மற்றுமொரு நிர்பயா

இன்றைய செய்திகளில்
மற்றுமொரு நிர்பயா
என்றுதான் வரும்
"அச்சே தின்" எங்களுக்கு

இந்த நிர்பயாக்களின்
பெயர்கள் மாறலாம்
ஊர்கள் மாறலாம்
வலியோ மாறுவதுமில்லை
வழியோ தெரியவுமில்லை

தலை நிமிர்ந்து நடக்காமல்
வாய் திறந்து பேசாமல்
பிடித்த உடை அணியாமல்
இரவில் வெளியே போகாமல்
அந்நியனிடம் பேசாமல்
அண்டை வீட்டாரிடம் பழகாமல்
மாமன்,அண்ணனையும் நம்பாமல்
எந்நேரமும் விழித்திருந்து
உயிரைத் தொலைத்து
உடலைக் காத்துக்கொள்ள
தயார்தான் நாங்கள்
கொஞ்சம் பொறுங்கள்
பெண்ணாகும் வரையில்
இவையெல்லாம் புரிவதற்குள்
புதருக்குள் புதைத்தால்
என்னதான் செய்ய?
பத்துமாத சிசுவுக்கும்
பல்லில்லா கிழவிக்கும்
பாதிகாப்பில்லா தேசமிது
எங்கு செல்ல அகதிகளாய்?

சிறு வேண்டுகோள் உங்களிடம்
பெண் இனத்திடமிருந்து
எங்கள் நடை, உடை மாற்றத்தில்
வரவில்லை எந்த மாற்றமும்
ஏமாற்றத்தைத் தவிர
மாற்றி பாருங்கள்
ஒழுங்கு விதிகளை
பெண்ணிடமிருந்து ஆணுக்கு

பெண்ணைப் பாதுகாத்து
அழித்தது போதும்
அறிவுரையை வீட்டின்
ஆண்மகனிடம் ஆரம்பியுங்கள்

உரக்கச் சொல்லுங்கள்
அவளும் ஓரினமென்று
ஊட்டி வளருங்கள்
அவளும் உன்னைப்போலென்று
அடித்துச் சொல்லுங்கள்
சதையும் முகமும் மட்டுமன்றி
உயிரும் உணர்வும் உண்டென்று
இம்முயற்சியும் தோல்வியடைந்தால்
வேறொன்றும் கேட்கவில்லை - உங்களிடம்
சட்டப் பூர்வமாக்குங்கள்
பெண்சிசுக் கொலையை
கழுத்தறுந்து துடிதுடித்து சாவதற்கு
கள்ளிப்பாலே மேல் எங்களுக்கு

எழுதியவர் : லக்கி (6-Jul-20, 11:26 am)
பார்வை : 74

மேலே