புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 18---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௮
171. உனக்கு மட்டுமே தெரியும் ரகசியத்தை
உலகத்திற்கே காட்டுகிறது உன் அலைபேசி.
172. சட்டையை மட்டும் சலவை செய்யாதே
சட்டைக்குப் பின்னால் உள்ள மனதையும் சலவை செய்.
173. நீ வெறுப்பவரின் செயல்கள் நல்லதோ?... கெட்டதோ?...
எப்போதும் உனக்குக் கோபத்தையே ஏற்படுத்தும்.
174. ஒருவர் மேல் தொடர்ந்து காட்டுகின்ற கோபம்
அவர் உன்னை வெறுப்பதற்கு வழிவகுக்கும்.
175. உனக்கு உன்மேல் உள்ள கோபம்
உன்னைச் சார்ந்தவருக்கு யோசிக்காமல் துன்பத்தைத் தந்துவிடும்.
176. காரணமின்றி வருகின்ற கோபம்
மனதில் வெறுப்பு நுழைவதற்கான ஆரம்பம்.
177. ஒன்றைக் கடந்து முன்னேறி வந்தவன்
அதைக் கடப்பது எளிது என்று எளிதாகச் சொல்லிடுவான்.
178. உனக்கான நீதி கேட்காமல் கிடைத்து விட்டால்
அங்கு அறமே வந்து ஆட்சி செய்கிறது என்று அர்த்தம்.
179. உரிமைகளை எப்படி முன் வந்து கேட்கின்றாயோ?...
அதைப்போல் கடமைகளையும் செய்து பழகு.
180. இயற்கைக்கு எப்போதும் நீ ஒரு ஊழியன்
உன் கடமையைச் சரியாகச் செய்து விடு
அதற்கான பலனை இயற்கை நிச்சயம் தந்துவிடும்.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..