சிவப்புப் புழுதி
குடும்பத்தின் நாட்காட்டியை
புரட்டித் திரிந்த கால்கள்
காது கேட்காமல்
கட்டிலோரம் ஒதுங்கிக்
கொள்ளும்...
வலியின் வாய்கள்
வயிற்றை
மெல்ல மெல்ல
கடித்து உண்ண....
குட்டிப் பிரசவம் ஒன்று
பிதுங்க வைக்கும்...
இரத்தப் புழுதியோடு
கடக்கும் கணங்கள்
குளிரான குடத்தையும்
குறுகுறுக்க வைத்துவிடும்...
கீறி,கிளப்பும் உணர்வுகள்
கிரங்கவைத்து,
கிச்சிலாட்டத்தையும்
தொடரவைத்துவிடும்...
எரிச்சலும்,
கோபமும்,
கொத்துக் கணக்கில்
கொட்டப்பட்டுவிடும்...
சபைகளில்
சலசலப்பாக இருக்க
மனம் மடங்கின்
தொடராகக் கேள்வி கேட்கும்...
தேகத்தின் வேர்களில்
உறங்கும் அன்பின் தாகங்கள்
முகக் கண்ணாடியில்
வெடிப்புக்களாகப் புலப்படும்...
ஆனாலும்
அன்றாடக் கடன் எல்லாம்
ஆறாவாரம் இல்லாமல்
அரங்கேற்றப்பட்டு விடும்....
மூன்றுக்கும் ஏழுக்குமான
சூனியச் சூத்திரத்தில்
விடை கண்டு
மீண்டும் வினா எழுதும்
அடுத்த மாதவிடாய் தேர்வுக்கு...
(இஷான்)