ஆசிரியருக்கு
பத்து மாதத்தில், ஒரு குழந்தை பிரசவிக்கிறாள் தாய்..
நீயோ ஒரு வகுப்பறையையே பிரசவிக்கிறாய்..
பெற்றோரின் கை விடுத்து உந்தன் கை பிடித்து,
அரை மனதுடன் வகுப்பறை நோக்கி நடந்த தருணம்..
கல்விப் பயணம் இனிதே தொடக்கம்..
அன்றிலிருந்து எங்கள் ஒவ்வோர் அசைவிலும் நீ ...
குடும்பம் தாண்டிய குழந்தையின்
முதல் சமூக உறவு நீ,
முதல் பாராட்டு, முதல் அவமானம்;
முதல் பரிசு, முதல் தோல்வி;
அனைத்திலும் ஏதோ ஒருவிதத்தில் நீ..
சில நேரங்களில் மழலை மனதின்
முதல் காதலும் நீ..
அலைபாயும் மனதை
அடக்கிவிடும் உன் அதட்டல்,
கவனச் சிதறலை பறந்துவந்து முறியடிக்கும் சுண்ணக்கோல்,
கொடுங்கோல் மன்னன் போல்
கையில் பிரம்போடு நீ வந்தால்
வகுப்பறைக்குள் நிலநடுக்கம்
வந்ததுபோல் குலைநடுக்கம்
தாமத வருகைக்கு சைக்கிள் பஞ்சர்,
பள்ளி வராமைக்கு பாட்டியின் சாவு,
பாடம் எழுதாமைக்கு பவர் கட்,
வகுப்புகள் மாறலாம்; காரணங்கள் மாறியதில்லை..
ஆசிரியர் மாறலாம்; அடிகள் மாறியதில்லை..
எத்தனை நாள் நின்றிருப்போம்,
தவறு செய்ததால் வகுப்புக்கு
வெளியில் நானும்
தண்டனை பெறாமலே வகுப்புக்கு உள்ளே நீயும்..
எத்தனை பட்டங்கள் பெற்றிருப்போம்,
உன்னிடம் பயின்றதால் பள்ளிக்கு வெளியில் நானும்
எம்மை பயிற்றுவித்ததால் பள்ளிக்கு உள்ளே நீயும்..
குறும்புகள் ரசித்து,
குழப்பங்கள் தீர்த்து
தவறுகள் திருத்தி
திறமைகள் உணர்த்தி
வெற்றிக்கு விழா எடுத்து
தோல்விக்கு தோள் கொடுத்து
வருடங்கள் பன்னிரண்டு
வகுப்பறைக்குள் சுமந்து
வாழ்த்தி வழியனுப்பும்
வாடகைத் தாயோ நீ..
இப்படிக்கு,
தங்கள் கீழ்ப்படிதலுள்ள..
மாணவர்கள்.