பரிசு
காலை ஆறு மணிக்கு நேற்று போலவே இன்றும் தூறல் பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் ஒருவர் குடையைப் பிடித்துக் கொண்டு நடை பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து வியப்பு அடைந்தாள் அகிலா.
அகிலா ஒரு இல்லத்தரசி. கணவன் ரகுராமன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறான். மகள் இந்துவுக்கு வயது இருபத்து எட்டு. அவள் ஒரு எம் என் சி கம்பெனியில் வேலை பார்க்கிறாள்.
சாப்பிட வா என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் அகிலா
இதோ வந்துட்டேன்மா என்று சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்தாள் இந்து. என்னம்மா இன்னைக்காவது கதை எழுதி முடிப்பாயா ? என்று அம்மாவிடம் கேலியாகக் கேட்டாள்.
”ஏண்டி என்னைப் பார்த்தா கேலியா இருக்கா? நான் சீக்கிரம் கதை எழுதிக் காட்டறேன் என்றாள் சிரித்துக் கொண்டே
தந்தையும் மகளும் சாப்பிட்டு விட்டு ஆபிஸ் போன பிறகு அகிலா நேரத்தைப் பார்த்தாள். மணி ஒன்பது ஆகியிருந்தது.
படுத்த படுக்கையாய் இருக்கும் மாமியாருக்கு கஞ்சி தயார் செய்து கொண்டு போய்க் கொடுத்தாள். மாமியாரால் எழுந்து நடமாட முடியாவிட்டாலும் அதிகாரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.
அப்பாடா ! எல்லா வேலையும் முடிந்து விட்டது, இன்று கதை எழுத உட்கார்ந்து விடலாமென்று பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு மேசை முன் அகிலா அமர்ந்தாள். அவளுக்குக் கதை எழுத ஆசை. அவள் கல்லூரியில் பிஏ படிக்கும்போதே கவிதை எழுதுவாள். பட்டி மன்றத்தில் கலந்து கொண்டிருக்கிறாள். கல்யாணம் ஆனவுடன் அவள் ஆசை எல்லாம் நிராசை ஆகிவிட்டது. குடும்பம், குழந்தை வளர்ப்பு, சமையல் இதிலேயே அவள் நேரம் கழிந்து விட்டது.; இப்போதும் தொடர்கிறது. அவளுக்குக் கதை,கவிதை,கட்டுரைகளைப் படிப்பதில் ரசனை இருந்தது. பத்திரிகைகளைப் படிக்கும்போது தானும் கதை எழுதி அனுப்ப வேண்டும் என்று நினைப்பாள். குடும்பச் சுமையால் நினைத்ததைச் செயல் படுத்த முடியாமல் போய் விடும். அகிலாவுக்கு எழுதச் சொல்லி ஊக்கம் அளிக்க யாரும் இல்லை. அவளுடைய மனசும் தடையாய் இருந்தது. சின்ன இடையூறு வந்தாலும் எழுதுவதைத் தள்ளிப் போட்டு விடுவாள். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை அவள் உணரவில்லை.
அகிலா எழுத தொடங்க பேனாவை எடுக்கும்போது அவள் மாமியார் கூப்பிடுவாள். பேப்பரைப் படி என்று கட்டளையிடுவாள்.. அடிக்கடி கூப்பிட்டு மருந்து கொடு, வெந்நீர் கொடு... என்று கேட்டுக் கொண்டிருப்பாள். ”இன்னைக்குக் கதை எழுதின மாதிரிதான்” என்று நினைத்து அகிலா மாமியாருக்கு பேப்பரைப் படிப்பாள்
அவளுக்குக் கதை எழுத முயலும்போதெல்லாம் இந்த மாதிரி இடையூறு வந்து கொண்டே இருக்கும்.
ஒருமுறை அவளுடைய கல்லூரி தோழி கல்பனா அவளிடம், , ” நீ நல்லா எழுதறே. அகிலா உன்னிடம் திறமை இருக்கு. நிறையக் கதைகளைப் படித்துவிட்டுத்தான் கதை எழுதணும்னு நினைக்காதே. அலைகள் ஓய்ந்த பிறகு குளிக்கலாம் என்று இருந்ததால் அப்படியே இருக்க வேண்டியதுதான். எந்த இடையூறு வந்தாலும் பொருட்படுத்தாமல் எழுது. உன்னால் முடியும்” என்பாள்.
இந்து கூடக் கேலியாக, ”நீ பாட்டி இருக்கிற வரை கதை எழுத போறதில்லை. ஒண்ணு பண்ணேன். கதையை வாய்ஸ் ரிகார்டரில் பதிவு பண்ணிடு. நான் அதைக் கேட்டு எழுதி வைத்து விடுகிறேன்” என்பாள்.
”அட! இது நல்ல யோசனையா இருக்கே என்றாள் அகிலா புன்சிரிப்புடன்.
மூன்றாவது நாளாக இன்றும் காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது.. நேற்று பார்த்த அதே ஆள் குடையுடன் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தைச் சன்னல் வழியாக அகிலா பார்த்தாள். அப்போது அங்கு வந்த இந்து, ”ஆஹா ! அடாது மழை பெய்தாலும் விடாது நடக்கிறார் இவர்” என்று ஆச்சரியப்பட்டாள்.
அகிலாவின் மூளையில் பொறித் தட்டியது. எந்த ஒர் இலட்சியத்துக்கும் பிரச்சனைகளும் சிக்கல்களும் இடையூறுகளும் வரத்தான் செய்யும். அவற்றை நாம் விடாமுயற்சியுடன் கடக்க வேண்டும் என்று உணர்ந்தாள். கதை எழுதுவதற்கு வெறும் முயற்சி மட்டும் போறாது. விடாமுயற்சி மிகத் தேவை என்று தெளிந்தாள்.
அன்று வீட்டு வேலைகள் முடிந்ததும் மனதில் சங்கல்பம் செய்து கொண்டு உற்சாகத்துடன் கதை எழுத ஆரம்பித்தாள். அகிலா என்று மாமியாரின் அழைப்பு. ”வேலையாய் இருக்கேன்.கொஞ்ச நேரத்திலே வருகிறேன். பொறுத்துங்கோங்கோ” என்று விநயத்துடன் பதிலளித்து விட்டு எழுதுவதைத் தொடர்ந்தாள். அலைபேசி சிணுங்கியது. அதை அணைத்தாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி சப்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தால் எதிர் வீட்டு பத்மா மாமி. நீ வேலையாய் இருக்கியா என்று கேட்டு உள்ளே வர முயன்றார். நான் பிசியா இருக்கேன். நாளைக்குப் பார்க்கலாம் என்று வந்தவளைத் திருப்பி அனுப்பினாள். தான் கதை எழுத அனுபவித்த இன்னல்களைத் திறம்பட நகைச்சுவையாக எழுதி கதையை முடித்து விட்டாள். கதைக்கு ”முதல் கதை” என்று பெயரிட்டாள்.
கதையை ஒரு முறைக்கு இருமுறை நன்கு படித்துப் பார்த்தாள். திருத்தம் செய்ய வேண்டிய சில இடங்களில் திருத்தம் செய்தாள். எந்தப் பத்திரிகைக்கு அனுப்புவது என்று. அவளுக்குக் குழப்பமாய் இருந்தது. அவளுக்குப் பக்கத்தில் தினமலர் வாரமலர் இருந்தது. அதை எடுத்துப் புரட்டியவளின் முகம் மலர்ந்தது. அதில் சிறுகதைப் போட்டிக்காக அறிவிப்பு இருந்தது. சரியான சமயத்தில் தன் தேடலுக்கு விடை கிடைத்தற்குக் கடவுளுக்கு நன்றி கூறினாள்.அடுத்த நாள் அவளுடைய கதையைத் தினமலருக்கு ஸ்பீட் போஸ்டில் அனுப்பி விட்டாள். அதோடு அதை மறந்தும் விட்டாள். சுமார் மூன்று மாதம் கழித்து அவளுக்குத் தினமலர் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. உங்கள் கதைக்கு முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பரிசு ரூபாய். இருபதாயிரம் என்று ஆசிரியர் சொன்னதும் அவளால் நம்பவே முடியலை.. நிஜமாகவா? என்று கேட்டாள். ”ஆமாம் நிஜம்தான். உங்களுடைய போட்டோவும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பும் இன்னைக்கே அனுப்பி விடுங்க.. வருகிற ஞாயிற்றுக் கிழமை வாரமலரில் கதை வரவிருக்கிறது என்றார் ஆசிரியர். உடனே அனுப்பி விடுகிறேன் என்றாள். என்னுடைய முதல் சிறுகதையே பரிசு கதை ! அகிலா சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள்.
கணவனிடமும் மகளிடமும் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாள். அனைவரும் ஆனந்தக் கடலில் மிதந்தனர்.
அகிலாவைப் பேரும் புகழும் பெறும் எழுத்தாளர் ஆக்க ஊக்கம் அளிக்கத்தான் அவளுக்கு இந்தப் பரிசு கிடைத்ததோ என்னவோ?