கண்ணாடியும் உன் துணையும்

கண்ணாடிக்கென்று தன்
களிப்போ துயரமோ
விருப்போ வெறுப்போ
கோபமோ சாந்தமோ
பயமோ தைரியமோ
ஏதுமில்லை எப்போதும்..
கண்ணாடி பிரதிபலிக்குமது
உன்னுணர்வு யாதாயினும்..
உன்னுள் வந்தவளுக்கும்
நீ கை பிடித்தவனுக்கும்
இருவருக்கும் மற்றவர்
ஒர் கண்ணாடி போல
இருவர் வாழ்நாள் முழுதும்..
நீ காட்டும் வெறுப்பதை
நீ பார்ப்பாய் எதிர்முனையில்..
நீ காட்டும் மகிழ்ச்சியதும்
மறுமுனையில் நேர்மறையாய்..
நம் கோபத்தில் தெறிக்கும்
வார்த்தைகள் முன் கருங்கல்லும்
தோற்று வெக்கி தலைகுனியும்..
உடைத்த கண்ணாடியினுள்
உன் முகம் கூட முழுதுமடங்கா..
உடைந்தொட்டிய கண்ணாடியின்
பசையது உறுத்தலாயிருவர்
கண் முன்னே எப்போதும்..
தான் பெற்ற கண்ணாடியை
கண்ணைப் போல் காத்து
காலம் வரை வைத்திருப்போம்..
-----------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Aug-20, 10:10 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 55

மேலே