சிறுவர் கதைகள் நூல் வெளியீடு
*நோர்வேயில்*
*தமிழ்ச் சிறுவர் கதைகள் நூல் வெளியீடு!*
அருகிவரும் சிறுவர் கதை இலக்கியத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தமிழ்ச் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பென்குயின் பயணம்’ நூல் வெளியீடு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வைபவத்தை திருமதி கலைவாணி நகுலேஷ்வரன் தொகுத்து வழங்கினார். வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தினைத் தொடர்ந்து நூலாசிரியர்களான யோகராணி கணேசன் அவரது பிள்ளைகள் கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் குறித்த அறிமுகத்தினை திருமதி சியாமினி கென்றிலிஸ்மன் நிகழ்த்தினார்.
பென்குயின் பயணம் பற்றிய விமர்சன உரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சுவர்ணராஜா கதிரேசன் காணொளி ஊடாக நிகழ்த்தினார். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் நீண்டகால ஆசிரியர்களான பார்த்திபன் அருளம்பலம், ஜமுனா அகிலன், உமைபாலன் தியாகராசா ஆகியோரின் மதிப்பீட்டுரைகளைத் தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
யோகராணி கணேசன் குடும்பத்தாரின் இந்த இணைந்த செயற்பாடானது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் சிறுவர் கதை இலக்கியத்தை ஊக்குவிக்கும் முயற்சி எனவும் சிறுவர் சிறுகதை உலகில் இது ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் மதிப்பீட்டாளர்கள் தங்களது உரையில் குறிப்பிட்டார்கள்
பென்குயின் பயணம் சிறுவர் கதை நூலினை நூலாசிரியர் யோகராணி கணேசன் அவர்களின் தந்தையார் யோகராசா சிவகுரு வெளியிட முதல் பிரதியினை அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகம் சார்பில் செ. நிர்மலன் பெற்றுக்கொண்டார். யோகராணி கணேசன, கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் மூவருக்கும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் சார்பில் மதிப்பளிப்பு செய்யப்பட்டது. நூலாசிரியர் யோகராணி கணேசனின் நன்றியுரையோடு நூல் வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தமிழ் கற்று படைப்பாளிகளாக உருவாகியுள்ள கனிசா கணேசன் மற்றும் கஷ்வினி கணேசன் இருவரின் எழுத்துத்திறன் குறித்தும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் பெருமைப்படுவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது