மாதங்களில் அவள் மார்கழி

#மாதங்களில் அவள் மார்கழி

திருப்பாவை பாடியவள் மகிழ்கின்றாளே
அருட்பார்வை ஏந்தியவள் சிரிக்கின்றாளே
அசையாத இமைகள் என ஆக்கினாளே
இசைபோலே இன்பந்தான் கூட்டினாளே..!

கோலங்கள் வாசலிலே போடும் முன்னே
எழில்கோலம் போலவவளைக் காண்கின்றேனே
கோலத்தில் கம்பிகளை வளைப்பது போல்
கோமகள் வளைத்துவிட்டாள் அன்பினாலே ..!

இதயத்தில் பனிபோன்றே இறங்கிவிட்டாள்
எங்கேயோ கூட்டித்தான் போகின்றாளே
இமயத்தின் சிகரத்தில் ஏற்றிவிட்டாள்
ஏறுகிறேன் நானுந்தான் மேகம் மேலே..!

எந்நாளும் மார்கழியாய் இருந்துமென்ன
என்னுள்ளே வெப்பந்தான் கூட்டுகின்றாள்
ஏகாந்தம் என்னுள்ளே விதைத்திடுவாள்
இன்பங்கள் அறுவடையும் செய்திடுவாள்

கனிச்சாறு பேச்சிருக்கும் கரைந்திருப்பேன்
கருணை அதில் வழிந்திருக்க கடவுளும் காண்பேன்
இனித்திருக்கும் சிரிப்பதுவோ இஞ்சிவெல்லம்..!
எனைத்தொடுமோ எந்நோயும் அவளன்பு கொல்லும்..!

பூச்சூடா கூந்தலிலே பூக்கூடை வாசம்
செண்பகப்பூ வாசமதில் சேர்ந்தே வீசும்
அசைந்துவரும் அவள்நடையில் அன்னம் தோற்கும்
இசைமொழியால் பேச்செல்லாம் தேனை வார்க்கும்

உச்சிமுதல் பாதம்வரை ஒழுக்கம் போர்த்தி
உலாவருவாள் தன்பெயரை நிலைநிறுத்தி
ஓசோனாய் அவளிருக்கத் தூய சுவாசம்
உற்சாகம் பொங்கவைக்கும் அவளின் நேசம்

விண்ணிலிருந்து வந்தவளோ மின்னுகின்றாள்
என்னுள்ளே இறங்கியவள் துள்ளுகின்றாள்
பனியிறங்க வியர்க்கின்றேன் காதல் இனிது
கனிமொழியாள் துணையானால் வாழ்வும் எளிது

மங்கலமாய் திகழ்கின்றாள் மார்கழியாய்
திங்களொளி வீசுகின்றாள் பேரறிவால்
எங்கள்குலம் காத்திடுவாள் கைபிடிப்பேன்
தங்கமகள் குணத்திற்கே உயிரளிப்பேன்..!

#சொ. சாந்தி

எழுதியவர் : பெண். மார்கழி. மாதம் (13-Jul-20, 10:44 pm)
பார்வை : 37

மேலே