மனையினுள் பணி செய் Work From Home

சுறுசுறுப்பில்லா காலை பொழுது..
சீவ நினைக்காயென் தலை மயிர்கள்..
சவரம் செய்ய தயங்கும் முகம்..
காலை குளியல் மறந்த சரீரம்..
காலையில் நோக்கா கடவுள் படங்கள்..
பாதி கால் சட்டையுடன் முழு நாட்கள்..
முக்கால்வாசி நாள் முண்டா பனியனுடன்..
கைக்கடிகாரம் மறந்தயென் கரங்கள்..
இருக்கை நிறைத்து தலையணைகள்
இருந்தும் உணர்கிறேன் கீழ் முதுகின் வலி..
மணிக்கணக்கில் மடிக்கணினியுடன்
குனிந்தும் நிமிர்ந்தும் பணிகள் பல..
காணா மனிதர்களுடன் கலந்துரையாடல்..
பொய்யாய் சிரித்த காணொளி பேச்சுக்கள்..
துணியில்லா என்னறை துணி கொக்கிகள்..
சுவற்றில் தொங்குமென் இடுப்பு வார்கள் ..
மாசினுள் ஒளிந்தயென் காலணிகள்..
எங்கோ கிடக்கும் இஸ்த்திரி பெட்டி..
விட்டத்தை பார்க்குமென் அடையாள அட்டை..
போர்த்தியும் அழுக்குடன் என் சீருந்து..
காற்றுக்கு விடுதலை தந்தததன் சக்கரங்கள்..
எப்போது கிடைக்குமென் இயல்பு வாழ்க்கை..
என்னொடியும் தேடியலையுது என் மனமே...
-----------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Aug-20, 2:37 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 115

மேலே