திருநாமம் எது

காஞ்சி வரதராசப் பெருமானைப் போற்றி வருபவர் ஒருவர், காளமேகத்திடத்தே வந்து சிவபெருமானைக் குறை கூறியும் ஒருநாள் பேசிவிடுகிறார். அதனால், சினங்கொண்ட கவி காளமேகம் வரதராசப் பெருமானைக் குறிப்பிட்டு இப்படிப் பாடுகிறார்.

நேரிசை வெண்பா

எருதாய்ச் சுமந்துபோய் ஏத்தி(க்)கன சாத்திப்
பொருதாழி வாங்கினதும் பொய்யோ? - பெருமாள்
திருநாம மென்றுநெற்றி தீட்டியதும் கச்சி
ஒருமா விலக்கமல்ல வோ? 154

- கவி காளமேகம்

"திரிபுர தகன காலத்திலே எருதாக உருக்கொண்டு பெருமானைச் சுமந்து போனான்; சிவபெருமானைப் போற்றித் தன் கண்மலரையே திருவடிக்குக் காணிக்கைப் பொருளாக்கி அருச்சித்துப் போரிடுதற்குரிய சக்கரப் படையினையும் அந்நாளிலே வாங்கினான்;

அத்திருமாலின் இச்செயல் எல்லாம் பொய்யோ? மேலும், உங்கள் பெருமாள் திருநாமம் என்று தன் நெற்றியிலே சாத்திக் கொண்டிருப்பது தான் என்ன? காஞ்சிபுரத்திலே ஒப்பற்ற மாவின் அடியிலே இருக்கும் சிவபெருமானைக் குறிக்கொண்டு விளங்கும், அவனுடைய திருப்பாதங்களே அல்லவோ?

'திருமால் ஒப்பற்ற சிவபக்தன்! என்று கூறுவதன் மூலம் சிவனுடைய சிறப்பைக் காட்டுகின்றார் காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-20, 12:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே