கூந்தல் பராமரிப்பு

”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே “

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற மன்னன் செண்பகப் பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்க இறையனாரே நேரில் வந்து புலவர் தருமி வாயிலாய் கொடுத்தனுப்பியதாக சொல்லப்படும் குறுந்தொகை பாடல் இது.....

அக்காலத்திலிருந்து இந்த நவீன காலம்வரை பெண்களின் கூந்தலை வர்ணித்துப் பாடாத புலவர்களே இல்லை என்று சொல்லலாம் ....
தன் தலைவியின் அழகிய அடர்ந்தக் கூந்தலைக் கண்டு... அது கார்முகில் என்றெண்ணி மயில் தன் தோகையை விரித்து ஆடியதாக... தலைவன் பாடுவதாய் அமைந்துள்ளது ஒரு சங்ககாலப் பாடல்....

பெண்ணின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அழகிய அடர்ந்த ஆரோக்கியமான நீண்டக் கூந்தல்.... நீண்ட கூந்தலுக்கு ஆசைப்படாதப் பெண்களே இருக்க முடியாது.....

இன்றைய காலவோட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் பணிக்குச் செல்வதால் தங்கள் கூந்தலை சரிவர பராமரிக்க இயலாது ...நாகரீக உலகிற்கு ஏற்ப குட்டையாய் விருப்பத்திற்கு ஏற்ப வெட்டிவிடுகிறார்கள்.... அவ்வாறு வெட்டியப்பின் பலர் வருத்தப்பட்டுப் புலம்புவதும் உண்டு....

அடிமனதில் அத்தனை பெண்களுக்கும் நீண்ட கூந்தலின் மேல் உள்ள மோகம் தணிவதில்லை.....
அதற்காக ஆயிரக் கணக்கில் பணத்தை வீண்டிக்கவும் தயங்குவதில்லை.....
கவர்ச்சியான விளம்பரங்களைக் கண்டு புதிது புதிதாய் ஹேர் ஆயில்கள், ஷாம்புகள், சீரம் என்று வாங்கி தேய்த்து நட்டப்பட்டவர்கள்தான் அதிகம்.....
வழுக்கைத் தலையில் முடி முளைக்க வைப்பதாக ஆசை காட்டும் சில பிரபல பார்லர்களில் பணத்தை மொய்யழுதியவர்கள் பலர்.....

ஆனால் எந்த செலவும் இல்லாமல்
நீண்ட அழகிய கூந்தலை பெறுவது எப்படி..?
அதை உதிராமல் ஆரோக்கியமாக வைத்து பராமரிப்பது எப்படி...?
கூந்தல் பொலிவாக தோற்றமளிக்கச் செய்வது எப்படி ...?

இதோ! அதற்கான எளிய முறைகள் .....

1.இரண்டு கையளவு மருதாணி இலை
ஒரு கையளவு செம்பருத்தி இலை
நன்கு தோல் சீவி எடுத்த கற்றாழை
சிறிது சிறிதாக நறுக்கிய நெல்லிக்காய் இரண்டு.... அனைத்தையும் நன்றாக அரைத்து...
அதனுடன்
2முட்டை வெள்ளைக்கரு..
2 டீஸ்பூன் காப்பி டிக்காஷன் ,
2 டீஸ்பூன் டீ டிக்காஷன் கலந்து
2 டீஸ்பூன் தயிர்
இவற்றை நன்றாகக் கலந்து குறைந்தது நான்கு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்...
தலையில் முழுவதும் படும்படி அடுக்கடுக்காய் கூந்தலை பிரித்துத் தேய்க்க வேண்டும்.... கையுறை அணிந்து தேய்ப்பது நலம்....
அப்படியே அது நன்கு காயும்வரையுலும் அல்லது குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஊறவைத்து.... பின்பு கூந்தலை தண்ணீரில் நன்கு அலசிவிட வேண்டும்....

2. 100கிராம் செக்கு தேங்காய் எண்ணெயில் நசுக்கிய ஐந்தாறு சின்ன வெங்காயம் ,தூளாக்கிய அரை டீஸ்பூன வெந்தயம் சேர்த்து நன்கு சூடாக்கி... சிறுது நேரம் ஆறவைத்து... கையில் தொடும் அளவிற்கு சூடு இருக்கும்போது... பஞ்சால் தொட்டு ... முடியை நீக்கி நீக்கி நன்றாக மண்டையில் படும்படி படிப்படியாக தேய்க்க வேண்டும்....
பின்னர் ஸ்ப்ரே பாட்டிலில் மிதமான சூட்டில் நீரை எடுத்து நன்றாக தலையில் படும்படி ஸ்ப்ரே செய்து மசாஜ் செய்து....ஒரு மணி நேரத்திற்குப் பின்பு... நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பால் அலசிவிடலாம்.... இதற்கு நேரமில்லை எனின் வெண்ணெயை உருக்கி ... தொடும் பதத்தில் இருக்கும்போது தலையில் தேய்த்து.... பின்பு ஷாம்பால் அலசலாம்.....

இந்த இரண்டு வழிமுறைகளை மாதத்திற்கு இருமுறை ..... தவறாமல் செய்து வந்தால் கூந்தல் நன்றாக வளரும்... ஆரோக்கியமாக பொலிவுடன் காணப்படும்....

வாய்ப்பு அமைந்தால் தேங்காய் பால் அல்லது காய்க்காத பசும்பாலையும் கூந்தில் தேய்த்து ஊறவைத்து தூய குளிர்ந்த நீரில் அலசலாம்.....

எப்போதும் உங்களுக்கு ஏற்றார் போல ஒரே ஷாம்புவை வாங்கி பயன்படுத்துவது நலம்....

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து ,புரதம், துத்தநாகம் உள்ள உணவுகளை உண்ணவேண்டும்.....
மன அழுத்தம் இல்லாமல் இருக்க தேவையில்லாத சிந்தனையை தவிர்க்க வேண்டும்...

அபரிதமாக முடி உதிர்ந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் ....

எழுதியவர் : வை.அமுதா (13-Jul-20, 1:05 pm)
பார்வை : 20

மேலே