கண்ணம்மா
மணி 7 ஆகப் போகிறது எந்திரிங்க...
டெய்லி நீங்க லேட்டா கிளம்புவதனால் நானும் லேட்டா போயிட்டு திட்டு வாங்க வேண்டி இருக்கு ..சீக்கிரம் எந்திரிங்க என்ற சத்தம் கேட்க்க கட்டிலில் தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்தி படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் மோகன் அட ஒரு அஞ்சு நிமிஷம் ப்ளீஸ் என கெஞ்சிக்கொண்டே புரண்டு படுக்கிறார்...
ஒருவித எரிச்சலுடன் குழலி கையில் காபி கொண்டு வந்து அவர் படுக்கையின் பக்கத்தில் உள்ள மேசை மீது வைத்துவிட்டு நான் குளிக்கப் போகிறேன் சீக்கிரமாக எழுந்து காபி குடித்து விட்டு கிளம்புவதற்கு பாருங்க என சொல்லி விட்டு குளிக்க செல்கிறாள்..
சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழும் மோகன் தன் படுக்கையின் முன் சுவற்றில் மாலை போட்டு மாட்டி வைத்துள்ள தன் மனைவியின் போட்டோவிற்கு ஒரு குட் மார்னிங் வைத்து விட்டு காபியை ருசி பார்க்கிறார்...
சிறிது நேரத்தில் குளித்து விட்டு பள்ளி சீருடையில் வெளியே வரும் குழலி தன் அப்பாவை பார்த்து நீ டெய்லி லேட்டா எந்திருச்சு கிளம்புவதுனாள நானும் டியூஷனுக்கு லேட்டா போயி டீச்சர் கிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கு...
..உன்னோடு தினமும் இதே ரோதனையாக இருக்கு இனி இதுபோல நீ லேட்டா எழுந்திச்சா நான் சாப்பிடாமல் ஆட்டோ பிடித்து கிளம்பிவிடுவேன் பார்த்துக்கோ.....என புலம்பிக்கொண்டே ஈரம் உடன் இருக்கும் தன் கூந்தலை கையிலுள்ள துண்டால் அள்ளி முடிந்து கொண்டு அடுப்பங்கரைக்குள் செல்கிறாள்.. என்ன பேசுவது என தெரியாமல் மோகன் வழிந்து கொண்டே sorryடா குட்டிமா அஞ்சு நிமிஷத்துல குளிச்சிட்டு வந்து ரெடியாயிடுவேன் என சமாளித்து விட்டு செல்கிறார் ..
அடுப்பங்கரைகுள் சென்று இறந்துபோன தன் அம்மாவுடன் ...போயும் போயும் இந்த சோம்பேரி தான் உனக்கு கிடைச்சாரா என பேசிக்கொண்டு தோசை ஊற்ற ஆரம்பிக்கிறாள்..
மடமட வென குளித்துவிட்டு கிளம்பி நேராக அடுப்பங்கரைக்குள் வருகிறார் மோகன் தன் மகள் சுட்டு வைத்த பௌர்ணமி நிலவு போல உள்ள தோசையை எடுத்து குழலிக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிடுகிறார் தன் அப்பாவிடம் ஆ வாங்கிக் கொண்டே பள்ளிக்கு கிளம்புகிறாள் குழலி..
வழக்கம்போல் மோகன் முதலில் வெளியில் சென்று வேகமாக தனது பைக்கை எடுத்து ஹெல்மெட் மாட்டிக் கொண்டு தன் மகள் வரவுக்காக காத்து இருக்கிறார்
அரக்கப்பரக்க எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியில் வரும் குழலிக்கு பக்கத்து வீட்டில் நிற்கும் ஸ்கூட்டி இவளை என்னைப் பார் பார் என கூப்பிடுவது போல் ஈர்க்கின்றது.. அதை ஒரு ஏக்கத்துடன் பார்த்துவிட்டு... தன் அப்பாவுடன் பைக்கில் ஏறுவதற்கு முன் மெல்ல அவர் காதில் ரகசியம் சொல்வதுபோல்... என் செல்லம்ல என் கண்ணுல எனக்கும் அந்த ஸ்கூட்டி மாதிரி ஒரு வண்டி வாங்கி கொடுத்தா உன் காலை நேர தூக்கத்தை கெடுக்காமல் நான் நிம்மதியா டைமுக்கு ஸ்கூலுக்கு போகவேன்ல என கெஞ்சுகிறாள்...
மோகனும் பதிலுக்கு என் அம்மு குட்டில என் செல்ல குட்டில.. ஒழுங்கா ஜம்முனு பைக்கில் ஏறி உட்காரவியாம்.. அப்பா உன்னை அலுங்காமல் குலுங்காமல் பத்திரமா கொண்டு போய் விடுவேனாம் என சொல்ல.... குழலி ஒரு வித சலிப்புடன் நீ எல்லாம் திருந்தவே மாட்ட கிளம்பு கிளம்பு என சொல்ல மோகனின் வண்டி அங்கிருந்து நகர்கிறது...
டியூஷன் சென்டர் முன் வந்து நின்றதும் குழலியை இறக்கிவிட்டு அவள் அணிந்திருந்த ஹெல்மெட் வாங்கி தன் பைக்கில் வைத்துவிட்டு தன் ஹெல்மட்டை மோகன் எடுக்க குழலி அருகில் வந்து செல்லமாக மோகனுக்கு நெற்றியில் முத்தமிட்டு டியூசன் சென்டரின் உள் செல்கிறாள்... அவள் உருவம் மறையும்வரை பாசத்தோடு பார்த்து இருந்து தன் மகளின் உருவம் மறைந்த பின் அங்கிருந்து கிளம்புகிறார் மோகன்...
அலுவலகம் செல்லும்முன் மோகன் வழக்கமாக தன் அலுவலகத்தின் அருகிலுள்ள ஒரு கேண்டினுக்கு சென்று காஃபி குடித்துவிட்டு அங்குள்ள பேப்பரை சிறிது நேரம் புரட்டி விட்டு செல்வது வழக்கம்... அவ்வப்பொழுது அவருடன் அவருக்கு கீழ் பணிபுரியும் ஜீவனும் அந்த இடத்தில் சந்தித்து உரையாடி பின் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வதும் நடக்கும்..
அன்றும் அது போல் இருவரும் சந்தித்து ஏதோ இருநாட்டு அமைச்சர்கள் சந்தித்து கொண்டதுபோல் நாட்டுப் பிரச்சினை ஊர் பிரச்சினை எல்லாம் பேசி அதை தீர்த்து விட்ட தாகவும் ஒரு பெருமிதத்தில் இருவரும் அலுவலகம் சென்றனர்.. நேரம் மடமட என ஓடியது மோகன் நிமிர்ந்து பார்க்கும் பொழுது நேரம் மாலை 5 எனக் காட்டியது சரி இனி இருந்தால் குழலி இடம் அடி தான் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டு அலுவலகம் விட்டு கிளம்பி வேகமாக பள்ளி நோக்கி தன் வண்டியை இயக்கினார் மோகன்.
வாசலில் காத்துக்கொண்டிருந்த குழலியை கூட்டிக்கொண்டு வண்டி அவர் இல்லம் நோக்கி நகர்ந்தது போகும் வழியில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்ற சாமான்கள் வாங்கிக்கொண்டு வண்டி சென்றது சுமார் 6மணி 30 நிமிடங்கள் என மோகனின் வீட்டு கடிகாரம் மணிக்காட்ட மோகனும் குழலியும் வீட்டிற்குள் நுழைந்தனர், உள்ளே நுழையும் பொழுதே மோகன் ஐயோ என்ன கொடும சாமி இந்த ஊர்ல வண்டி ஓட்டுவது எவ்வளவு ட்ராபிக் எவ்வளவு புழுதி என புலம்பிக்கொண்டே தனது லேப்டாப் பையை பக்கத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு டிரஸ் கூட மாற்றாமல் டிவியின் முன் உள்ள
sofa இருக்கையில் அமர்ந்தார்... குழலி,
என் சமத்துல போய் டிரஸ் மாத்திட்டு பிரஷ் ஆயிட்டுவா சூடா காபி எடுத்துட்டு வரேன் என சொல்லி அவள் அறைக்குள் சென்றாள். அவள் சொல்வதை சிறிதும் கண்டுகொள்ளாமல் மோகன் டிவியை ஆன் செய்து தன் கவனத்தை அதனுள் செலுத்தினார்... ஸ்கூல் யூனிபார்மில் இருந்து வீட்டு உடைக்கு மாறி சோபாவில் சோம்பலாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் மோகனை பிடித்து எழுப்பி ட்ரெஸ் மாற்றச் சொல்லி அனுப்பிவிட்டு காபி போட சென்றாள் குழலி.. சிறிது நேரத்தில் இருவரும் அதே சோபாவில் இணைந்தனர் குழலி கையில் இருந்த 2 காஃபி கோப்பைகளில் ஒன்றை மோகனிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை தன் கையில் பிடித்துக்கொண்டே சோபாவின் ஒரு முனையில் உட்கார்ந்து கொண்டு தன் இரு கால்களையும் மோகனின் மடியில் வைக்க மோகன் ஒரு கையால் தன் மகளின் கால்களை பிடித்து விட்டுக்கொண்டே இருவரும் அன்று நடந்த விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர தொடங்கினர் ஒரு பக்கம் டிவியின் சத்தமும் மறுபக்கம் இவர்களின் பேச்சும் சிரிப்பும் வீடே கலகலப்பாக ஆகியது இவ்வாறாக சென்று கொண்டிருக்க 7 மணியளவில் வழக்கமாக இவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரும் சீதாப்பாட்டி வந்தார்.. சீதாப்பாட்டி இவர்களின் வீட்டு வேலையாள் மட்டுமல்ல அவரும் இவர் குடும்பத்தில் ஓர் அங்கம் போல இவர்கள் இருவருக்கும் நல்லது கெட்டது சொல்லும் ஒரு பாட்டி .