தீராக்கடன்

மின் மயானத்திலிருந்து திரும்பி வந்தவர்களெல்லாம் வாசலில் வைத்திருந்த வாளி நீரில் கால் கழுவி விட்டு வீட்டினுள் சென்றார்கள். நானும் என் நழுவுகிற தோள் துண்டை பிடித்தபடியே கால்களை கழுவி விட்டு வாசற்படியேறினேன். வாசலுக்கு நேரே சரஸ்வதியின் படம் வைத்து மாலை போட்டு விளக்கேற்றி வைத்திருந்தார்கள்.

சுழன்று சுழன்று மேலேறும் ஊதுபத்தி புகைக்கு பின்னிலிருந்து கண்ணாடி சட்டத்துக்குள் புகைப்படமாக சரஸ்வதி உதடுகளில் தேங்கி நிற்கிற புன்னகையோடு என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப நாட்களுக்கு முன்பு நாங்கள் சேர்ந்து எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை இரண்டு கூராக்கி என்னை மட்டும் தனியே பிரித்தெடுத்து அவளை பெரிதாக்கி படமாக்கியிருந்தார்கள்.

இந்நேரம் சரஸ்வதி என்னவாகி இருப்பாள்.? எரிந்து முடிந்திருப்பாளா.? மின் மயானத்தில் எல்லா சடங்குகளும் முடிந்து அவளை எடுத்து நகரும் பலகையில் வைத்து அடுப்பினுள்ளே தள்ளியதும் உச்ச வெப்பத்தில் சரஸ்வதியை போர்த்தியிருந்த சிவப்பு கோடி துணி பற்றிக்கொண்டு எரிய தொடங்கியபோது அவளை கடைசியாக பார்த்தது.
இந்நேரம் எலும்புகள் சாம்பலாகி இருக்குமா ? உடல் உருகி கரியாகி இருக்குமா ? உடம்பழியும்... உயிர் அழியுமா.. ?

இந்த வீடுதான் அவளுக்கு உலகம்.. நான் மட்டும் தான் அவளுக்கு எல்லாமே என்று இருந்தவள் அதற்குள் காற்றோடு கலந்திருப்பாளா...?! இருக்காது..

உடம்பை விட்டு வெளியே வந்த அவள் ஆவி என் பின்னாலேயே வந்து இந்த வீட்டினுள்தான் சுற்றிக் கொண்டிருக்கும். எங்கோ இருந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கும். நான் சற்று சோர்வாய் இருந்தால் கூட “என்னாச்சுங்க..? உடம்பு சரியில்லையா..?.” என்று கழுத்தை தொட்டு பார்த்து, மெலிதாக சுட்டால் கூட "ஐயோ கொதிக்குதே" என்று பதறி போவாளே... அப்படிப்பட்டவள் இப்போது நான் இப்படி தளர்ந்து போய் தலை தொங்கி உக்கார்ந்திருப்பதை பார்த்தால் நொறுங்கி போவாளே..
சரஸ்வதி எங்காவது தென்படுகிறாளா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்... ஒட்டடை இல்லாத சுத்தமான சுவர்களில்... வாசற் படியில் அவளே செய்து கட்டியிருந்த வெல்கம் தோரணம் முதல் கரி படியாத சமையல் மேடை வரை எல்லாவற்றிலும் அவள் தான் தெரிந்தாள்.

முதன் முதலாய் அவள் என் கை பிடித்து இந்த வீட்டிற்கு வந்தபோது இது வெறும் நாலு சுவரும், மேலே கூரையும், திண்ணையும் , முன்னறையும், சின்னதாக பெட்ரூமும் இருள் கவிந்த சமையலறையுமாக இருந்தது. வீட்டை சுற்றி காடாய் புல்லும், புதரும். இதில் தான் நாங்கள் இருந்தோம். நாங்கள் என்றால் நானும் என் தம்பி தனபாலனும் , தங்கை சித்ராவும், கால் கை விளங்காது படுக்கையில் கிடந்த அம்மாவுடன் இருந்தோம்.
சரஸ்வதி, வந்த பத்து நாளில் வீட்டின் அகத் தோற்றத்தையே மாற்றி விட்டாள் . அவசியமில்லாதவைகளை தூக்கி வீசினாள். தேவைப்பட்டதை ஒழுங்கு படுத்தினாள். வீடு இல்லமாகியது.

வீட்டை சுற்றி இருந்த புற்களை அகற்றி புதர் மண்டிய இடங்களை தனபாலனின் துணை கொண்டு சுத்தமாக்கினாள். வாழை நட்டாள். பந்தல் இட்டு , நட்ட மல்லிகையை படர விட்டாள். ரோஜா பதியனிட்டாள். முருங்கை, பப்பாளி வளர்த்தாள். வேப்பங்கன்றை வீட்டின் முன் நட்டாள். செம்பருத்தி , கனகாம்பரம், கத்தரி, வெண்டையென்று வீட்டிற்கு தேவையானதையெல்லாம் வளர்த்தாள். வீட்டை சுற்றிலும் பசுமையாய் தாவரங்கள் வளர வளர வீடு நல்ல காற்றை சுவாசித்தது.
ஊர் விழிக்கும் முன், தான் விழிக்கும் சரஸ்வதி வாசலுக்கு கூட்ட வரும்போதுதான் சேவலுக்கு விடிந்தது தெரிந்து கூவும். தெருவை ஒட்டிய வாசலில் அவள் போடும் கோலத்தை, நடப்பவர்கள் அழிக்காது நகர்ந்து நின்று பார்ப்பர்.

நான் படுக்கையை சுருட்டும் முன் குளித்திருப்பாள். பீழை வழிகிற கண்ணோடும். எச்சில் படிந்த வாயோடும் பரட்டை தலை முடியோடும் ஒரு நாளும் பார்த்ததில்லை அவளை. வாசல் தெளித்து கோலமிட்டு, குளித்து முடித்து ஈர துண்டு சுற்றிய தலையுடன்... மரம் செடிகளுக்கு நீர் வார்த்து.. பூக்கின்ற மொட்டுகளை கண்டு பூரித்து , மலர்ந்தவைகளை பறித்து சாமிக்கு சமர்ப்பித்து... காலை சமையலுக்கு வேண்டியதை செய்து , எல்லோரையும் எழுப்பி காபி தந்து எனக்கு மதியத்திற்கு உணவு தயார் செய்து வைத்து… என்று காலை வேளைகளில் ஓய்வின்றி சுழல்வாள். நான் பணிக்கு கிளம்பியதும்.. அம்மாவை காலை கடன்களை கழிக்கவைத்து ஈர துண்டால் உடல் துடைத்து முதுகிற்கு பவுடர் போட்டு சேலை மாற்றி உணவூட்டி பின் அன்றாட பகல் வேலைகளில் கரைந்து போவாள்.

வீடு அவளுக்கு கோயில் போல. எப்போது சுத்தமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவள். அவளும் தன்னை பளிச்சென்றே வைத்துக் கொள்வாள். மனிதர்கள் இருக்கிற வீடு எப்போதும் வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பாள். அப்போதுதான் வாசலில் நிற்கிற ஸ்ரீதேவி வீட்டிற்குள் வந்து குடியேறுவாளாம்.

சரஸ்வதி இந்த வீட்டினுள் வலது கால் வைத்தபோது தம்பி தனபாலன் +2 முடித்து விட்டு மேற்கொண்டு என்ன படிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். தங்கை சித்ரா 10வது இறுதி தேர்வில், தமிழில் பெயிலாகி வீட்டிலிருந்தாள்.

எதிர் காலம் குறித்த சிந்தனையே இல்லாமலிருந்த தனபாலனுக்கு உரமேற்றி சரஸ்வதிதான் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விடடாள். நான்கு வருடம் கழித்து வெளியே வரும்போது நல்ல கம்பெனியில் வேலைக்கான ஆர்டருடன் வந்தான் தனபாலன் .

தமிழ் மொழி மேல் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்த சரஸ்வதி , சித்ராவுக்கு தமிழ் பயிற்றுவித்து மீண்டும் தேர்வெழுதி பாஸ் செய்ய வைத்தாள். அடுத்து பி.ஏ தமிழ் இலக்கியம் எடுக்க வைத்தாள். இப்போது சித்ரா ஒரு தமிழ் கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிகிறாள் ..
யாரிடம் கற்றுக்கொண்டாளோ ? வெகு ருசியாய் சமைப்பாள் சரஸ்வதி. துளி உப்பு அதிகமாகவோ , நாக்கு உறைக்கிற காரமோ அவள் சமையலில் இருந்ததில்லை.

“ எப்படி அண்ணி , இவ்வளவு அருமையா சமைக்கிறீங்க..? அந்த கையில என்னதான் மந்திரம் வச்சிருக்கீங்களோ! ” என்று சித்ரா கேட்டால்... “ மந்திரமுமில்லை எந்திரமுமில்லை. நான் எனக்காக சமைக்கல. உங்களுக்காக சமைக்கிறேன். அவ்வளவுதான் ” என்று சாதாரணமாய் சொல்லி விட்டு நகர்வாள்.

போட்டதை தின்று விட்டு எழும் பிறவி நான். அவள் சமையலை நான் புகழ்ந்ததே இல்லை. கூட்டோ பொரியலோ 2 கரண்டி கேட்டு வாங்கினால் எனக்கு பிடித்ததென்றும், தட்டில் மிச்சம் வைத்தால் பிடிக்கவில்லை என்றும் தானாக புரிந்து கொள்வாள். எனக்குப் பின் என் தட்டில் என் எச்சிலை அவள் சாப்பிடுவதில் ஏக பெருமை எனக்கு. புருசனல்லவா...!

எதையாவது செய்து கொண்டே இருக்கவேண்டும் அவளுக்கு . கூடை பின்னுவாள். வித விதமாய் பாசி மணிகளில் தோரணங்கள் செய்வாள். எம்பிராய்டரி வேலை தெரியும். தையல் கற்றுக்கொண்டாள்.
தனக்கென்று எதையும் கேட்டதில்லை சரஸ்வதி. நானும் குறிப்பிட்டு எதையும் வாங்கி தந்ததில்லை ' உனக்கு வேணும்னா நீயே வாங்கிக்கோ ' என்று விடுவேன். அதிகமாய் இருவரும் சேர்ந்து வெளியே போனது கூட இல்லை . தனியே கோவில் குளம் என்று சென்றாலும் மாலை நான் கம்பெனியிலிருந்து வீடு திரும்பும்போது வீட்டில் இருப்பாள். என்னை விட்டால் இவளுக்கு வேற கதி எது என்று கூட நான் நினைத்ததுண்டு. அவள் இருந்த வரை எங்கள் வீடு இருள் கவிந்து கிடந்ததே இல்லை.
திருமணமான ஒரு வருடத்தில் எங்களுக்கு வேணுவும், அடுத்த இரண்டு வருடம் கழித்து பாலாவும் பிறந்தார்கள்.

பாலாவுக்கு 5 வயதாகும்போது என் அம்மா ஒரு விடியலில் இறந்து போனாள். ஏறக்குறைய 8 வருடங்கள் படுக்கையில் இருந்த அம்மாவை சரஸ்வதிதான் கவனித்துக்கொண்டாள். ஊட்டுகின்ற சோற்றை துப்புகிற.., . இரவெல்லாம் இருமுகிற., படுக்கையிலேயே மலம் சிறுநீர் கழிக்கிற,, அம்மாவை கவனித்துக்கொள்ள சரஸ்வதி அலுத்துக்கொண்டதே இல்லை
ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய் என்று நானும் கேட்டதில்லை. மாமியாரை கவனித்து கொள்வது மருமகளின் கடமை என்று விட்டுவிட்டேன். கடைசியில், காலடியிலேயே உறங்கும் மருமகளை ஈனஸ்வர குரலில் எழுப்பி விக்கி விக்கி சரஸ்வதியின் கையால் பாலூற்றியபின்தான் அம்மாவின் உயிர் பிரிந்தது.
தம்பி தங்கைகளை பற்றிய கவலையோ, மகன்கள் எதிர்காலம் குறித்த நினைப்போ எனக்கு என்றுமே இருந்ததில்லை. எந்த குடும்ப பாரத்தையும் தலை மேல் ஏற்றிக் கொள்ளாமல் விட்டேற்றியாய் இருந்தவன் நான். மகன்களை அவள் தான் வளர்த்தாள். வளர்ந்தார்கள். படிக்க வைத்தாள். படித்தார்கள். இன்று மனைவி, குழந்தைகள் என்று ஆளுக்கொரு திசையில் இருக்கிறார்கள். வெறும் காசு தந்ததைத் தவிர இதிலெல்லாம் என் பங்கு என்று எதுவுமே இல்லை.

உடம்பு முடியவில்லை என்று சேர்ந்தார் போல நான்கு நாட்கள் அவள் படுத்து பார்த்ததில்லை. என்னதான் முடியவில்லை என்றாலும் எனக்கு எல்லாம் செய்து விட்டுத்தான் படுக்க போவாள்.

நேற்றுகூட திடீரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு மடிந்தவள்தான் மருத்துவமனைக்கு போவதற்குள்ளாகவே தலை சரிந்து விட்டது.
-------------
சரஸ்வதியின் ஏழாம் நாள் காரியம் முடிந்த இரவு.

வாசலுக்கு வெளியே இருந்த வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்த என்னருகே வந்தமர்ந்தான் வேணு.

“ அப்பா... நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்.. நிஷா கிட்ட உங்களுக்கு வேணும்ங்கற திங்ஸ் எடுத்து வைக்க சொல்லிருக்கேன். இனி நீங்க இங்க தனியே இருக்க வேண்டாம் . எங்க கூடவே வந்துடுங்க..." என்றான்.
“ நான் வரலப்பா ... இங்கயே இருக்கேன்..”
“ இங்கேயா ...! தனியாவா... ? இது நாள் வரைக்கும் துணைக்கு அம்மா இருந்தாங்க ... ஓகே. இப்போதான் அவங்க இல்லையே. நீங்க எதுக்கு தனியா இங்க இருக்கணும்...? ”
“ இனிமே தான் நான் தனியாவே இருக்கணும் “
" என்னப்பா சொல்றீங்க..?"
" வேணு... உங்கம்மாவை நான் கல்யாணம் பண்ணிக்கும்போது அவ வயசு 18 தான். காலேஜ் கூட முடிக்கல.. படிப்பை பாதியில நிறுத்திட்டுதான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்போ எனக்கு 28 வயசு.
சின்ன வயசுல நான் ரொம்ப ஆடுவேன். ஒரு கால் கட்டு போட்டா சரி ஆயிடும்னுதான் உங்கம்மாவை கட்டி வச்சாங்க எங்கம்மா.
அவ என் தோள் உசரம் கூட இல்ல.. குழந்தை போல இருந்த உங்கம்மாவை , எனக்கு அடங்கி நடக்கற பொண்ணா இருந்தாதான் நாம ஆட முடியும்னு நினைச்சுதான் கட்டிகிட்டேன்.
உங்கம்மாவுக்கு மேலே படிக்கணும்னு ரொம்ப ஆசை.. வரன் வருதேன்னு மேற்கொண்டு காலேஜ் போக வேணாம்னு அவங்க வீட்டுல சொல்லிட்டாங்க. “இங்க தான் என்னை படிக்க விடல . அங்க வந்தப்புறமாவது என்னை படிக்க வைங்க" ன்னு நிச்சயத்தப்போ என்னை கெஞ்சினா உங்கம்மா. அப்போ சரி சரினு மண்டையாட்டினேன். எனக்கு அவளை மேல படிக்க வைக்கிற மாதிரி எண்ணமே இல்லை. பொண்ணுங்க ரொம்ப படிச்சா நமக்கு அடங்காம திரிவாளுங்கன்னு ஆம்பள திமிர் எனக்கு. கல்யாணத்துக்கப்புறம் அவ மறுபடியும் காலேஜ் சேரறேன்ன்னு சொன்னப்போ ஓங்கி அறைஞ்சேன். அவ புக்ஸை எல்லாம் கொண்டு போய் எங்கயோ வீசிட்டு வந்தேன்.
அவ படிக்கற கனவை பாழாக்கினேன்.
கை கால் விளங்காம போன எங்கம்மாவுக்கு சாகறவரை ஒரு நர்ஸ் போல பணிவிடை செய்தா உங்கம்மா.. புருசனுக்கு, என் புள்ளைங்களுக்கு வேண்டியதை செய்யற வேலைக்காரியா... இந்த வீட்டுக்கு காவலாளியாத் தான் நான் அவளை நடத்தினேன். மனுசியா அவளை நான் நடத்தவே இல்லை. உங்கம்மாவை நான் கடைசிவரை அடிமையாத்தான் வச்சிருந்தேன் . எதுத்து பேச விட்டதே இல்ல.
எத்தனையோ தடவை நான் அவளை அடிச்சிருக்கேன். பொம்பளைய அடிக்கறது தான் வீரம்னு நினச்சேன். சட்டுனு கை நீட்டிருவேன். காது ஜவ்வு கிழியற அளவுக்கு அறைஞ்சிருக்கேன். ஆறு மாசம் காது கேக்காம கஷ்டப்பட்டிருக்கா உங்கம்மா. என்ன சண்டை நடந்தாலும் அடுத்த வீட்டுக்கு தெரியாது. அடிக்கற சத்தமும் , நான் கெட்ட வார்த்தையிலே திட்டற சத்தமும் மட்டும்தான் கேக்கும். ஆனா அவ அழகுற சத்தம் வெளிய கேக்காது.

அவளை பல தடவை மட்டம் தட்டி பேசியிருக்கேன். ஆனா எங்கயும் அவ என்னை விட்டு தந்ததே இல்லை.

இருக்கும் போது அவ அக்கறையோடு செஞ்ச எதுக்கும் நான் ஒரு நன்றி கூட சொன்னதில்லை. என் நன்றியை எதிர்பார்த்து அவ எனக்கேதும் செய்யல. ஆனா நான் சொல்லியிருக்கணும் இல்லையா. ஏதாவது ஒரு நேரத்துல சின்னதா பாராட்டியிருந்தா கூட அவ சந்தோச பட்டிருப்பாளே. அதை கூட நான் செய்யலையே.
அவ பெருமையை , வந்தவங்க எல்லாம் சொல்லி சொல்லி மாஞ்சு போனாங்க. அவளோட வாழ்ந்த இந்த 35 வருசத்துல . அவகிட்டயே அவளை பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்ல ஏன் எனக்கு தோணல.? . திமிர்தானே எனக்கு. நான் உருப்படுவேனா? எனக்கெல்லாம் உங்கம்மா மாதிரி நல்ல சாவு வருமா ?
எதுவுமே , அது இல்லாதப்போதான் அதோட அருமை தெரியும்பாங்க,.
நீங்க சின்னதா இருந்தப்போ ஒரு நாள் நாங்க சண்டை போட்டப்போ அவ அழுதுகிட்டே சொன்னா. என்னைக்காவது ஒரு நாள் நீங்க வீட்டுக்கு வரும்போது அடியேனு கூப்பிட்டா ஏன்னு கேக்க நானிருக்க மாட்டேன் . அப்போ தெரியும் என்னோட அருமைனு சொன்னா. அதோட அர்த்தத்தை இப்போ உணரறேன்.

இனி நான் அவளை பார்க்க முடியாது. அவ குரலை கேக்க முடியாது. அவ செஞ்சு போட்டு சாப்பிட முடியாது . அவ கையாலே தண்ணி வாங்கி குடிக்க முடியாது.

ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு கெடுதல்னு எத்தனை முடியலைனாலும் எனக்கு ஆக்கி போட்டு இது வரை எனக்கு நோயே வராம பார்த்துக்கிட்டாளே. அவ அருமை எனக்கு தெரியணும். வாய்க்கு வக்கணையா சமைக்கறது எவ்வளவு கஷ்டம்னு நான் சமைச்சு பார்த்து தெரிஞ்சுக்கணும்.
இருந்த இடத்துல இருந்தே எவ்வளவு தடவை அவளை ஏவி இருக்கேன். அப்படி ஏவுனா வந்து நிக்க அவ இல்லையேன்னு நான் ஏங்கணும்.
யாரும் எழுப்பாம நானே எந்திரிக்கணும் . நாள் முழுக்க என் வேலைய நானே செய்யணும் . நான் செய்யற ஒவ்வொரு வேலையிலயும் அவ பிரிவு என்னை உறுத்தணும்.
புருசனுக்கு முன்னால போய் சேரரது பொம்பளைங்களுக்கு வரம். ஆனா வயசான காலத்துல பொண்டாட்டி இல்லாம புருஷங்க வாழறது ரொம்ப பெரிய சாபம். அந்த சாபத்தோட பலனை நான் அனுபவிக்கணும்.
உங்கம்மாவுக்கு நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன். அதையெல்லாம் தீர்க்கணும்னா இன்னொரு ஜென்மம் வேணும். அவ எனக்கு இத்தனை செஞ்சதுக்கு நான் ஏதாவது பதிலுக்கு செய்யணுமில்லயா.? அதுக்காகவாவது நான் தனியா இருக்கணும்.
நீ கூப்பிடறேன்னு உன் கூட வந்துட்டா இந்த வீடு இருண்டு போய்டும். அது அவளையே அனாதையா அலைய விடறதுக்கு சமம். அவ எப்படி இந்த வீடு இருக்கணும்னு ஆசை பட்டாளோ அப்படி இந்த வீட்டை வச்சுக்கறதும் அவ ஆசை ஆசையாய் உருவாக்கின தோட்டத்தை பராமரிக்கறதும் தான் அவளுக்கு நான் செய்யற நன்றிக்கடன்.

காலைல எந்திரிச்சதும் குழந்தை , அம்மாவை தேடறமாதிரி தோட்டத்துல இருக்கிற செடி, கொடியெல்லாம் நாளைக்கு காலைல உங்கம்மாவை தேடும். தண்ணி ஊத்த, பூ பறிக்க அவ இல்லன்னா வாடி வதங்கிடும். அம்மா இல்லனா என்ன?. அப்பா நானிருக்கேன்னு நான் அதுங்களுக்கு காட்டணும்.

தனியாத்தான் இருக்கானே, எனக்கேதும் ஆயிடுமோனு நீயோ பாலாவோ கவலைப்படாதீங்க. உங்கம்மா என்னை பார்த்துப்பா. எனக்கொண்ணும் ஆகாது

நான் தனியா இருந்தாதான் உங்கம்மாவோட நினைப்புலயே இருக்க முடியும். தனியா இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. உங்கம்மாவும் எனக்குமான தனி உலகத்துல அவளோட பேசிகிட்டு அவ நினைப்போடவே நான் இருந்துடறேனே... தயவு செஞ்சு என்னை இப்படியே விட்டுரு வேணு...."

நான் முதல் முறையாக விசும்புவதை கண்ட வேணு கண் கலங்கி என்னை அணைத்துக்கொண்டான்.


( முற்றும் )

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன் (22-Jul-20, 11:43 am)
பார்வை : 166

மேலே