வேணாம், வேணாம், வேணவே வஏணாம் 3 விவசாயி

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.
மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.
அதெல்லாம் அந்தக் காலம்.
இப்படிச் சொல்லிச் சொல்லியே எங்களை எல்லாரும் ஏமாத்தறதுதான் இந்தக் காலம்.


இப்ப எல்லாம் உழுதுண்டு வாழ்வாரே வீழ்வார் தான் உண்மை. ஆமாங்க. விவசாயம் செஞ்சி பொழைக்கிறது ஒரு பொழைப்பா?சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து. ஆனா இன்னிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் கல்லுடைத்துன்னு தான் சொல்லணும். ஆமாம். நாங்க கல் உடைக்க, ரோடு போட இந்த மாதிரி வேலைகளுக்குப் போனாத்தான் எங்க பொழைப்பே நடக்கும் போல இருக்கு.

ஊருலெ வெலைவாசியெல்லாம் எக்குத்தப்பா ஏறி எங்கேயோ உச்சாணியிலே நிக்குது. ஆனா எங்க பொழைப்பு நாறிப் போகுது. எங்க விவசாயத்துக்கு ஏத்த கூலியும் கெடைக்கிறதில்லை. நாங்க விளைவிக்கிற பொருளுக்கு ஏத்த வெலையும் கெடைக்கிறதில்லை.
போதாததுக்கு காவேரிப் பாசனம் பண்ணுற பூமியா இருந்தாக்கூட காவேரியை நம்பி விவசாயம் செய்ய முடியல்லே. ஆண்டவன் தயவு இருக்கிற வரையில்தான் காவேரியை நம்ப முடியும். ஆண்டவன் தயவு இல்லேன்னா ஆள்றவங்க தயவு தேவைப் படுது. அத்தோடே கர்நாடகா தயவு, சென்ட்ரல் கவர்மெண்டு தயவு எல்லாம் வேண்டி இருக்கு.
வானம் பாத்த பூமியா இருந்தா கேக்கவே வேணாம். "மழை சாமி" கண்ணைத் தொறந்தாத்தான் நல்லா இருக்கும் நம்ம பூமி.
நம்ம நிலங்களெல்லாம் வெச்சாக்குடுமி செறைச்சா மொட்டைங்கற கதையா இருக்கு. ஒண்ணே வெள்ளம், இல்லே வறட்சி. இப்படி ஆயிட்டுது நம்ம பொழைப்பு.


ஏதோ சொல்லுவாங்களே இல்லாத கறுப்புப் பூனையை இருட்டுலே தேடுற குருடன் மாதிரி ஆயிட்டுது எங்க கதை. அரசாங்கம் எவ்வளவோ செய்யுது. இல்லேன்னு சொல்லல்லே. ஆனா அதெல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொறி கதைஆயிட்டுது. போதும் போதாததுக்கு நிலத்தடி நீரை எடுத்து விவசாயம் பண்ணலாம்னா நிலத்தடி நீரோ எங்கேயோ பாதாளத்துக்குப் போயிட்டுது. வானம் பாத்த பூமியா ஆயிட்டுது நம்ம ஊர். ஏழைங்க நாங்க எல்லாம் கடன் வாங்கித்தான் விவசாயம் பண்ண வேண்டியிருக்கு.

வெள்ளமும் வறட்சியும் மாத்தி மாத்தி வந்துக்கிட்டு இருந்தா நாங்க வாங்கின கடனை அடைக்கமுடியாம தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை. எங்களைப் பயன்படுத்தி, எங்க பேரைச்சொல்லி கொள்ளை லாபம் அடிக்கிறவங்க பெரிய பண்ணைக்காரங்கதான்.
சில சமயம் அரசாங்கம் போடற திட்டத்துக்கு எங்ககிட்டே இருக்கிற கொஞ்ச நஞ்ச நிலத்தையும் எடுத்துக்குது.

செலவில்லாம ஆத்துலேயோ, குளத்துலேயோ, கிணத்துலேயோ விழுந்து சாகலாம்னா எதுலேயும் தண்ணி இல்லை. விஷம் வாங்கக்கூட காசு இல்லே.
சேத்துலே கால் வெக்காம சோத்துலே கை வெக்க முடியாதுன்னு ஆயிட்டுது எங்க பொழப்பு.
இந்த வேலை செய்யறவங்க ஒரு நல்ல உடுத்திக்கக் கூட முடியாது. நாகரிகமா இருக்கமுடியாது. பேசும்போது விவசாயிதான் நாட்டின் உயிர் நாடின்னு மீட்டிங்குலே பேசறவங்க எங்களை எட்ட வச்சோ, இல்லே எட்டி உதைச்சோத்தான் பேசறாங்க.
நீங்க கூட இன்னிக்குப் பேப்பர்லே பாத்திருப்பீங்க. ராகுல் காந்தி மோடியைப் பாத்து " எல்லாரையும் கட்டிப் பிடிச்சிக்கிறீங்களே. இந்த மாதிரி விவசாயியைப் போய் கட்டிப் பிடிச்சிக்கங்களேன் பாக்கலாம்" னு கேலி பண்ற அளவுக்கு நாங்க கேவலமாப் போயிட்டோம்.
அப்படி இருக்கும்போது ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்னு ஆசைப் படற நம்ம குழந்தைங்களுக்கு இந்த சேத்துலே கால் வெக்கற விவகாரமே வேண்டாம்.இனிமே எங்க பசங்களை யாரையும் விவசாயம் பக்கமே வராம ஏதாவது பெரிய படிப்பா படிச்சி மாசாமாசம் சம்பளம் வாங்கற வேலையாப் பாத்துப் போகச் சொல்லப்போறேன்.
வேணாங்க இந்த வரட்டு வேலை.
இது என்னோட போகட்டும். எங்க குழந்தைங்களுக்கு
வேணாம். வேணாம். விவசாயம் வேணவே வேணாம்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (22-Jun-20, 1:13 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 53

சிறந்த நகைச்சுவைகள்

மேலே