நிலையில்லா நினைவுகள்
நந்தாவின் நண்பன் சுரேஷ் அவனை கேலிசெய்தான்; என்னடா, உன் சாப்பாடு பாக்ஸில் அடிக்கடி இடியாப்பம் இருக்கு; இதுக்கெல்லாம் எப்படி நேரம் இருக்கு? உன் மனைவிக்கு;
நந்தகோபால், "கல்யாணம் ஆன புதிதுல இடியாப்பம் விரும்பி சாப்பிட்டேன்; அதுல இருந்து எனக்கு பழக்கமாகிவிட்டது; அவளும் அடிக்கடி அதை செய்து கொடுக்கிறாள்; "
சுரேஷ்," டேய், நீ சும்மா எல்லாம் எதையும் விரும்ப மாட்டியே ; ஏதோ இருக்கும்; என்னடா ? பிளாஷ் பேக் சொல்லுடா ?"; அவன் வாயை கிளறினான்;
(நந்தகோபால், வெட்கமுடன் ஐந்து வருடத்திற்கு முன் என்று பேசத் தொடங்கினான்; கிட்டத்தட்ட அன்றய நாட்களில் வாழத் தொடங்கினான்;
அவன் பின்னாடியே சுரேஷும் போனான்; நாமும் போவோமே😉
நந்தகோபாலுக்கு தான் ஏன் இப்படி ஆனோம் என்று தெரியவில்லை; ஆனால் நடக்கிறது; இந்த ஒரு வாரமாக அவளை எப்போ பார்ப்போம் என்று தோன்றுகிறது; எதுவும் பிடிக்கவில்லை; சாப்பிட, குளிக்க, எந்த வேலையும் செய்திட பிடிக்கவில்லை; அவள் சந்திரிகா;எத்தனையோ முறை இதே தெருவுல அவளை ஒரு ரெண்டு முறை பார்த்திருக்கிறேன்; ஆனால் அப்போதெல்லாம் ஈசி ஆக கடந்து போயிருக்கிறேன்; இந்த ஒரு மாதமாக தான் பார்த்தாலோ பேச்சு வரவில்லை; பார்க்காவிட்டாலோ எதுவும் செய்திட பிடிக்கவில்லை;
எப்போதிருந்துன்னா, சரியாய் போனமாதம்; (டேய், நந்தா பிளாஷ் பேக் குள்ள இன்னொன்னா ? லஞ்ச் டைம் முடிந்துடும் கொஞ்சம் சீக்கிரம் ஆகட்டும் என்று நான் சொல்வது அவன் காதுக்குள் கேட்கவில்லை என்று புலம்பியபடி அவனை தொடர்ந்தான் சுரேஷ் )
போன மாதம் நல்ல மழை, எல்லோரும் ஒரு ஓரமாக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தோம்; அப்போது ஒரு இடியாப்பம் விற்கும் பையனும் அங்கு வந்து ஒதுங்கினான்; சந்திரிகாவும் அவள் பிரென்ட் ம் நின்று கொண்டிருந்தார்கள்; (அவர்கள் பேச்சில் அவள் சந்திரிகா என்றும், அவள் தோழி பிரியா என்று புரிந்தது; )
சந்திரிகா, " இடியாப்பம் தம்பி, ஒரு ஐம்பது ரூபாய்க்கு இடியாப்பம் கொடு" ;
பிரியா," ஏய் , சந்திரிகா ;என்ன நீ இங்கெல்லாம் இடியாப்பம் வாங்குற ?";
சந்திரிகா, (அந்த பையனிடம் காசு கொடுத்து வாங்கினாள்), என்ன கேட்ட ?";
பிரியா," இல்லை; அந்த பையனிடம் சுத்தம் இருக்குமா ? அவனிடம் போய் வாங்குறியேன்னு";
சந்திரிகா, " இவங்க செய்றது ஒரு குடிசை தொழில்; ஒரு குடும்ப தொழில்; இதுல நல்ல உழைப்பு இருக்கு; இப்போ, மணி என்ன ? எட்டு; அவன் பாதி இடியாப்பத்துக்கு மேல வித்துட்டான்; அப்போ, அவங்க எத்தனை மணிக்கு எந்திரிக்கணும்? அவங்க உழைப்பு எவ்வோளோ கடினமானது ?, அவங்க பொருளும் சுத்தமா இருக்கு பாரு ; ";
பிரியா ," என்ன சொல்ல வர்ற நீ?";
சந்திரிகா, " மற்றவங்க உழைப்பை நாம் மதிக்க தவறினால், இந்த சிறு தொழில் எல்லாம் நலிந்து போய்விடும்; அவர்கள் பிழைக்க வழி இல்லாத போது தப்பான பாதையில் போக வேண்டியிருக்கும்; அதுக்கு அவங்க தொழிலை இப்பவே நாம சப்போர்ட் பண்ணால் நம் சமூகத்துக்கும் நல்லது; "
பிரியா," நீ வாழ்க ; உன் குலம் வாழ்க ; நீ சொல்றதிலும் உண்மை இருக்கு; இனி நானும் இவர்களை போன்ற சிறு தொழில் செய்பவர்களை ஆதரிப்பேன்;
சந்திரிகா, " ஆமாம்; இவங்க மட்டும் இல்லை; தள்ளு வண்டில கறிகாய் விற்பவங்க, கூடைல மீன் விக்கிறவங்க எல்லோரும் அன்றாடம் காட்சிகள்; அவர்களை ஆதரிக்கணும்; "
பிரியா," நிச்சயம் செய்றேன் ; நீ உன் பிரச்சாரத்தை நிறுத்திரையா? நீ நிறுத்தலைனா, பஸ் போய்டும் " என்றதும் இருவரும் சிரித்தார்கள்;
நான் மட்டும் சந்திரிகாவை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்;
எத்தனை அற்புதமான சிந்தனை; சிறந்த சமுதாய அக்கறையும், கருணையும் உள்ள பெண்ணால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்;
அவளின் நினைவில் நான் தொலைந்து கொண்டிருந்தேன்;
சுரேஷ் ," டேய், வெளிய வாடா; மகா ராஜா; நில்லு; உன் மனைவி பெயர் செல்வி தானே; அப்போ சந்திரிகா நினைவில் மட்டுமா ? பேஷ், பேஷ் , ரொம்ப நல்லா இருக்கு ;"
நந்தகோபால்," டேய், உனக்கு கிண்டலா இருக்கா? ";
சுரேஷ்," பின்ன சுண்டலை சாப்பிடற மாதிரி இருக்கு; பின்ன என்னடா ? ; உனக்கு பிடிக்கும் னு உன் மனைவி அடிக்கடி இடியப்பம் செய்றாங்க : அவங்களுக்கு ஒரு முறையேனும் நன்றி சொல்லிருக்கியா ? ";
நந்தகோபால், " சொல்லாமலா ; அதெல்லாம் அடிக்கடி... என்று வார்த்தைகளை முழுங்கினான் ";
சுரேஷ்," தெரியும் டா; வாழ்க்கையில் கனவுகள் இருக்கலாம்; அது நிச்சயம் நம்மை ஒரு உயரத்தில் கொண்டு சேர்க்கும்; ஆனால், நினைவுகள் மட்டுமே வாழ்க்கைன்னா நிஜங்கள் தொலைந்து போகும்; "
நந்தகோபால்," நானும் அவங்க மேல நல்ல அன்பா தான் இருக்கேன்; "
சுரேஷ்," வாழ்வது வேறு; இருப்பது வேறு; உன் சந்திரிகா வை பற்றி பேசும்போது உன் நினைவுகளில் வாழ்ந்தாயே ; அது போல வாழ்வது தான் வாழ்க்கை; வாழ்க்கை என்பது வரம் ; நம்மை சுற்றி நமக்காக வாழ்பவர்கள் பற்றி தெரியணும்னா நாம் நிஜத்தில் கொஞ்சம் வாழணும்; நிறைய பேர் பழகினவர்களை மறக்க முடியாமல் நம் மீது அன்பு கொண்டவர்களை தண்டிக்கிறார்கள்; "
நந்தகோபால், " என்னடா , செய்றது ; முதல் காதல் மறக்க முடியலை; "
சுரேஷ்," அதை நான் மறுக்கலை; டேய், படி படியாய் நாம் வாழ்வில் வளர்ந்துட்டே வருகிறோம்; பிளஸ் 2 ல படிச்சதை தான் காலேஜ் வந்து படிப்பேன்னு ஆடம் பிடிப்பதில்லை; ஆனால் பிளஸ் 2 பாடம் நாம மறக்கணும்னு இல்லை; அது போல தான் இன்றய நாளும், உன் அன்புக்காய் ஏங்கும் உறவுகளும் தான் நிஜம்; நாளை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது; இன்றய நிஜத்தை பார்க்க பழகு; அப்போது தான் உன் வாழ்வில் எப்போதும் சந்தோஷம் இருக்கும்; நாம விரும்புறவங்க நிழலை விட நம்மை விரும்புகின்ற நிஜங்களுக்கு மதிப்பு கொடுக்கணும்; அதில் தான் நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் மொத்த வாழ்க்கையும் இருக்கிறது; "
நந்தகோபால், " சுரேஷ், நிஜத்தோடு வாழ பழகிறேன்; என்னோட நண்பன் நீ, எனக்காக இத்தனை மெனக்கெடும் போது நானும் முயற்சி செய்கிறேன் ";
என்று முடித்தான்; செய்வானா ?
-----
காதல், காதல் என்றே
கனவில் வாழும் கவியே ...
நினைவில் வருமா உறவே...என
உணர்வில் உருகும் உயிரே...என பாடல் வரிகள் கேட்டு திகைத்தாள்;
பிரியா அவளின் பின்னாடியே வந்து அவள் நினைவுகளை கலைத்தாள் ; அவளை கலாய்த்தாள் என்றும் சொல்லலாம்;
பிரியா," என்னடி, ரொம்ப சீரியஸ் ஆன சிந்தனை;"
சந்திரிகா, "இல்லை அங்க ஒரு பாட்டிக்கு ஒரு ஆள் சாப்பாடு வாங்கி தறார்; அதை பார்க்கும் போது பழைய நியாபகம்";
(ஐந்து வருடம் முன்பு இதே கான்டீன், இதே இரு தோழிகள் ... வாங்க என்ன பேசறாங்கன்னு நாமும் கேட்போம்)
காதல், காதல் என்றே
கனவில் வாழும் கவியே ...
நினைவில் வருமா உறவே...என பாடல் வரிகள் கேட்டு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தாள் ;
ப்ரியா," என்னமா , கண்ணு, ரொம்ப சில்மிஷமான சிந்தனையோ ? முகத்தில் இத்தனை வெட்கம்; கொஞ்ச நாளா உன் பின்னாடியே ஒரு பாடி காட் போல ஒருத்தன் வாரான்; என்ன நடக்குது ? "
சந்திரிகா," அவன் இல்லடி; அவர்; நந்தகோபால்;ஆமாம் டி; எனக்கும் அவர் மீது ஒரு பிடிப்பு வருது; அடிக்கடி அவரை பார்க்கணும்னு தோணுது";
பிரியா," எப்போதிருந்து இந்த வியாதி உனக்கு ?";
சந்திரிகா," முதலில் அவர் என்னை பின் தொடர்ந்து வருகிறாரோன்னு எனக்கு கோபமாக இருந்தது; அப்புறம், போன மாதம் ரேஷன் கடைக்கு போயிட்டு வந்த எங்க அம்மா, மயக்கமாய்ட்டாங்க; அவரு தான் வீடு வரை கொண்டு வந்து விட்டுட்டு போனார்; எவ்வளவு நல்ல மனது ?";
பிரியா," அப்போ, உனக்கு அவரை பிடிச்சி உன்னை காதல் பிடிச்சிருச்சி ன்னு சொல்லு ; "
சந்திரிகா, " அப்படி தான் நினைக்கிறேன்; இன்னைக்கு வரை நான் யாரிடமும் இத பீல் பண்ணலை; அனேகமாக இது காதல் தான் னு நினைக்கிறன்; "
பிரியா," வாழ்த்துக்கள் டி, உன் ஆளை எனக்கும் அறிமுகப் படுத்தி வை";
சந்திரிகா,"நிச்சயம்; முதலில் நான் அவரிடம் கன்பார்ம் பண்ணிட்டு அப்புறம் உனக்கு அறிமுகம் படுத்தறேன்; "
பிரியா," ஓகே. ஓகே. குட்; "
ஒரே வாரத்தில் அவர்களின் காதல் வெகுவாக வளர்ந்தது; இருவரும் சந்தோஷமாக நாட்களை நகர்த்தினார்கள்; ஆறு மாதத்திற்கு பின்னர் இருவரின் வீட்டிலும் ஒத்துக்கொள்ளாததால் பிரிய நேர்ந்தது;
(பிரியாவின் தொண்டை கமறல் சத்தம் கேட்டு சந்திரிகா நினைவில் இருந்து மீண்டாள்)
பிரியா, "சாரிடி, இப்போ , உன் நினைவுகளை தூக்கி போடு; அதுக்கு இப்போ அவசியமில்லை; சரி, சரி, நீ இப்போ இந்த வருசத்துக்கு இறங்கி வாம்மா; கண்ணு; உன் கணவர் ரகு எப்படி இருக்கார் ? உன் பொண்ணு ஷாலினி ஸ்கூலுக்கு போய்ட்டாளா ? "
சந்திரிகா, " பழையதை எப்படி, மறக்க முடியும் ?";
பிரியா," அதுக்காக, நினைவுகளில் மட்டுமே வாழ முடியாது; நினைவு என்பது இறந்த காலம்";
சந்திரிகா," இருந்த காலமும் தானே";
பிரியா," இருக்கட்டும்; அதுக்காக அதையே நினைத்து வருந்தனுமா? உனக்கு தெரியாதது இல்லை;
நினைவுகள் நம் முன் பதிவுகள்;நிழல்களாய் நமக்குள் உலவும் அதிர்வுகள்
நிஜங்களின் தொலை தூர பார்வைகள்;
நம்மை உற்சாகப்படுத்தும் நினைவுகள் ஓடும் நீரோடை போன்றது; நமக்கு நல்லது செய்யும்; அதுவே நினைவுகள் நம் மனதை கஷ்டப்படுத்தினால் தேங்கி நிற்கும் நீர் போன்றது; கெட்ட நீராக மாறி இருக்கும் இடத்தை கெட்டதாக மாற்றிவிடும்;
நினைவுகளில் வாழும்போது நமக்கு நிஜத்தை கவனிக்க மறந்திடுவோம்; அதனால் நிஜத்துக்கு வா ; என்று தனது அறிவுரைகளை அடுக்கினாள் பிரியா ;
சந்திரிகா, " சரிடி, நிச்சயம் முயற்சி பண்றேன் என எழுந்தாள் அந்த இடத்தை விட்டு;" , நினைவினின்று எழுவாளா ?
-------
மாலை வேளை இன்று கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தால் சந்திரிகா; அவள் பெண்ணும், அவள் கணவன் ரகுவும், யாரோ ஒரு முதியவரை வீட்டிற்குள் அழைத்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள்; அப்போது, அவள் குழந்தை ஷாலினி, அம்மா இந்த அப்பாவுக்கு தினமும் யாருக்கேனும் உதவி செய்யவில்லைன்னா தூக்கமே வராதும்மா என்றாள்; சட்டென நினைவில் வந்த நந்தகோபாலின் முகம் இன்றய ரகுவின் முகமாய் மாறியது; நிஜத்தின் உண்மையில் நினைவுகள் மறைந்தது; சந்திரிகா அவள் மகளிடம் பிறர்க்கு உதவி செய்வது ரொம்ப நல்லது என்று கூறி விட்டு காதலோடு கணவனின் முகம் பார்த்தாள்; ரகுவோ மனைவியின் காதல் கண்களில் தன் முகம் தெரிவதில் சந்தோசத்தில் திளைத்தான்;
----
வண்டி நிறுத்தும் இடத்தில் இருந்து நந்தகோபால் தனது மனைவி செல்வி பக்கத்துக்கு வீட்டு பரிமளத்திடம் சொல்வதை கேட்டான்;
பரிமளம்," ஏன், செல்வி ? தினம் இந்த வண்டி காரன் கிட்ட காய் வாங்கறதுக்கு உங்க வீட்டு காரர் கிட்ட சொன்னால் அமேசான் ல ஆன்லைன் ல வாங்கலாம் இல்ல;"
செல்வி, " அக்கா, தினமும் நம்மை நம்பி வாழற இவங்களை நாம மதிச்சால் தான் அவங்களும் பிழைக்க முடியும்; எத்தனை ஆன்லைன் வந்தாலும் மனுஷாளுக்கு ஒண்ணுன்னா மத்த மனுஷாதான் உதவனும்; அதுக்கு இவங்கள போல நல்ல உழைப்பாளிகளுக்கு நாம உதவி செய்யணும்; "
நந்தகோபாலின் வருகையை பார்த்து பரிமளம் சென்று விட்டார்; செல்வியும் அவன் டிபன் போக்ஸ் யை வாங்கினாள்; தனக்கு சந்திரிக்காவிடம் எந்த குணம் பிடித்ததோ அதே குணம் தன் மனைவிக்கும் இருப்பதை இன்று உணர்ந்து கொண்டான்;
நிஜத்தின் தன்மை உணர்ந்து செல்வியை முதல் முறை பாராட்டினான்; செல்வியின் முகம் வெட்கத்தில் சிவந்ததுன்னு சொல்லவும் வேண்டுமோ? இருங்க மாமா, காபி ஆறிடுச்சி; சூடா கொண்டுவரேன் என்று கிச்சனுக்குள் ஓடினாள்;
நினைவுக்கும், நிஜத்துக்கும் உள்ள சுவையை ஒரு கப் காபி யில் செல்வி உணர்த்திவிட்டாள்; இனி நந்து சூடான காபி தான் சாப்பிடுவான்;