த தொழிலும் போண்டி ஆகி, ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வெற்றிகரமாகப் பிச்சை எடுத்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் தன் ஆற்றலைக் காட்டி அகில உலக பிச்சைக்காரர்களின் சமஷ்டியை ஏற்படுத்தித் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக அப்பதவிக்குக் கௌரவம் சேர்த்திருக்கிறார், இப்போது அவர் தனது Key Note Address ஐ அதாவது சிறப்புரையை ஆற்றுவார் என்று கூறிக் கொண்டு என் வரவேற்புரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இப்போது திருவாளர் பிச்சுரத்தினம் அவர்கள் பேசுவார்.

எனது உயிருக்கும் மேலான அன்பர்களே, நான் முதல்லே திருவோட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தமிழன்னு சொல்லிக்கிறதுலே ரொம்ப பெருமைப்படறேன்
( பலத்த கை தட்டல் )
நான் ஒரு NRI பிச்சைக்காரனாக தேசம் தேசமாக சுத்தற ஒரு பரதேசி. அதனாலே சுத்தத் தமிழிலே பேச வராது. அதுக்கு நீங்க முதல்லே என்னை மன்னிக்கணும். வரவேற்புரையிலே சொன்ன மாதிரி “நான் என் தொழிலை மொதமொத அமரிக்காவிலே தான் ஆரம்பிச்சேன். உ லக நாடுகள் பலதும் நான் போயிருக்கேன். ஆனா பிச்சைக்காரர்களுக்கான சொர்க்கம்னா அது நம்ம நாடுதான். இந்த நாட்டுக்கு, என்னவோ சொல்வாங்களே, ஈடு இணையே கிடையாது.

ஆயிரக் கணக்கான வருஷங்களா நம்ம நாடு பிச்சைக்காரங்களோட சொர்க்கபுரியா இருந்திருக்கு. உங்க வாழ்த்துப் பாடல்லியே பிச்சாடனர்னு சொல்லிப் பாடினீங்களே அவர் யாரு? சாட்சாத் பரமசிவன்தான். தருமத்தைப் பத்தி இந்த நாட்டு சாத்திரங்க சொன்ன அளவு வேறே எந்த நாடும் சொல்லல்லே.

தபிமுக ன்னு சொல்ற தமிழ்நாடு பிச்சைக்காரர்கள் முன்னேற்றக் கழகம்தான், இந்தியாவிலே மிகப் பெரிய பிச்சைக்காரங்க கட்சி. அகில இந்தியாலேயும் இருக்கிற சங்கத்தையெல்லாம் சேத்து அகில இந்திய பிச்சைக்காரர் சம்மேளனம்னு நாம அமைச்சுக்கிறது அவசியம். அதனாலே நமக்கு பல சௌகரியங்கள் கிடைக்கும். அகில உலக பிச்சைக்காரங்க சமஷ்டியோட ஆதரவும் கிடைக்கும். அப்படிக் கிடைச்சுதுன்னா நம்ம ஊர் பிச்சைக்காரங்க பெரிய அளவுலே வளரலாம். எம்.பி., எம். எல். ஏ வாகலாம். மந்திரியாகக் கூட ஆகலாம்.
தபிமுக விலே பல பட்டதாரிகள் இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். இது நாம பெருமைப் பட வேண்டிய விஷயம்.
(விசில்)

PhD வாங்கினவங்க கூட நம்ம கழகத்துலே இருக்காங்கன்னு சொன்னாங்க. ஏற்கெனவே பல வக்கீல்கள் இந்தக் கழக்துலே இருக்கிறது எனக்குத் தெரியும். வேறு சில வெளிநாடுகளிலேயும் அப்படி சில பேர் இருக்காங்க. ஆனா நம்ம நாட்டை இந்த விஷயத்துலே யாராலும் மிஞ்ச முடியாது.

அதுவும் குறிப்பா வருஷா வருஷம் இஞ்சினீருங்க நிறைய பேர் தபிமுக விலே சேரரதாகக் கேள்விப்பட்டேன். நிறைய இஞ்சினீரிங் காலேஜை திறந்து கிட்டே இருக்கறதாலே கொஞ்ச நாளிலே எஞ்சினீரிங் படிச்ச மாணவங்க மாத்திரம் இல்லாம அவங்களைப் படிக்க வச்ச அவங்களோட அம்மா அப்பாக்களும் நம்ம கழகத்துலே பெரிய அளவுலே சேரரதுக்கு சான்ஸ் இருக்குன்னு சொன்னாங்க. இப்படி தபிமுக அசுர வேகத்துலே வளரப் போவதைப் பத்தி நாம எல்லாம் நெஜமாவே பெருமைப் பட்டுக்கலாம். அந்தக் காலத்துலே நம்ம நாட்டு சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட உயிரோடே இருக்கற ஒரு சிலரும் அவங்க வம்சத்தைச் சேர்ந்த பலரும் இந்தக் கழகத்துலே இருக்காங்கன்னு நெனைக்கும்போது எனக்கு-- என்னங்க அது-- ஊம் - உடம்பெல்லாம் புல்லரிக்குது. அன்னிக்குப் பிச்சைக்காரங்களா இருந்த பலபேரும் இன்னிக்கு கோடீஸ்வரங்களாகவும் சில பேர் கேடீஸ்வரங்களாகவும் மாறிட்டாங்கன்னு கேள்விப்படும்போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்யுது.

இன்னும் கொஞ்ச நாளிலே பல IT படிச்சவங்களும், ஆடிட்டர்களும, டாக்டர்களும் நம்ம கூட்டத்துலே சேரரதற்கு வாய்ப்பு இருக்கு. இப்ப வெளிநாட்டிலே இருந்து நம்ம ஊர்க்காரங்க பலரும் வேலை இல்லாம திரும்ப வராங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்களையும் வருக, வருகன்னு வரவேற்று நம்ம கழகத்திலே சேரச்சொல்லி கைகூப்பிக் கேட்டுக்கறேன். நம்ம கூட்டத்திலே 33 சதவீதம் படிச்சவங்க இருக்காங்க. இது இன்னும் சில வருஷத்துலை 50 சதவீதத்தைத் தாண்டிடும்னு எதிர்பாக்கலாம். இப்பவே நம்ம கையில் இருக்கற தொழில் நுட்பத்தை வச்சி நாம நம்ம தொழில் முறையிலே லேடஸ்ட் டெக்னாலஜியைப் புகுத்தி பல முன்னேற்றங்கள் செய்யலாம்.
(விசிலடிச்சான் குஞ்சுகள் காது கிழிய விசில் அடிக்க பலத்த கர கோஷம்)

(சோடா குடித்துவிட்டு தொண்டையைக் கனைத்தபடி தலைவர் திருவாளர் பிச்சுரத்தினம் அவர்கள் தம் பேச்சைத் தொடர்கிறார்.)
இப்ப ஒவ்வொருத்தரும் வீடுவீடா ஏறி பிச்சை எடுக்கிறோம். “அம்மா தாயே”ன்னோ, இல்லை “அய்யா சாமி” ன்னோ தொண்டை கிழியக் கத்தி பிச்சை கேக்கிறோம். (“அம்மா தாயே” என்று பழக்க தோஷத்தினால் கூட்டத்திலிருந்து பல குரல்கள் எழுகின்றன. அமைதி, அமைதி என்று தலைவர் மன்றாட அமைதி திரும்புகிறது) .
பல சமயம் இதனாலே நம்ம தொண்டை டேமேஜ் ஆறது மட்டும் இல்லாம நம்மோட பிரஷஸ் டைமும் வேஸ்ட் ஆகுது. சில சமயம் மறந்து போய் பிச்சை எடுத்த வீட்டுலேயே மறுபடியும் பிச்சை கேட்டு அவமானப் படறோம். இதையெல்லாம் அட்வான்ஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தறதன் மூலமா தவிர்க்கலாம். பிச்சை எடுக்கறதையும் எளிதாக்கி அதை ஒரு ப்ளஷர் ஆக்கலாம். ஏரியா ஏரியாவாப் பிரிச்சி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஏரியா ஒதுக்கி அந்த ஏரியாவுக்கான டேட்டாவையெல்லாம் டௌன்லோட் பண்ணி ஒரு கையடக்க கம்ப்யூட்டரை ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கலாம். அதுலே பக்திப் பாடல்கள், சினிமாப் பாட்டுங்க, குத்துப்பாட்டுங்க இப்படி பிச்சை எடுக்கறதுக்குத் தேவையான பல பாட்டுக்களையும் டௌன்லோடு பண்ணி அந்தந்த ஏரியா அந்தந்த வீடுகளுக்கு ஏத்தா மாதிரி பாட்டுக்களை பிளே பண்ணலாம்.
1ம் நம்பர் பட்டனை அழுத்தினா அம்மா தாயேன்னு குரல் வரும். எத்தனை நேரம், எவ்வளவு உரக்க, எவ்வளவு தரம் அந்த மாதிரி கத்தணுங்கறதை நாம செட் பண்ணிக்கலாம்.
2 ம் பட்டனை அழுத்தினா அய்யா சாமின்னு குரல் வரும்.
3 ம் நம்பரை அழுத்தினா சார் தர்மம் செய்யுங்க பிளீஸ்னு குரல் வரும். எத்தனை தரம் குரல் கொடுக்கணும். எவ்வளவு வால்யூம் இருக்கணும், எத்தனை நேரம் கத்தணும் போன்றதையெல்லாம் நாம செட் பண்ணிக்கலாம்.
இப்படி பலவிமான குரல்களும் சத்தமும் வரும்படி செஞ்சுக்கலாம். காசோ பணமோ அதுலே போட்டா அது டோடல் பண்ணிடும். இதனாலே ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு கலெக்ஷன் ஆகுது ஒரு நாளிலேங்கறது தெரிஞ்சிடும். அப்புறம் அந்த மொத்த zone லேயும் கலெக்ட் ஆறதைச் சேர்த்து அதை எல்லாருக்கும் ஈக்வலா பிரிச்சிக் கொடுத்துடலாம். இப்படி பல சௌகரியங்களையும் நாம செஞ்சிக்கலாம். இதுக்கெல்லாம் நமக்கு நிறைய பணம் தேவைப்படுது. நாம அகில உலக பிச்சைக்காரர்கள் சமஷ்டியிலே சேர்ந்தா நமக்கு பண உதவி எளிதாய்க் கெடைக்கும்.
உங்களுக்கே தெரியும் இந்தக் கூட்டத்தைச் சேந்தவங்க யாருக்கும் சூதுவாது தெரியாது. யாரையும் ஏமாத்த மாட்டோம். திருட்டு, கொள்ளை இதுக்கெல்லாம் நாம பரம எதிரிகள். அதெல்லாம் செய்யறதா இருந்தா நாம ஏன் பிச்சைக்காரங்களா இருக்கப் போறோம்?
(பலத்த கைதட்டல்)
நாம நியாயமாவும் நேர்மையாவும் இந்தத் தொழில்லே ஈடுபட்டிருக்கோம். எங்களுக்கு அரசாங்கம் செய்யவேண்டியது நாங்க மழைக்கு ஒதுங்க, ராத்திரி படுத்துத் தூங்க, விடுதி கட்டித்தரணும். அதுக்காக பிச்சைக்காரர்கள் விடுதின்னு கட்டி அதுக்கு வேலி போட்டு எங்களை அடைச்சி வெக்கக் கூடாது. நாங்க சுதந்திரப் பறவைகள். ரோட்டோரத்திலேயோ, கோவில் குளங்கள் பக்கத்திலேயோ நாங்க உக்காந்தோ, நின்னோ பிச்சை எடுக்கிறதை யாரும் தடுக்கக் கூடாது. எங்க இடத்தை யாரும் என்க்ரோச் பண்ணக் கூடாது. சுதந்திரமா பிச்சை எடுக்கிறதுலே இருக்கிற சுகம் வேறே எந்த வேலையிலேயும் கிடைக்காது.
(விசில் பறக்கிறது).
நமக்குள்ளே ஜாதி, மத, இன, மொழி பேதமே கிடையாதுங்கறதும் உங்களுக்கு எல்லாம் தெரியும். அரசாங்கம் நேர்மையான சிறந்த பிச்சைக்காரங்களைத் தேர்ந்து எடுத்து அவங்களுக்கு அவார்டு கொடுத்து கௌரவிக்கலாம். நாங்க வேலைக்கு எதிரிகள்னு எல்லாருக்குமே தெரியும். அதனாலே வேலை கேட்டு அரசாங்கத்துக்கு நாங்க எந்தத் தொல்லையும் தரமாட்டோம். இதுக்காகவே அரசாங்கம் பல சலுகைகளை எங்களுக்குத் தரலாம். நாம் கேட்க வேண்டி யதையெல்லாம் தீர்மானங்கள் போட்டு நிறைவேத்த இருக்கிறதாலே நான் அதிகமா பேசவிரும்பலை. (உட்காருகிறார்)

அதற்குப் பிறகு முன்று பேச்சாளர்கள் பேசி முடிக்கும்போது கூட்டத்தில் பெரும் பகுதியினர் ஆங்காங்கே படுத்துத் தூங்க ஆரம்பித்து விட்டனர். தூக்கம் வராதவர்கள் கூட தூங்கிக் கொண்டு இருந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில் வேட்டு போட்டு அனைவரும் எழுப்பப் பட்டனர்.

தபிமுக தலைவர் தீர்மானங்களை வாசிக்கிறார்.

1 பிச்சைக்காரர்களைக் கேவலப்படுத்துவோர்களுக்கு ஓராண்டு கடும் தண்டனை தரவேண்டும். பிச்சைக்காரர்களை அவன், இவன் என்றோ அவ, இவ என்றோ கூப்பிடக்கூடாது. மரியாதையாக அவர், இவர் என்றே கூப்பிட வேண்டும்.

2 எங்கள் பிள்ளைகளுக்கென்று தனியாக இங்கிலீஷ் மீடியம் CBSE பள்ளிக்கூடங்கள் துவக்கப் படவேண்டும். இதில் வெற்றிகரமான சிறந்த பிச்சைக்காரர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம், அதாவது சிலபஸ் அமைக்கப் படவேண்டும். சோம்பேறிகளாக இருப்பது எப்படி, வேலை ஏதும் செய்யாமல் பொழுதை உபயோகமாகக் கழிப்பது எப்படி, குறைந்த அலைச்சலில் அதிகமாக சம்பாதிப்பது எப்படி, பிச்சைக்காரர்களின் சைக்காலஜி, பிச்சை இட மறுக்கும் பிச்சைக்காரர்களின் சைக்காலஜி போன்ற பிச்சை எடுப்பவர்களுக்குப் பயன்படும்படியான மனவியல் பாடங்கள் சொல்லித்தரப் படவேண்டும்.

3. ஐந்து ரூபாய்க்குக் குறைவாக யாரேனும் பிச்சையிட்டால், அவர்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட வழி செய்யப் பட வேண்டும்.

4 தேர்தலின் போது பிச்சைக்காரர்களுக் காட்டும் மரியாதையும் பரிவும் எப்போதும் எல்லோராலும் காட்டப் படவேண்டும்.

5 எங்களுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு தனி மந்திரி எங்கள் கூட்டத்திலிருந்து நியமிக்கப் படவேண்டும்.

6 எங்களுக்கும் தேர்தலின்போது அறிவிக்கப்படும் இலவசங்கள் தரப்படவேண்டும்.

7 பஸ், ரயில், பிளேனில் எங்களுக்கு இலவச பயண சலுகை அறிவிக்கப் படவேண்டும்.

8 பிச்சைக்காரர்களுக்கென்று பிரீமியம் கட்ட வேண்டிய அவசியமில்லாத இன்ஷ்யூரன்ஸ் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

9 கணக்கு வைத்துக் கொள்வது, வருமான வரி கட்டுவது போன்ற எங்கள் நேரத்தை வீணடிக்கும் காரியங்களிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

10 எங்களுக்குள் வம்புகள், வழக்குகள் வந்தால் அதில் அரசாங்கமோ வேறு வெளியாட்களோ தலையிடக் கூடாது.

11 நாங்கள் லிவிங்க் டுகெதர் என்று சொல்லப்படும் முறையில் வாழ்வதால் அரசாங்கத்தின் எந்த தனிப்பட்ட திருமண சட்டமும் எங்கள் வாழ்வில் தலையிடக் கூடாது.

12 நமது கழகத்தில் போலிகளுக்கு இடமில்லை. அதே போல் ஏமாற்றுபவர்கள, திருடுபவர்கள், குற்றம் புரிந்து ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் இவர்களுக்கெல்லாம் இடமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப் படும் வரை நமது கழகத்திலிருந்து நீக்கப் படுவார்கள்.

13 நம் குழந்தைகள் அத்தனை பேரையும் படிக்க வைத்துப் பட்டதாரிகளாக்க வேண்டும். இதற்கு அரசு முழு ஆதவு தர வேண்டும். அப்படிப் படித்தவர்கள் நமது கழகத்தின் முன்னேற்றத்துக்குத் தான் பாடுபடவேண்டுமே தவிர சொந்த முன்னேற்றத்துக்குப் பாடுபடக்கூடாது.

14 ஒரு நாளுக்கு மேற்பட்ட பழைய சாப்பாட்டைப் போடுபவர்களுக்கு குறைந்த பட்சம் அபராதம் ருபாய் நூறு விதிக்கப்படவேண்டும்.
ஊசிப் போன சமையல், கெட்டுப் போன சாப்பாடு போடுபவர்களுக்கு குறைந்த பட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் அல்லது அவர்களை நம் கண் முன்னால் அவர்கள் போடும் சாப்பாட்டைச் சாப்பிடச் சொல்ல வேண்டும்.
பிச்சையிடுவோரின் சாப்பாட்டை சாப்பிட்டு வாந்தி பேதி வயிற்றுவலி மற்றும் கோளாறுகள் ஏற்பட்டால் அதற்கான தண்டனையைத் தவிர நஷ்ட ஈடும் தரவேண்டும். இந்தப் பணத்திலிருந்து வைத்தியத்துக்கான செலவு போக மீதத் தொகை தபிமுக வுக்குப் போய்ச் சேரும்.

15 இதையெல்லாம் கண்காணிக்க பிச்சைக்காரர்கள் கண்காணிப்புக் கமிஷன் நியமிக்கப்படவேண்டும்.

16 நாங்கள் பிச்சை எடுக்க நவீன கையடக்க கம்ப்யூட்டர் போன்ற கருவிகள் வாங்க அரசாங்கம் பேங்குகள் முலமாக திருப்பித்தர அவசியமற்ற கடன் அளிக்க வேண்டும்.

17 நாங்கள் வீதிவீதியாகச் சென்று பிச்சை எடுக்கும்போது யார் வீட்டு சமையல் நன்றாக இருக்குமோ அவர்களுக்கு எங்கள் கழகத்தின் சார்பாக தெருவின் சிறந்த சமையல் விருது வழங்கப் படும். அதே போல் ஒவ்வொரு ஊரின் சிறந்த சமையல் விருதும், தமிழ் நாட்டின் தலை சிறந்த விருதும் வழங்கப்படும். அதே போல் மோசமான சமையலுக்குக் கண்டன விருது வழங்கப்படும்.

18. எங்களில் 60 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு வாழ்வூதியம் அவர்கள் சாகும் வரை வழங்கப் படவேண்டும்.

19. எங்களில் யாராவது இறந்தால் ஈமச் செலவுகளுக்கான செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

20. எங்களிடம் உள்ள தனித் திறமையை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

21. உணவுப் பாதுகாப்பு சட்டம் (food security Bill) மாதிரி பிச்சைக்காரர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப் படவேண்டும்.

22. தற்போது பிச்சைக்காரர்களுக்கு எதிராக உள்ள சட்டங்கள் அகற்றப்பட வேண்டும்.

23. அகில உலக பிச்சைக்காரர்கள் சமஷ்டியில் நாம் நம் கழகத்தை இணைத்துக் கொள்வோம்.

24. நம்மில் பகல்பிச்சை, ராப்பிச்சை என்று ட்யூடி போட்டுக் கொண்டு வேலை செய்யும்போது தெரு நாய்களினால் ராப்பிச்சைக்காரர்களுக்கு மிகவும் தொந்திரவு ஏற்படுகிறது. எனவே பஞ்சாயத்துக்களிலிருந்து சிட்டி கார்ப்பரேஷன் வரை எல்லா ஏரியாக்களிலும் உள்ள தெரு நாய்களை அப்புறப் படுத்த வேண்டும்.

25. பிச்சை எடுக்கும்போது ஏற்படும் அபாயங்களிலிருந்து அதாவது Occupational hazard என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதிலிருந்து அவர்களைக் காக்க பிச்சைக்காரர்களுக்கென்ற தனிப்பட்ட ஆஸ்பத்திரிகள் அமைக்க வேண்டும். சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இந்த ஆஸ்பத்திரிகளில் பிச்சைக்காரர் அல்லாதவர்களுக்கு இடம் தரக் கூடாது
-----
மேலும் தலைவர் மற்ற தீர்மானங்களையும் தொடர ஆரம்பிக்கும்போது, தங்களுக்கு எதிராகத் தீர்மானம் போடும் இக்கும்பலின் மீது ஆத்திரமடைந்த இந்த அளவிற்குப் பெரும் பிச்சைக்காரர்கள் கூட்டத்தைக் கண்டிராத ஊர்த்தெரு நாய்கள் அத்தனையும் தங்களைக் காப்பாற்ற ப்ளூ க்ராஸ் (blue cross) இருக்கிறது என்கிற தைரியத்தில் போட்டி பொறாமையுடன் அங்கே வந்து லொள் லொள் என்று கூட்டத்திற்குள் பாய்ந்து குரைக்க ஆரம்பிக்கவே கால், அரை, முக்கால், முழுத்தூக்கம் என்று வெவ்வேறு அளவு தூக்கத்திலிருந்த அனைத்துப் பிச்சைக்காரர்களும் எழுந்து ஓட ஆரம்பிக்க, கூட்டத் தலைவர் 'நம் கூட்டத்தைக் கலைக்க வேண்டுமென்றே நம் எதிரிகள் செய்த சதி இது, அவர்களுடைய சதியை முறியடிப்போம் . 'அமைதி அமைதி' என்று சொல்லச்சொல்ல கேளாமல் கூட்டம் இனிதே கலைந்து அனைவரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கால் தெறிக்க, தலை தெறிக்க பல்வேறு திசைகளிலும் ஓடலாயினர்.
************************************

எழுதியவர் : ரா குருசுவாமி ( ராகு) (18-Jun-20, 2:50 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 59

மேலே