கொன்ற பழி போமோ

திருச்செங்கோடு ஒரு சிவத்தலம்; அங்குச் சென்று சிவபெருமானைத் தொழுகிறார் காளமேகம், "நாட்டிலிருந்து ஓடிவந்து, இப்படி நீர் காட்டிலே தங்கியிருந்தாலும். நீர் முன்னர் செய்த கொலைப் பாவங்கள் உம்மை விட்டுப் போய்விடுமோ?” என்று கேட்கிறார். காலனை உதைத்தது; காமனை எரித்தது; சிறுத்தொண்டனிட்ட அமுதினை உண்டது ஆகிய திருவிளையாடல்களை எடுத்துக் காட்டித் துதிக்கிறார்.

நேரிசை வெண்பா

காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்ட(ர்)தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர்திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால். 140

- கவி காளமேகம்

பொருளுரை:

“ஒழுக்க முடையவர் போல நாட்டினிடத்தே பல தலங்களிலும் கோயில் கொண்டிருந்த தலைவரே! நீர் திருசெங்காட்டிலே வந்து தங்கியிருந்தவிடத்தும் எமனையும், மன்மதனையும், பக்திக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த சிறுத்தொண்டர் பெற்றெடுத்த சீராளன் என்ற சிறுவனையும் கொலை செய்ததனால் ஏற்பட்ட பழிச் சொற்கள் மறைந்து போய்விடுமோ?

இத் தலத்திலே வீற்றிருக்கும் சுவாமியின் பெயர் உத்திராபதி ஈசுவரர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-20, 10:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே