அச்சமில்லை மனமே கவிஞர் இரா இரவி

அச்சமில்லை மனமே!
கவிஞர் இரா. இரவி.

அச்சமில்லை என்ற பாரதியின் வைர வரிகளை
அகத்தில் வைத்து அச்சமின்றி வாழ்வோம்!

கொரோனா என்ற கொடிய தொற்று இன்று
கொன்றிடக் காரணம் அச்சம் என்கின்றனர்!

அச்சமின்றி துணிவுடன் கவனமாக வாழ்ந்தால்
அண்டாது கொடிய தொற்றான கொரோனா!

பாம்பு கடித்து அச்சத்தால் இறந்தவர் பலர்
பாம்பு கடித்து அச்சமின்றி பிழைத்தவர் பலர்!

எல்லாப் பாம்புகள் கடித்தாலும் மனிதன் சாவதில்லை
என்பதை நினைவில் கொள்வோம் சில பாம்பே நஞ்சு!

தொற்று சோதனை செய்துவிட்டு சிலர்
தொற்று முடிவுவருமுன் அச்சத்தால் இறக்கின்றனர்!

இறந்த பின்பு அந்த தொற்று முடிவைப் பார்த்தால்
எதுவும் தொற்று இல்லை என்று முடிவு வருகின்றது!

மனதில் உறுதி வேண்டும் வராது தொற்று
மனதில் வரும் அச்சம் நோய்க்குக் காரணியாகும்!

தொற்று தொற்றிய அனைவரும் சாவதில்லை
தொற்றிலிருந்து மீண்டு வந்தோர் குருதி மருந்தாகுது!

ரசியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தனர் தடுப்பூசி
ரசியாவில் இருந்து விரைவில் வந்து சேரும்!

அச்சத்தை அகற்றிடுவோம் நம் அகத்திலிருந்து
அச்சமின்றி துணிவுடன் நாளும் அணிவகுப்போம்!

கொடிய நோய்கள் பலவற்றை ஒழித்தோம்
கொடிய கொரோனாவிற்கும் முடிவு கட்டுவோம்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (13-Aug-20, 1:08 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 104

மேலே