குமரேச சதகம் – தீச் சார்பால் நன்மை இழப்பு - பாடல் 78

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆனைதண் ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்
றங்கே கலக்கியுலவும்
ஆயிரம் பேர்கூடி வீடுகட் டிடிலேதம்
அறைகுறளும் உடனேவரும்

ஏனைநற் பெரியோர்கள் போசனம் செயுமளவில்
ஈக்கிடந் திசைகேடதாம்
இன்பமிகு பசுவிலே கன்றுசென் றூட்டுதற்
கினியகோன் அதுதடுக்கும்

சேனைமன் னவரென்ன கருமநிய மிக்கினும்
சிறியோர்க ளாற்குறைபடும்
சிங்கத்தை யும்பெரிய இடபத்தை யும்பகைமை
செய்ததொரு நரியல்லவோ

மானையும் திகழ்தெய்வ யானையும் தழுவுமணி
மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மான்மகளையும் தெய்வயானையையும் தழுவுகின்ற அழகிய மார்பனே! அருளுடையவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

யானை தண்ணீரில் தன் நிழலைப் பார்க்கும் போது தவளை அங்கே போய்க் கலக்கி (நிழலைப் பார்க்கமுடியாமல்) திரியும். பலர் கூடி வீடு கட்டினால் அதற்குக் குறை சொல்கின்ற கோளனும் அங்கு விரைந்து வருவான்;

மற்றும், நற்குணம் உடைய பெரியோர்கள் அமர்ந்து உணவு கொள்ளும்போது (அவ்வுணவில்) ஈயிறந்து கிடந்து (உணவின்) தூய்மையை ஒழித்துவிடும்; இன்பந்தரும் பசுவினிடத்திலே கன்று சென்று ஊட்ட முடியாமல் (அக்கன்றுக்கு) இனியவனான இடையனே அதனைத் தடுப்பான்;

படையையுடைய அரசர்கள் எத்தொழிலைச் செய்ய ஆணையிடினும் அற்பர்களான வேலைக்காரர்களால் அஃது இழிவடையும்; சிங்கத்திற்கும் பேரெருது ஒன்றிற்கும் பகையை உண்டாக்கியது ஒருசிறு நரிதானே?

விளக்கவுரை:

‘ஆயிரம்பேர்' என்பது எண்ணிக்கை காட்டியதன்று; ‘பலர்' என்பதற்குக் காட்டப்பட்ட மொழி

‘கட்டின வீட்டிற்குக் குற்றஞ் சொல்வோரும், ஆக்கின சோற்றுக்குப் பதஞ்சொல்வோரும் பலர்' என்பது உலக வழக்கு.

‘சிங்கமும் எருதும் நட்பாக இருந்தன. ஒரு நரி சிங்கத்தினிடம் வீண்பழி சொல்லி நட்பைக் கெடுத்து எருதைக் கொன்று விடச் செய்தது' - எனப் பஞ்சதந்திரக் கதை கூறும்.

கருத்து:

தீயவர் சேர்க்கையால் எக்காரியமும் கெடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-20, 1:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே