யார் காரணம் மாதவியா தொடர்ச்சி பாகம் 2
மணிமேகலை துறவுக்கு அவள் தாய் மாதவி தான் காரணமா? தொடர்ந்து பார்ப்போம்.
மணிமேகலை;:::::. மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் .இவரும் கடைச்சங்கப் புலவர். இயற்பெயர் சாத்தனார் .வணிக மரபினர் பலபுலவர்களும் இவரைப்போலவே பொன் வாணிகனார் ;மதுரை அறுவை வாணிகன் ;இளவேட்டனார் ;மதுரை பண்ட வணிகன்போன்ற வணிக மரபினர் இருந்துள்ளதாக தெரிகிறது.
பத்தினி கடவுளாகிய கண்ணகியின் வரலாற்றையும் அவள் மேம்பாட்டையும் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுறுத்தி அவனைக் கொண்டு கோயில் கட்டு வித்தவர். இளங்கோவடிகள் கண்ணகியின் வரலாற்றை சிலப்பதிகாரம் ஆக எழுத தூண்டிய வரும் இவரே. இவற்றை சிலப்பதிகாரத்தின் பதிகத்தாலும் நூலிலுள்ள 25ஆவது காட்சி கதையாலும் உணரலாம் ..சிலப்பதிகாரத்தில் இவரை தண்டமிழ்ச் சாத்தன் (பதிகம் 10) தண்டமிழ் ஆசான் சாத்தன் (காட்சி 66 )நன்னூற் புலவன் (காட்சி 6 )என்று சிறப்பிக்கப்படுகிறது.
மணிமேகலை கதைச் சுருக்கம்::::
______________________________________
இந்நூல் சங்க காலத்தை சார்ந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்களால் 1898 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக பதிக்கப்பட்டது .
விழாவறைக் கதை.:::::
அகத்திய முனிவரின் கட்டளைப்படி செம்பியன் என்னும் சோழன் இந்திரனை வணங்கி இந்திரவிழா எடுத்தான் .அவன் பரம்பரை முன்னோர்களால் இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டது .அந்நகரத்தில் உள்ள சமயவாதிகள் ஒன்று சேர்ந்து இந்திர விழாவை நாம் மறந்தால் முசுகுந்தனது துயரை போக்கிய தான நாளங்காடி பூதம் துன்பம்செய்யும். பாவிகளை புடைத்து உண்பதாகிய சதுக்கபூதம் நகரை விட்டு நீங்கும் எனச்சொல்ல ;யானையின் மீது முரசு வைத்து நகரம் முழுவதும் முரசறைக்க அரசன் ஆணையிட்டான் .வீடுகள் தோறும் தெருக்கள் தோறும் மண்டபங்களில் அலங்காரங்கள் மாவிலைத் தோரணங்கள் வாழை மரங்கள் என பலவாறாக அலங்கரிக்கப்பட்டது .கோவில்களில் பூசைகள் வாதங்கள் நடனங்கள் பிரசங்கங்கள் நடைபெற அறிவிக்கப்பட்டது.
ஊரலருரைத்த காதை::::::
காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெற்றது. விழாவிற்கு பண்டை வழக்கப்படியே ஆடுதல் பொருட்டு மணிமேகலையும் மாதவியும் வராமையால் மனம் புழுங்கிய சித்தி ராபதி வயந்தமாலை மை அனுப்பி "வராத காரணம் அறிந்து வா " எனச்சொல்ல வயந்தமாலை மாதவியை அடைகிறாள்.
மலர் மண்டபத்தில் மாதவி மிகவும் சோர்ந்தஉடம்போடு இருப்பதைக் கண்ட வயந்தமாலை நீ உன் மகளுடன் இந்திரவிழாவிற்கு வராமலும் உன் மரபிற்கு ஒவ்வாத தவ ஒழுக்கம் பூண்டும் இருத்தல் பற்றி ஊரார் கூறும் பழிச்சொல் பல எனக் கூறுகிறாள்.
இங்கே மாதவி சொல்லுகின்ற சொல் மிக முக்கியமானது. மிகத் தெளிவாகப் பேசுகிறாள்.அவள் மனத்தின் தீர்மானமான குரலாகவே ஒலிக்கிறது.
கணவன் கொலையுண்டது பொறாமல் மிகச்சினந்து மதுரையை எரித்த பத்தினி கடவுளாகிய கண்ணகியுடைய மகள் மணிமேகலை தவ வழியில் செல்வதற்கு உரியவளே அன்றி மிகவும் இழிந்த பரத்தமை தொழிலுக்கு உரியவள் இல்லை. ஆதலால் அவள் அங்கே வரமாட்டாள் .நான் பௌத்த சந்நியாசி அறவனடிகளைவணங்கி கேட்டதற்கு என்னை தவவழியை கடைபிடி என அறிவுறுத்தி உள்ளார் .நான் வரமாட்டேன் என்பதை என் நற்றாய் சித்திராபதிக்கு சொல் என்கிறாள். மாதவியின் கூற்றை வலுப்படுத்துவது போல சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்து விட்டு தெய்வ சிலை ஆனவுடன் சிலையைப் பார்த்து கதறி அழும் கண்ணகியின் தோழி தேவகியிடம் செங்குட்டுவன் கூறுகிறான் "வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார் ?யாதவள் துறந்ததற்கு ஏது? ஈங்கு உரை " என்கிறான்.
தேவந்தி சொன்னாள்......
வருக என மட மகள் மணிமேகலை என்று
உருவிலாளள் ஒருபெரும் சிலையோடு
விரைமலர் வாளி வெறு நிலத்து எரியக்
கோதைத் தாமம் குழலோடு கலைந்து
போதித்தானம் புரிந்தறம் படுத்தினாள்.
என் மகளே அருகில் வா என மாதவி மணிமேகலையை அழைத்து ஒழுங்குபட்ட மாலையை கூந்தலொடும் சேர்த்து கலைந்து புண்ணியம் தானம் செய்து துறவற ப்படுத்தினாள் மாதவி என்கிறார் . இங்கு "புரிந்தறம் படுத்தினாள் "என்பது முக்கியம் . (ஆதாரம் வரந்தரு காதை 24 25)
தொடரும்.....(தொடர்ந்து பகுதி 3ல்பார்ப்போம்).
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
