விழி வேல்

7.செறிவான செய்யுட்கள் இந்தப் பகுதியிலே விளங்கும் பாடல்கள் பலவும், கவிஞர் தனித்த சமயங்களிலே தனிப்பட்ட செய்திகளையும் மனிதர் களையும் போற்றியும் பழித்தும் பாடியவையாகும். இவற்றுள் கவிஞரின் சிறந்த புலமை நலத்தினையும் சொற்சுவையோடு பொருட்சுவையும் பொருந்தக் கவியியற்றும் திறத்தினையும் காணலாம்.

தாசி கமலாட்சி என்பவள் கவிஞருக்கு வேண்டியவளாக இருந்தாள். ஒரு சமயம் அவளுக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றார் காளமேகம். கடைக்காரச் செட்டியின் பெயர் பெற்றான் செட்டி அவன் கடையை அடைப்பித்துத் தன்னைப் பாடினால்தான் மருந்து தருவதாகச் சொல்லக் கவிஞர் அப்போது பாடியது.

நேரிசை வெண்பா

முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும்
கற்றான்பின் சென்ற கருணைமால் - பெற்றான்றன்
ஆலைப் பதித்தார் அளகத்தி யாட்கயனார்
வேலைப் பதித்தார் விழி. 170

- கவி காளமேகம்

பொருளுரை:

“என்றும் முடிவு பெறுதல் என்பதில்லாத காஞ்சிபுரத்திலும், காட்டுப் பகுதியான முல்லை நிலத்திலும், பாலை நிலத்தினும் கற்றான் பின்னே சென்ற கருணையினை உடையவன் திருமால்”

"அவனைப்போன்ற கருணையுள்ள, இந்தக் கடற்கரைப் பட்டினத்தே உள்ளவனான இந்தப் பெற்றான் செட்டியின் நீண்ட கூந்தலையுடைய மனைவிக்குப் பிரமதேவர் வேலாயுதத்தினையே கண்ணாகப் படைத்துள்ளனரே! என்னே சிறப்பு அது!”

'கற்றான்' என்ற சொல்லுக்குப் படித்தவன் எனவும், கன்றையுடைய பசுவெனவும், முனிவன் எனவும் பொருள்; 'கற்றான் பின்சென்ற திருமால்' என்பதனை இம்மூவகைப் பொருள்களுடனும் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.

காஞ்சியிலே திருமால் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு திருமழிசையாரின் பின்னாகச் சென்றதையும், காட்டிலே கண்ணபிரானாகப் பசு மேய்த்தவனாகச் சென்றதையும், பாலையிலே விசுவாமித்திரனைப் பின்தொடர்ந்து இராமனாகச் சென்றதனையும் இவை குறிக்கும்.

அளகம் - கூந்தல், தார்.அளகம் - தாரையுடைய அளகமும் ஆம்; தார் - பூமாலை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-20, 6:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே