கோவணம்

கழனியிலே விளைஞ்ச பயிரை
களத்து மேட்டில் கதிரடிப்பார்.
விளைஞ்சு நின்ன பூமி இப்போ
களத்து மேடா மாறிப்போச்சு.
நிலம் உழுது பயிர் செஞ்சு
வளமா எங்க வாழுறோம்?
பலமுள்ள இடைத்தரகன்
பங்குபோட்டு அள்ளுரான்.
பயிர் விளையும் நிலத்தில் இவர்
வீடுகளைக் கட்டுவார். பின்னே
பசி போக்க, துணி நனைச்சு
வயிற்றில் வச்சுக் கட்டுவார்.

தண்ணீர் ஓடும் பாதையெல்லாம்
சுத்தி சுத்தி அடைக்கிறார், எங்க
கண்ணீர் ஓடை அடைக்க மட்டும் எல்லோருமே மறுக்கிறார்.

அங்க இங்க கடன வாங்கி
பயிரை வளர்த்துக் காக்கிறோம்.
அறுப்பறுத்து நட்டமாகி
நடுத்தெருவுல நிற்கிறோம்.
கடனுக்காக உருட்டி, எங்க
கட்டைவிரலும் கடுகாச்சு.
கடன் அடைச்ச பாட்டக் காணோம்.
காசு பணம் பார்க்கக் காணோம்.

விளைநிலத்தை சாலையாக்க கயிறு
வச்சு அளக்கிறான்.
வெறுத்துப்போன விவசாயி கயிறு
மாட்டித் தொங்குறான்.

பயிர் வைக்கும் பாத்தியெல்லாம்
வாட விட்டாய்.
உயிர் பிழைக்கும் பாதையெல்லாம்
மூடி விட்டாய்.
பொருட்டாக நினையாமல் எனை இருளிலே இருத்திவிட்டாய்.
இருளுக்குள் புதைவது நீயும்தான்
அதை மறந்துவிட்டாய்.
வெளிச்சம் நான் உள்ள இருட்டில்
ஒளிரட்டும்.
விவசாயம் செழிப்பாய் இந்நாட்டில்
மிளிரட்டும்.

இரக்கம் கொண்டு சொல்லுங்கள் வெளிச்சம் எங்கே?
கொஞ்சம் இறங்கி வந்து காட்டுங்கள் வேர்கள் எங்கே?


ச.தீபன்
94435 51706

எழுதியவர் : தீபன் (25-Jul-20, 4:11 pm)
Tanglish : kovanam
பார்வை : 182

மேலே