பாவ - புண்ணியம்
பாபுவும், பிரசாத்தும் நண்பர்கள்; அவ்வப்போது இவர்கள் தங்களுக்குள் ஆரோகியமான விவாதம் செய்வார்கள்; எது சரி? எது தவறு ? என்று. அன்றும் அப்படித்தான்; பாபு மிகவும் கோபமாக இருந்தான்;
பிரசாத், " என்னடா? பாபு; ரொம்ப கோபமாக வருகிறாய் ? ";
பாபு," என்னை எதுவும் கேட்காதே; நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்";
பிரசாத், " டேய், அதைத்தானே நானும் சொன்னேன்; என்ன கோபம் ?";
பாபு, " நான் சொல்லும் எதையும் என் தாய் கேட்பதே இல்லை"; நீயே சொல்லு; போன மாதம் எங்க அம்மாவுக்கு நல்ல காய்ச்சல்; இப்போது தான் உடம்பு நல்லபடி தேறுது; உடனே அவங்களுக்கு அவங்க பொண்ணு வீட்டுக்கு போகணும்; பேர பிள்ளைகளை கொஞ்சனும்; அடுத்த மாதம் போங்கன்னு சொன்னால் கேட்க மாட்டேங்குறாங்க ";
பிரசாத்," சரிடா. இப்போ உனக்கு யாரு மேல கோபம்? அம்மாவை கவனிக்க வராத அக்கா மேலயா?இல்லை இங்க வந்து ரெஸ்ட் எடுக்கிற உன் அம்மா மேலயா? உன் கோபம் யாருமேல?"
பாபு, (தடுமாறினான்) அது வந்து எனக்கு எல்லோரின் மேலும் தான்; "
பிரசாத், " சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காத; ஒழுங்கான வேலைக்கு போகாத உன் அத்தானை வைத்துக் கொண்டு ரெண்டு குழந்தைகளையும் வளர்க்க உங்க அக்கா போராடுறாங்க; உனக்கும் சிரமம் கொடுக்க கூடாதுன்னு அத்தனை கஷ்டத்தையும் தனக்குள் வைத்து ... அவங்களுக்கு உதவ உங்க அம்மா போறது நல்லது தானே; இதில் உனக்கு விருப்பமில்லையா ? இல்லை உன் மனைவிக்கு விருப்பம் இல்லையா ?"
பாபு, " (நேரடியான என் கேள்வியில் தலை குனிந்தான்; ) இல்லடா.. நான் சொல்ல வருவது.. ;
பிரசாத்," இந்த உலகம் யாரையும் எதிர்பார்த்து இல்லை பாபு ; நாம் இருந்தாலும் இல்லாவிடினும் உலகம் சுழன்று கொண்டு தான் இருக்கும்; இந்த உலகமே பிரபஞ்சத்தில் ஒரு துளி; அப்போ, நாம் அந்த துளிக்குள் தெரியவே மாட்டோம்; கரெக்ட் ஆ ?";
பாபு ," சரி;அப்போ நமக்கு என்னடா இங்கு வேலை ? "
பிரசாத்," நல்ல வேலை; கடவுள் நம்மை ஏன் படைத்தார் ? என்று கேட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் ஸ்ட்ரெயிட் ஆக பாயிண்ட் க்கு வந்துட்ட; ஒரு சின்ன எக்ஸாம்பிள் சொல்லவா? உங்க அம்மா அக்கா வீட்டுக்கு போனாலும் போகாட்டியும் அக்கா வேலைக்கு போயி தான் ஆகும்; ஓகேவா? உன் மனைவி வீட்டில் இருப்பதால் அவங்களுக்கு உங்க அம்மாவின் தேவை இல்லை; ஒரு ஈகோ வுக்கு உங்க அம்மாவை போகக் கூடாதுன்னு சொல்ராங்க ரைட் ஆ ?"
உங்க அம்மா பெரியவங்க; தேவை இருக்கிற இடத்தில இருந்து உதவி செய்யணும்னு உங்க அம்மா அம்மா நினைக்கிறாங்க; இதில் என்ன தப்பு ? ";
பாபு ," என் கேள்விக்கு பதில் இதுவா ? இந்த உலகத்தில் நமக்கு என்ன வேலை?" ;
பிரசாத், " உங்க அம்மாவை போல நல்லது செய்திடும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருக்கணும்; பிறருக்கு உடனே ஓடி போய் உதவி செய்யணும்; இது தான் இந்த உலகத்தில் நமக்கான வேலை; "
பாபு," அது எப்படி முடியும் ? கடவுள் அதற்காகவா இந்த உலகம் படைத்தார் ? ";
பிரசாத்," ஒன்னு நன்றாக புரிஞ்சிக்கோ, இறைவன் நம்மை மட்டும் படைக்கவில்லை; இந்த உலகின் எல்லா உயிர்களையும் படைத்தார்; மற்ற உயிர்களால் இதை உணர முடியாது; மனிதர்களான நம்மால் இதை உணர முடியும்; அதனால் நம் முன்னோர்கள் நாம் நலமுடன் வாழ நல்ல வழிகளை நமது இதிகாசமாகவும், சம்பிரதாயமாகவும் சொல்லி சென்றுள்ளனர்; "
பாபு," நீயும் அந்த பழைய கதைகளையே சொல்லாதே";
பிரசாத்," நீயும் மத்தவங்க மாதிரி பழைய கதைன்னு ஒதுக்காதே; உனக்கு சயின்ஸ் தெரியும், இன்றய விஞ்ஞானமும் தெரியும்; இன்றய கண்டுபிடிப்பில் ஏதாவுது ஒன்று நமது புராணக் கதைகளில் இல்லை என்று சொல்லு பார்ப்போம்; ஏன், இன்றைய விமானம், வாட்ஸாப்ப் வீடியோ சாட் (அன்று கிருஷ்ண பரமாத்மா எல்லோருக்கும் காட்டி இருப்பார்)
எல்லாமே இதிகாசத்துல யூஸ் பண்ணி இருப்பாங்க ;ஒத்துக்கறியா?"
பாபு," ஆமாம்டா ; நான் கூட சினிமா ல பார்த்தேன்; "
பிரசாத்," நம்ம தமிழர் பண்பாடும், அறிவுத்திறமும் ரொம்ப அதிசயமானது; பாதுகாக்க வேண்டியது; அதை ஒப்புக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ளும் அளவு அறிவில்லாதவர்கள் தான் நம் வேதங்களையும் அதன் அர்த்தங்களையும் குறை சொல்வார்கள்;
உன்னை என் சாமி தாத்தா விடம் அழைத்து செல்கிறேன்; அவர் உனது எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறுவார்;
என்னை விட உன் கேள்விகளுக்கு நன்றாக பதில் சொல்லக் கூடியவர் அவர்; ஒரு பண்டிதர்; நிறைய கற்றவர்; உனது கேள்விகளுக்கு பதில் கூறுவார்; என்னுடன் வா என்று அழைத்து செல்கிறான்;
பெரியவர், " வாப்பா பிரசாத்; ரொம்ப நாளா ஆளை காணோம்; அவசியமில்லாம வர மாட்டியே ? என்றவாறு பாபுவை பார்த்தார்; யார் இந்த தம்பி ?
பிரசாத்," ஆமாம் சாமி தாத்தா; இவன் என் நண்பன் பாபு; இவனுக்கு சில கேள்விகள் இருக்கு; அதற்கான பதில் நீங்க தான் சொல்வீங்கன்னு கூட்டிட்டு வந்திருக்கேன்;
பெரியவர், " சொல்லுப்பா; பாபு ; உனக்கு என்ன பதில் தேவை ?; உனக்கான பதிலா, இல்லை உண்மையான பதிலா ?”;
பாபு," தாத்தா சாமீ, உண்மையான பதிலே சொல்லுங்க நான் புரிஞ்சிப்பேன் ; இந்த உலகத்தை படைத்த இறைவன் நம்மை அதாவது மனிதர்களை எதற்கு படைத்தார் ? இந்த உலகில் நமது செயல்பாடுகள் என்ன ? இது தான் என் கேள்வி ";
பெரியவர்," இறைவன் இந்த உலகம் நல்லபடி இருக்க அனைத்து உயிர்களையும் படைத்தார்; மனிதன் மட்டும் போதாது இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் இருந்தால் தான் அதாவது நுண்ணுயிர்கள் முதல் தாவரங்கள் என எல்லாமே இருக்கணும். அப்போது தான் உலகம் சம நிலையில் சீருடன் இயங்கும் ; இன்று மனித இனம் தன இனத்தை பெருக்கி பிறவற்றை அழிப்பதை தான் குளோபல் வார்மிங் னு நீங்க சொல்றீங்க; சரியா ?";
பாபு," ஆமாம் ; சாமீ; " (அவன் விழிப்பது பார்த்து அவர், இரு உன் கேள்விக்கு வருகிறேன் என்று சிரித்தார்)
பெரியவர்," உனக்கு புரியும்படி சொல்லனும்னா , இன்னைக்கு நீங்க விளையாடறீங்களே கம்ப்யூட்டர் கேம்ஸ் அது உனக்கு விளையாட தெரியுமா ?";
பிரசாத், " நல்லாவே விளையாடுவான் தாத்தா; "
பெரியவர்," அப்போ, நல்லதாப்போச்சு; (நான் என் பேரன்கள் கிட்ட கத்துக்கிட்டேன் என்று தொடர்ந்தார்;) ஒரு லெவல்ல இருந்து அடுத்த லெவல் போறது போல நம்ம பிறப்பு இறப்புக்குன்னு ஒரு கணக்கு இருக்கு; இன்னாருக்கு இன்னார் பிறக்கணும்; இவனுக்கு இது நடக்கணும் னு முன்னமே எழுதி வைக்கப் பட்டிருக்கிறது; இல்லையனா நாம ஏன் எல்லோரும் ஒரே மாதிரி வாழலை ? அந்த கணக்குக்கு பெயர் தான் பாவ புண்ணியம்;
உன் கேள்விக்கான பதில் இங்கு தான் வருது; மனித ஜென்மம் என்பது இறைவனை அடையும் எளிய வழி; போனஸ் பாயிண்ட் மாதிரி; ஆனால், நாம யாரும் அதை பயன்படுத்துவதில்லை; உலகியல் சுக போகங்களில் நம் நேரத்தை செலவு செய்கிறோம்; கரெக்ட் ஆ ? "; என நிறுத்தி அவர்களுக்கு புரிந்ததா என கவனித்தார்;
பாபு, " புரியுது மேல சொல்லுங்கோ தாத்தா ";
பெரியவர்," நாம அட்லீஸ்ட் பாவ கணக்கை குறைத்து, புண்ணிய கணக்கை சேர்க்கணும்; அதை தான் இந்த உலகில் தேடணும்; பிச்சை இடும்போது கூட அவனுக்கு பிச்சை இடும் சந்தர்ப்பம் உனக்கு வந்ததேன்னு நன்றி சொல்ல சொன்னார் சுவாமி விவேகானந்தர்; உனக்கு இல்லாவிடில் அந்த சந்தர்ப்பம் இன்னொருவனுக்கு அளிக்கப்படும்; அது போல நாமாக தேடி சென்று ஒருவர்க்கொருவர் உதவும் சந்தர்ப்பத்தை தேடணும்; அதன் மூலம் நல்ல பிறப்பை அடைய முடியும் ; இன்னும் முயன்றால் பிறவா நிலையும் அடைய இயலும்; அதற்குத்தான் இந்த பிறவி; " என்று நிறுத்தினார்;
பாபு," அப்போ, எதெல்லாம் பாவம் ? எதெல்லாம் புண்ணியம் தாத்தா? ";
பெரியவர், " எளிய வழி எப்போதும் நல்லவற்றை மட்டுமே சிந்திப்பது அனைத்திலும் சிறந்தது; இல்லையேல் , நமது பாவத்தை நிர்ணயிப்பது நம் (சு)பாவம் இதில் வரும் பாவம்;
பா..வம் அதாவது ஒரு செயலின் நோக்கமே பாவ புண்ணியத்தை தீர்மானிக்கிறது; ஒரு பேச்சுக்கு , ஒரு வியாபாரி இருக்கிறான், அவன் வியாபாரம் செய்யும் போது அவன் தேவை கேற்ற லாபம் வைக்கும்போது பாவமாகாது; அதே அவனது நோக்கம் பிறரை ஏமாற்றும் போதோ, பிறருக்கு தீங்கிழைக்கும் போதோ, அது பாவ கணக்கில் சேரும்; இதே போல எல்லா செயல்களிலும் சிந்தித்து பார், தர்மமே செய்தாலும் உனக்கு புண்ணியமாகும் என்ற நோக்கத்தில் நீ செய்தால் அது
உன் கணக்கில் வராது; புரிஞ்சுதா ?" தம்பி நீ உன் நண்பன் ப்ரசாத்துக்கே ஒரு உதவி செய்தாலும் உன் உள்ள நோக்கமே இறைவனின் கணக்கு; புரிகிறதா ?"
பாபு, " புரிந்தது சாமி; ஆனால் எப்போதும் இதை எப்படி சிந்திப்பது ?";
பெரியவர், " சிரித்தார்; நல்ல கேள்வி; யாரேனும் அவரவர்க்கு தீங்கு நெனைப்பாரோ ?";
பிரசாத்," அதுஎப்படி தாத்தா ?;
பெரியவர்," அதை தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் " தன்னை போல் பிறரை நினை " ஒரு போதும் பிறர்க்கு தீங்கு மறந்தும் செய்திட இயலாது ன்னு ";
பாபு, பிரசாத் இருவர் கண்ணிலும் ஒளி; ஆமாம் என்றனர் கோரஸாக;
பாபு, "சரி தாத்தா நீங்க சொன்னதை இனி நான் கரெக்ட் ஆக செய்து நல்லதை பெற முயற்சி செய்கிறேன்";
பிரசாத், " சரிங்க சாமி தாத்தா ; உங்க விளக்கம் அற்புதம்; நானும் அதன் படி நடக்கிறேன்;"
பெரியவர், " நல்லபடி வருவீங்க; நல்லபடி போயிட்டு வாங்க ";
(இருவரும் விடை பெற்றனர்; )
பாபு, " இப்போ சொல்லுடா, எங்க அம்மாவை புரிஞ்சி அவங்கள அக்கா வீட்டுக்கு அனுப்பனும்; சரியா ?; அதாவது நம்ம சுயநலமோ, ஈகோ வோ இல்லாமல் செயல்படனும் ; எப்போதும் பிறர் ஒரு விஷயம் நம்மிடம் கேட்கும்போது "நான்" என்பதை விட்டு இறங்கி கேட்கும் அவர்கள் நிலையில் நம்மை வைத்து சிந்திக்கணும்; சரியா? ";
பிரசாத்," கரெக்ட், அப்படி சிந்திக்கும் போது நமக்கு அவர்களின் மனநிலை புரியும்; அவர்களின் மன நிலை புரிந்தால் யாரும் யாரையும் மனம் புண்படும்படி நடக்க முடியாது; இந்த உலகில் எல்லோரும் சந்தோசமாக இருக்க முடியும்;"
பாபு, " உண்மை தான்; என் மனைவியின் சொல்லக்கேட்டு நானும் அம்மா மனசு கஷ்டப் படும்படி பேசிட்டேன்; ஒருவருக்கொருவர் ஆதரவுக்கு தானே உறவுகள்; இந்த உலகில் உறவுகளை மதித்து நட்பை கூட அண்ணன் தம்பி மாதிரின்னு சொன்ன காலம் போயிடுச்சி; இன்னைக்கு நட்பை தான் உறவுன்னு சொல்லி கொண்டாடுறாங்க; "
பிரசாத்," என்னடா ? அது தப்புன்னு சொல்லறீயா; பேச்சுவாக்கில் என்னையவே வேறன்னு சொல்ல வற தானே";
பாபு," சேச்சே , என் எண்ணம் அது இல்ல டா; எங்க அப்பாரு காலத்துல எல்லாம் அத்தையோ , மாமாவோ, யாரோ ஒருத்தர் சேர்ந்து தானேடா வாழ்ந்தாங்க; ஒரே குடும்பமாக நல்ல மதிப்போடு தான் இருந்தாங்க; நீயே சொல்லு; ஒரு குடும்பத்தில் ஒரு பயன் நல்லா ஓஹோ ன்னு செட்டில் ஆவான்; இன்னொருத்தன் கொஞ்சம் சம்பாத்தியம் கம்மி தான்; பெரியவன், சின்னவன் குடும்பத்துக்கு உதவனும் இல்லையா ? அப்படி செய்யாமல் எல்லோரும் தனித்தனி யாக இருக்கும்போது குடும்ப பகை தான் நிறைய வளரும்; அது தான் இப்போ நம்ம நாட்டில ரொம்ப பெரிய வைலென்ஸ் ஆக பரவி இருக்கு; நாம சேர்க்கும் சொத்து நம்ம குழந்தைகளை தனிமை படுத்தது ; "
பிரசாத், " டேய், சாமீ தாத்தா பார்த்தப்புறம் ரொம்ப பெரிய சிந்தனையாளனாய்ட்டயே ; பெரிய தத்துவ ஞானி ஆகிடப்போற ";
பாபு," எல்லோரும் நட்பா இருப்பதும் நல்லது தானே டா "; சரி நெக்ஸ்ட் சாட்டர்டே சந்திப்போம்; ";
பிரசாத்," சார், நடுவுல போன் ஆவது போடுங்க சார்.. "; எனவும் இருவரும் சிரித்தனர் ; (இன்று முதல் சிந்திப்பார்)
பாவம் என்பது செயலின் பாவத்தை பொறுத்தது; செயலின் நோக்கம்;

