வரப்பிரசாதம்

ரொம்ப நாளைக்குப் பிறகு, மாலா இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். தன் அன்புக்குப் பாத்திரமான பாயம்மாவைப் பார்ப்பதற்காக, ஆனால் பாயம்மாவின் வீடோ பூட்டி இருந்தது. என்னடா!.....இவ்வளவு தூரம் வந்தும், பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு சுற்றும், முற்றும் பார்த்தாள். அப்போது, பக்கத்து வீட்டு லலிதா அந்தப்பக்கம் வந்தாள். அவளிடம் பாயம்மாவைப் பற்றி விசாரித்தபோது தான், விவரம் தெரிந்தது. துக்கம் தாங்க முடியவில்லை...... 5 வருடங்களுக்கு முன்னாடியே, பாயம்மா இறந்து விட்டதாக லலிதா சொன்னாள். முதன் முதல் பாயம்மாவை பார்த்த அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். மாலாவும், அவள் குடும்பமும் அந்த பகுதிக்கு குடி வந்து, ஒரு மாதம் கூட ஆகி இருக்காது, வழக்கம் போல காலை 8.30 மணிக்கு கணவர் வேலைக்குப் போய் விட, மாலா பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போவது வழக்கம். அன்றும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு நடக்கலானாள். வழியில் இருக்கும் நாட்டார்க் கடாயில் ஏதாவது பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுப்பதற்க்காக அங்கே பர்பி வாங்கி பிள்ளைகளின் கையில் ஆளுக்கொன்றாக கொடுத்தாள். அப்போது, பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது, மாலாவின் மகளின் கையில் இருந்த பர்பியை தரும்படி 50 வயது மதிக்கத்தக்க ஒரு முஸ்லீம் பெண்மணி நின்றுகொண்டிருந்தார். மாலாவின் மகளோ, கொஞ்சமும் தடுமாறாமல் தன் கையில் இருந்த பர்பியை அந்த பாயம்மாவிடம் கொடுத்தாள். பாயம்மாவுக்கும் மாலாவுக்குமான தொடர்பு, அன்று தான் ஆரம்பமானது. அவளும் சந்தோசமாக மாலாவின் வீட்டுக்கு வருவதும், பிள்ளைகளுடன் பழகுவதுமாக அன்பாகவே இருந்தாள். பாயம்மாவின் காலில் எப்போதுமே நல்ல அடர்த்தியான கொலுசு இருக்கும். அந்த கொலுசின் மேல் மாலாவின் மகளுக்கோ கொள்ளை ஆசை....அதை தொட்டு தொட்டுப் பார்த்து சிரிப்பாள். அன்றும் அப்படிதான் மாலாவின் மகள், பாயம்மாவின் கொலுசைத் தொட்டுப் பார்த்தாள். இதைப் பார்த்த பாயம்மா, கொஞ்சமும் தயக்கமில்லாமல் தன் காலிலிருந்த கொலுசை மாலாவின் மகளின் காலில் ரெண்டு தடவையாகச் சுற்றி அந்த சின்ன காலுக்கு ஏற்றாற்போல் மாட்டிவிட்டாள். மாலாவின் மகளும் அதை தொட்டு பார்த்து பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டாள். அன்று பாயம்மா வீட்டுக்குப் போகும்போது மாலாவோ பதட்டத்தோடு, நில்லுங்க பாயம்மா...இந்தகொலுசை கொண்டு போங்க பாயம்மா என்றாள் கெஞ்சியபடியே...அதற்கு பாயம்மாவோ, அட சும்மா இரு மாலா....குழந்தை ஆசைபடுதேன்னு போட்டுவிட்டுருக்கேன்..என்று மாலாவை அதட்டிவிட்டு சென்றுவிட்டாள். பாயம்மா போனபின்பு, மாலா கொலுசுகளை மகளின் கால்களில் இருந்து கழற்றி வைத்து விட்டாள். என்ன தான் ஏழ்மையில் வாழ்ந்தாலும் பிறரின் பொருள்களுக்கு ஆசைப் படக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். பிள்ளைகளையும் அது போல வளர்க்க வேண்டுமென்பதே அவளின் லட்சியமாக இருந்தது...ஆனாலும், பாயம்மாவின் தாராளமான மனதை நினைத்து மாலா பெருமிதப்பட்டுக் கொண்டாள். எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும் ஒரு பெருமையே இல்லாத பக்குவமான மனசு அவங்களுக்கு எப்பவுமே இருந்தது. இரண்டு நாட்கள் பார்த்தாள், பாயம்மா வீட்டுப் பக்கம் வரவேயில்லை. அதனால் மாலாவே கடைக்குப்போகும்போது, கொலுசைக்கொண்டு பொய் பாயம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தாள். இப்படியாக, மாலா 4 வருடங்கள் அந்த பகுதியிலேயே குடி இருந்தாள். பின்பு, அவர்கள் சொந்த ஊருக்குப் போய் விட்டார்கள். இந்த ஊருக்கு வரும் போதெல்லாம், மாலா பிள்ளைகளோடும், கணவரோடும் பாயம்மாவைப் போய் பார்ப்பது வழக்கம், பிறகு ஒரு ஏழு வருடமாக அவளால் இங்கு வர முடியவில்லை. ரொம்ப காலத்திற்குப் பிறகு இன்று தான் அவள் இங்கு வந்திருக்கிறாள். பாயம்மாவை எப்போது பார்ப்பேன், எப்போது பேசுவேன் என்று எதிர்பார்த்து வந்தவளுக்கு பாயம்மாவைப் பற்றி அவள் இன்று கேள்விப்பட்ட செய்தி இடி போல அவள் தலையில் விழுந்தது. வெயில், மழை பார்ப்பதில்லை....வீட்டில் என்ன விஷேஷம் நடந்தாலும், கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு ஒரு தூக்கு காரியரில் என்ன சாப்பாடாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து விடுவாள். தன் கையாலே பிள்ளைகளுக்கு பரிமாறி உண்ண வைத்து அழகு பார்ப்பாள். தேடி போனாலும் இந்த மாதிரி ஒரு உறவு கிடைக்காது, அது மாலா குடும்பத்துக்கு கிடைத்தது, உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் தான். இப்போது, மாலாவுக்கு ஒரு பாடல் நியாபகத்துக்கு வந்தது..கண் போன போக்கிலே கால்போகலாமா...என்ற பாடல்...இப்பாடலின் இறுதி வரி இப்படியாக அமையும், “ இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடல்....இப்பாடலுக்கு ஏற்ப தான் இருந்தது, பாயம்மாவின் குணாதிசயங்கள். யாரையும் சலித்ததில்லை, எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் தானே சமாளித்து சமரசமாக்கி விடும், நல்லெண்ணம் கொண்ட சாமர்த்தியசாலி, பொறுமை, நிதானம் கொண்டவர்...இன்று அவர் இல்லை, பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு வீடு திரும்பினாள் மாலா.....

முற்றும்..

எழுதியவர் : Ranjeni K (6-Jul-20, 3:37 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 211

மேலே