ஆசிரியர் தினம்

கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய பட்டிகாடு, மின்னல் மீனாச்சிபுரம். மேலப் பண்ணை பாட்டி காடையம்மாவின் இரண்டாவது பேரன் ,அறிவும் ஆற்றலும் இருந்தும் செல்வாக்கு உள்ள குடும்பத்தில் பிறந்தாலும் இவனுடைய இளமைப் பருவம் ஒரு இருண்ட காலம்.

வாழ்க்கை முழுவதும் உலவு மாடு விவசாயிக்கு உறுதுணையாக இருந்தாலும், பசுவுக்கு கொடுக்கும் மரியாதை காளைக்கு கொடுப்பதில்லை. இதைப் போல தான் இவனும் வாழ்ந்து வந்தான்.

காடையம்மா பாட்டியின் அரவனைப்பு கலந்த பாசத்தால் , பிறந்த நாள் முதல் பள்ளி செல்லும் வரை மொழியின் உச்சரிப்பு இல்லா(ஊமை) குயில் போல் வாழ்ந்தவனை, சின்ன சின்ன கதைகள் சொல்லி,உள் நாக்கில் கருக்கருவாள் சூடுபோட்டு மொழியை பேசவைக்க இரவு பகல்பாராமல் உழைத்த அன்னை தெரசா.

ஆடுமேய்க்க சென்றவனை ,என் பேரன் ஒரு நாள் அரசாங்க உத்தியோகம் வாங்குவான் என்ற கனவில் வாழ்வை நகர்த்திய தீர்க்கதரிசி.

வைகாசி மாதத்தில் மகனை திட்டி தீர்த்து வாய்பேச திணறிய பேரனை கீரனூர் பள்ளியில் சேர்த்து விட்டாள்.

தலைமை ஆசிரியர் ராயப்ப வாத்தியார் , அ வில் தொடங்கி உச்சரிக்கும் போது வகுப்பு வாத்தியாரால் ஓரம் கட்டப்பட்ட திக்குவாய் சிறுவன் 'அ"வை உச்சரிக்க அழுதுகொண்டு இருந்தான். கடைக் கண் பார்வையில் கவனித்த தலைமை ஆசிரியர் , அன்போடு சைகையில் கூப்பிட்டு உன் பெயர் என்ன என்று கேட்கிறார், அந்த நேரம் பார்த்து அவனின் பாட்டி உள் நுழைய அவனோ 'அ அ அ என்று உச்சரிக்க திணறிய போது காடையம்மா பாட்டி திருமாலின் பெயர் உள்ளவன் என்கிறாள்.

அறிவில் சிறந்த ஆசிரியரோ,அரிகிருஷ்ணன் வாயா என்றார் அன்போடு. அன்று முதல் அவனின் ஆரம்ப கல்வி ஆலமரமாக வளர்ந்து கிளை பரப்பியது .

ஊமையாய் இருந்த என்னை இன்று அண்ணா நூலகத்தில் நூலகரக பணியாற்ற அடித்தளம் இட்ட என் பாட்டியும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் இராயப்ப ஆசனும் தான் என்னை இன்று ஒரு அரசாங்க அலுவலராக சிம்மாசனத்தில் அமரவைத்துள்ளனர் .

இந்த ஆசிரியர் தினத்தில் அவரை வணங்கி வாழ்த்துகிறேன்

எழுதியவர் : இரா. அரிகிருஷ்ணன் (6-Sep-20, 10:52 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : aasiriyar thinam
பார்வை : 376

மேலே