கண்ணா உன்னைத் தேடுகிறேன்

கண்ணா உன்னைத் தேடுகிறேன்
வா வா
கண்ணீரும் அழுகிறது உன்னைக் காண
வா வா

நீயின்றி நொடிகள் எல்லாம் நகராமல் இருக்கிறது
நீலவானம்  கூட  நிறம் மாறி  வருகிறது
உடலுடன் உயிரும் ஏனோ
தனியே விலகிச் செல்கிறது
உணர்வுகள் நித்தம் ஏனோ
ஓயாமல் ஓலமிடுகிறது

பார்க்காமல் என் விழிகள் பழுதாகி
போகிறது
பாவைமனம் உன்னைக் காணாமல்
பரிதவித்து நிற்கிறது
பேசிய சொற்கள் எல்லாம் பேரின்பம் அளிக்கிறது
பேசாத நாட்கள் என்னைச் சூழ்ந்து
கொல்கிறது

கண்ணா உன்னைத் தேடுகிறேன்
வா வா
கண்ணீரும் அழுகிறது உன்னைக் காண
வா வா

கைக்கோர்த்து நாம் நடந்த சாலைகளும்
கேட்கிறதே
கைப்பேசியில் நாம் கதைத்த நினைவுகளும்
நெஞ்சை சுடுகிறதே
துயில்கொள்ள மடியின்றி என் உறக்கமும் கலைகிறதே
துணையின்றி நான் சென்றால்
துயரங்கள் அணைக்கிறதே

இரவினில் இனிய கனவுகளும் தனிமையில் வருந்துதே
இனிக்கும் உந்தன் நினைவுகளும்
தனித்தீவாய் போனதே
அருகில் நீயில்லை என்றதும்
மகிழ்ச்சி தொலையுதே
அன்பில் இணைந்த உறவென்றாலும்
உள்ளம் பதறுதே

கண்ணா உன்னைத் தேடுகிறேன்
வா வா
கண்ணீரும் அழுகிறது உன்னைக் காண
வா வா

நீரின்றி மீனும் தரைதனில் வாழுமா
நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்குமா
சோர்ந்து கடந்த பயணம்  இனி மாறுமா
சோகம் தீர்ந்திட கண்ணனைக் காண
இயலுமா

கண்ணின்றி காட்சியை விழி ரசிக்க முடியுமா
கண்ணன் இன்றி உடலுக்குள் உதிரங்கள்
ஓடுமா
உன் மூச்சுக்காற்றின்றி என் சுவாசம்
தொடருமா
உன்னருகில்  இல்லையெனில் என் இதயம் துடிக்குமா

கண்ணா உன்னைத் தேடுகிறேன்
வா வா
கண்ணீரும் அழுகிறது  உன்னைக் காண வா வா

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (10-Aug-20, 1:43 pm)
பார்வை : 113

மேலே