அழுது முடித்து விடு அன்பு மகளே

அழுது முடித்து விடு ;
அன்பு மகளே !
அழுது முடித்து விடு .
அன்னை மறைந்து போனாள் -மகளே,
அழுது முடித்து விடு.
ஆறுதல் சொல்லிட
அருகில் ஆருமில்லை-
அயல்நாட்டில் அல்லற்படும்-
அன்புமகளே,
கண்ணீரை வழிய விடு .
முகம் பார்க்க முடியாத-மகளே,
முழுதும் அழுது முடி .
நினைத்து நினைத்துப் பார்- மகளே,
நீர் வற்றும் வரை
அழுது முடி .
நெஞ்சு பதறும்
பிஞ்சு மகளே,
கொஞ்சமும்மீதியின்றி
புலம்பித் தீர்த்து விடு .
ஆனவரை
அரற்றி அழுது விடு .
பொழுது புலரு மட்டும்
புலம்பி புரண்டு அழு .
தாயே , தவமே,
தனியே ,
எங்களைத்
தவிக்க விட்டுப்
போயே - ஏன் சேர்ந்தாய்
பொன்னே, பொக்கிசமே ;
என்று உளறி, புலம்பி அழு .
போதும் பொன்மகளே,
அழுகையை நிறுத்து.
கண்ணே கண்ணீரைத் துடைத்திடு.
மூக்கைச் சீந்து;
முகத்தைத் கழுவு;
தணீணீரில் மூழ்கி எழு;
தலை மகளே,
நிலைகொள்.
சோகத்தை உதறி எழு.
மறைந்தது சுமந்தவள்தான்;
மறந்து விடாதே
அவள் நெஞ்சம்
சுமந்த கனவுகளை.
எள்ளி நகைத்தோரும்
ஏளனம் செய்தோரும்
மெச்சும் படியிந்த
உலகினில் வாழ்ந்து
காட்டுவதே -மகளே
நீ உன் தாய்க்கு
உண்மையில்
செய்யும் அஞ்சலியாம்.
புற்று நோயோடு
போராடித் தோற்றவளின்
பற்றுக்கொடியே_
நீ...
மருத்துவம் படித்து
மக்கள் பிணிதீர்த்து
வலி நீக்கி
காத்து நிற்கும் காலமே -
கருச்சுமந்ந தாய்க்கு -
கற்பகமே !
நீ...
செலுத்தும் நீர்க்கடனாம்.
தூற்றுவோரும் போற்றும் படி-
தூய மருத்துவராய்
நீ ஆற்றும் தோண்டே -மகளே
பெற்றவளுக்கு
நீ ...
செய்யும் -
நீத்தார் இறுதிக் கடனாம்.
மகளே நினைவில் வை:
காலன் கவர்ந்தது
அன்னை உடலைத்தான்;
அவள் கனவையல்ல.
எரிந்தது
அன்னை உடல்தான்
அவள் எண்ணமல்ல.
நீ இருக்கிறாய் ...
எனில்...
எனில் ...
இனி ...
இனி...
அது -
உன் கனவு, நினைவு, எண்ணம்
-இது திண்ணம்.
உன் வெற்றியால்
அவளை உயிர்ப்பிக்கலாம்.
செய்து காட்டு;
சேயே, செல்வியே!
உலகம் சொல்லட்டும்;
உன்னை அவள் மகளென்று.
பொன்னே உன்வாழ்வில்
பூக்கட்டும் அவள் கனவு.
கண்ணே எழுந்து நில் !
கலங்காதே உயர்ந்து காட்டு! .
-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (31-Aug-20, 2:02 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 1573

மேலே