19 அவளுடன் பேசும்போது
_______========______
(20 ஞாயிறு 2019 காலை 5.47 கு வந்த வாட்ஸப் செய்தி)
நான் எனது மனதளவில் காரணம் இன்றி கொந்தளிக்கிறேன். எனக்கு ஆசைகளும் இறந்த காலங்களும் இல்லை. இதோ இப்போது மனம் எந்த குறிக்கோள் இன்றி இருக்கிறது. இரவு கடுமையாய் இருந்தது. பாலுணர்வின் தேவைகள் எப்போதோ அகன்று போன மனம் எனது. ஆயினும் நான் குமைந்து கிடப்பது எதன் ஒன்றில் என்பது தீர்மானமாக இல்லை.
நான் பழமைகளில் அதன் உரிமைகளில் ஊடுருவ முயன்று இந்த கணம் தோற்று போய் இருக்கிறேன் ஸ்பரி.
இப்போது எனக்கு ஒரு ஆறுதல் மட்டும் தேவைப்படுகிறது. அது வாசிப்பில் மட்டும் கிடைக்காது. ஆகவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இதில் எந்த ஞானமும் கிடையாது. எனக்கு நானே கொடுத்து கொண்ட மரியாதைகள் இந்த நொடி நிற்கதியை அடைந்து விட்டன. மனப்பிறழ்வை மெல்ல அடைகிறேன்.
காலங்கள் தன் போதையை எனக்குள் நிறுத்தாது புகட்டுகின்றன. நான் ரசித்து ரசித்து கேட்ட பாடல்கள் கொலைநகம் பூண்டு சுருட்டி வளைக்கிறது.
நான் நம்பிக்கையின் மீது சொல்லப்பட்ட எல்லா வார்த்தைகளையும் விடாது உச்சரிக்கிறேன். அவை தூளியில் இருந்து தவறி விழுந்த குழந்தை போல் கதறி முடிகிறது. சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி உங்களை நினைத்து கொள்கிறேன்.
நீங்கள் காட்சியாக பயண வழிகாட்டியாக தெரியும் போதே ஒரு சித்தாந்தத்தை விலங்காக்கி என்னை சிறை செய்ய முயல்கிறீர். உங்களிடம் இருந்து விலகி செல்கிறேன். உங்கள் நிழல் துரத்துகிறது.
தத்துவங்கள், மரபுகள், கொள்கைகள், பின்னிப்பிணைந்த மானுட வாழ்வின் சூழ்ச்சியும் தந்திரங்களும் ஒன்றாய் திரண்டு என்னை விரட்டுகின்றது.
நான் எனக்குள் ஒப்பேற்றி வைத்திருந்த கடவுள்கள் அசையாது இருக்கின்றன. அவைகளின் கைகள் கட்டப்பட்டு கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் அப்படிப்பட்ட ஒரு மனித குழுவால் போற்றி போற்றி பூஜிக்கப்படும் காட்சி தெரிகிறது.
என்னை சுற்றிலும் காட்சிகள், காட்சிகள், காட்சிகள் மட்டுமே. நன்கு உணர்கிறேன்... நான் ஆழ்ந்த தூக்கம் அல்லது நீண்ட மயக்கத்திலோ இல்லை. உடலின் அசைவுகள் திறம்பட உள்ளன. நான் என் அறையை சுற்றி வர முடிகிறது.
எல்லாப்பக்கங்களிலும் தணிக்க முடியாத ஒரு கொந்தளிப்பில் அவை இருக்கின்றன. தற்கொலை மீதான ஒரு ஆவல் கட்டுமீறி வெளிப்படுகிறது. எனது ரத்தங்களை சந்திக்க கண்கள் பிரியம் கொள்கின்றன. எனது இறுதி மூச்சின் பெரும் பிரிவை பார்க்க இதயம் துள்ளலுடன் தவிப்பதை உணர முடிகிறது.
ஒரு பெண்ணாகிய நான் குமைந்து போகும் அனைத்து விஷயங்களும் இப்போது திரும்ப திரும்ப எனக்கு நடக்கிறது. மெல்லிய இந்த பொடி இரும்பு சங்கலி... இது நாளை எப்படியும் அறுந்து போகக்கூடியதுதான்... என்ற ஒரு ஆவலில் அடிக்கடி தடவி அழகு பார்த்த சங்கிலி... இப்போது என் கழுத்தை இறுக்குவது என்று தெரிந்து கொண்டேன். இதை என் மனதில் இருந்து கபடமாய் தயாரித்து பின்னர் எனக்கே அணிவித்தும் அவர்கள் சென்றனர்.
ஓடுவதற்கு கூட பாதைகள் இல்லை. திசைகள் சுழன்று கொண்டே இருக்கிறது.
மெல்ல ஒரு நிதானம் வேண்டும் என்று சொல்கிறேன். இது முன்பே இந்த உலகம் அனுபவித்த கொடுமைகளுள் ஒன்றுதான் என்றும் சொல்கிறேன்.
துரோகங்கள் பழி தீர்க்கும் ஆவல்கள் கொலைகள் யாவுமே அடங்கிய வாழ்வில் நாம் பிரிந்து இல்லை என்பதை நினைவு செய்கிறேன்.
மனிதர்கள் ஆவேசத்தின் குறும்பு மூட்டைகள்... அவர்கள் கடித்தும் பிராண்டியும் கிள்ளியும் இன்னொரு உயிரை துளைக்க நேர்ந்தால் அதற்கு பாஷையை, அன்பை, நெறிப்படுத்துதலை மட்டுமே கருவியாக கைக்கொள்ள கூடியவர்கள் என்றும் எனக்குள் நான் சொல்லிக்கொள்கிறேன்.
தவிடைபோல் வானத்தில் ஒளி திரும்புகிறது ஸ்பரி... இது அதிகாலையா இன்னும் விடியவில்லையா என்று தெரியவில்லை. நான் இங்கு இருக்கிறேன் ஆனால் எங்கு சென்றேன் என்பதை நினைவு கொள்ள முடியவில்லை. கைகளில் ஒரு நடுக்கம் இருக்கிறது. மெத்தையில் குட்டிகள் கட்டிப்பிடித்தபடி தூங்குகின்றன. அவைகளை பார்த்ததும் கண்ணீர் கட்டின்றி வடிகிறது.
நீங்கள் சீக்கிரம் வருவீர்களா?
=======________=======