வேணாம்வேணாம்வேணவே வேணாம் 7 நடிகர்

என்னங்க? எல்லாரும் நடிகராக ஆசைப்படுறாங்க. நீங்களானா இப்படிச் சொல்றீங்க?
ஆமாங்க. நடிகர்களுக்கு கொஞ்சம் மவுசு இருக்கிறது நிஜந்தான். ஆனா அதிலே இருக்குற ரவுசு பத்தித் தெரியாதவங்கதான் அதைப் பத்தி ரொம்பப் பெருமையா நெனச்சிக்கிட்டு இருக்காங்க. பெரிய நடிகரா ஆயிட்டா நீங்க நெனக்கிறது சரிதான். ஆனா அப்படி ஆகாம 'வெறும்' நடிகரா இருந்தா அவங்க படற பாடு இருக்கே, சொல்லி மாளாது. இந்தத்துறையிலே முன்னுக்கு வரணும்னா ஆரம்ப காலத்துலே நம்ம தன்மானத்தைப் பின்னுக்குத் தள்ளி வச்சிக்கிட்டாத்தான் முடியும். இன்னும் நான் மறக்கல்லே ஒரு நடிகனா ஆறதுக்கு நான் பட்ட பாட்டை. நான் கெஞ்சாத ஆளில்லே,கெஞ்சாத நாளில்லே, அஞ்சாத பேரில்லே, மிஞ்சாத மானமுமில்லே. ஸ்டூடியோ வாசல்லே நிக்கிற கேட் காவல்காரன்கிட்டே இருந்து 'உனக்கு நடிக்க சான்ஸ் வாங்கித் தரேன்'னுசொன்ன டூப் நடிகன் வரையிலும் எல்லார் காலிலேயும் விழுந்து, கெஞ்சோ, கெஞ்சுன்னு கெஞ்சி, அழுது, புலம்பி அவங்க சொல்றதை எல்லாம் நம்பி ஏமாந்த நாள் கொஞ்சமா, நஞ்சமா? ஒரு பெரிய மனுஷன் வீட்டு நாயாப் பொறந்திருந்தாலும் கௌரவமா இருந்திருக்கும். இப்படி தெருநாய் போல நான் பட்ட பாட்டைப் பாக்கும்போது ஏண்டா இந்தத் தொழிலுக்கு வர ஆசைப்படறோம், இதுக்குப்பதிலா, கௌரவமா பிச்சை எடுத்துப் பொழச்சிருக்கலாமேன்னு தோணும். என்னமோ, கலை மேலே, நடிப்புத்துறை மேலே இருக்கிற தணியாத ஆசை எங்களை மாதிரி ஆட்களோட மூளையை மழுங்க அடிச்சுடுதுன்னு நெனக்கிறேன். வேறே எந்த வேலையும் செய்ய ஓடாது, எங்க மரமண்டை வேலை செய்ய விடாது. கடைசியிலே அப்படி இப்படி அவனை இவனைப் பிடிச்சி ஒரு ஸ்டூடியோவுக்குள்ளே நுழைஞ்ச உடனே அங்கே இருக்கிற சில்லறைகள் செய்யற ஆர்ப்பாட்டங்கள் இருக்கே, அது சொல்லிமாளாது. நாம நடிக்க வந்திருக்கோம்னு தெரிஞ்சவுடனே ஆளாளுக்கு நமக்கு அட்வைஸ் மேலே அட்வைஸ். அந்தக்காலத்துலே பிரபலமான பழைய பெரிய டயலாக்கைப் பேசச்சொல்லுவாங்க. மிமிக்ரி தெரியுமா, உமிக்கரி தெரியுமா, அவர் மாதிரி பேசு, இவர் மாதிரி பேசுன்னு நம்ம உசிரை எடுத்துடுவாங்க. சிரிச்சிக்காட்டச்சொல்லுவாங்க. அழுது காட்டச்சொல்வாங்க. நம்ம மூஞ்சியையும், மொகரயையும், குரலையும் கிண்டல் பண்றதுலே அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். ஒரு சிலர் நடிச்சிக்காட்டுன்னு போடற சீன் இருக்கே, அதையே ஒரு சினிமாவா எடுத்துடலாம். ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர்தான் மொதல்லே நம்மை டெஸ்ட் பண்ணுவார். அவருக்கு நாம கூஜா தூக்கணும். அவர்கால்லே இருந்த ஷூவைக் கழட்டச்சொன்னா கழட்டணும். ஷூ லேசை மாட்டச் சொன்னா மாட்டணும். இப்படி எத்தனையோ...எல்லாத்துலேயும் தேறின பிற்பாடு டைரக்டர் தரிசனம் கிடைக்கும். அவர் நம்பளை ரொம்ப கரிசனத்தோடு விசாரிப்பார்னு நெனக்காதீங்க. ஏதோ புழு பூச்சியைப் போலத்தான் அருவருப்பா பாப்பார். எவ்வளவுதான் வசனத்தை சரியாச் சொன்னாலும் அவருக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் சொல்லச் சொல்வார். எப்படி மூஞ்சியை வெச்சிக்கணும், வாயை எவ்வளவு அசைக்கணும், எங்கே எப்படி குரலை ஏத்தி இறக்கணும்னு நமக்குத் தெரிஞ்ச பாடத்தையே திரும்பத் த்திரும்பச் சொல்வார். டேக்கின் போது நடுவுலே யாராவது இருமித் தொலைச்சா, அந்த ஏற்கனவே மூணு தரம் சொல்லியும் சரியா வராத அந்த நீளமான வசனத்தைத் திருப்பிச் சொல்லியாகணும். சில சமயம் தப்பு நடந்துடிச்சின்னா டைரக்டர் கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுவார். வாய்திறக்காம கேட்டுக்கணும். சில சமயம் ஓங்கி ஒரு அறை விடுவார். அதை அவர் கொடுக்கிற ஆசீர்வாதம் மாதிரி ஏத்துக்கணும். எதுத்துப் பேசினா கழுத்தைப்பிடிச்சி கல்தா பண்ணிடுவாங்க. இதுக்கெல்லாம் மிஞ்சி நடிச்சி நல்ல பேர் வாங்கிட்டா கொஞ்ச நாள் நம்ம மார்க்கெட் கொடிகட்டிப்பறக்க ஆரம்பிக்கும். ஆனா கெடச்ச பெயரைக் காப்பாத்திக்கணுமேங்கற பயம் தொத்திக்கும். ஒண்ணு ரெண்டு படம் சக்சஸாகி மூணாவது படம் ஊத்திக்கிச்சுன்னா அப்புறம் நம்மைச்சீண்டறவங்க யாரும் இருக்க மாட்டாங்க. மறுபடியும் கெஞ்சிக்கூத்தாடற வேலையை ஆரம்பத்துலே இருந்து தொடங்கணும். இதுவே பொம்பளை நடிகையா இருந்துட்டா கேக்கவே வேணாம். எல்லாத்துக்கும் அவங்க துணிஞ்சி இருக்கணும்.

சில பேர்நெனச்சிக்கிட்டு இருக்காங்க நடிகரா ஆயிட்டா அப்படியே அரசியல்லே நுழஞ்சு தமிழ்தாட்டின் முதல்வர் ஆயிடலாம்னு. எல்லாராலேயும் ஒரு எம்.ஜி. ஆராவோ, ஜெயலலிதாவாகவோ, என்.டி. ராமாராவாகவோ ஆகமுடியாது.
இப்ப காலம் மாறிப்போச்சு. நடிகர்னாலே அவர் எவ்வளவு பெரியவரா இருந்தாலும் இப்ப அரசியலுக்கு வரதை பெரும்பாலான ஜனங்கள் விரும்பறதில்லை. அவங்க பண்ற தப்பையே கண்கொத்திப்பாம்பா பாத்துக்கிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் அரசியல் வாதிகள், ஒரு பக்கம் இன்கம்டாகஸ்காரங்க, ஒரு பக்கம் குசும்புக்கார ஜனங்க, இப்படிப் பல பேர் அவங்களை இப்ப கண்காணிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சிலரைத்தவிர முக்காவாசிப்பேருக்கு முப்பத்தஞ்சு நாப்பதைத் தாண்டினா மார்க்கெட் போயிடுது. அது தவிர புதுசு புதுசா சீப் ரேட்டுலே நடிக்க வர இளம் நடிகர்களாலே எங்க சான்ஸ் போயிடுது. அதனாலே எங்க முதுமைக் காலத்துலே நாங்க பிச்சை எடுக்கிற நிலைமைக்குத் தள்ளப் படறோம். இப்ப எல்லாம் அந்த மாதிரி கேஸ் நிறைய வருது. இது தான் நடிகர்களோட பொதுவான நிலை.
அதுமாத்திரமில்லே. நடிகன்னாலே பொண்ணு தர பயப்படுவாங்க. அப்படித் தந்தாலும் ‘நாங்க நடிக்கும்போது பல பெண்களோட பழக வேண்டி வரும். தொட்டுக் கட்டிப் பிடிச்சி இப்படிப் பட்ட சீன்கள் எல்லாம் வரும்’ அப்படிங்கற நெனப்பே அவங்களுக்கு எங்க மேலே எந்த மரியாதையும் இல்லாம போயிடும். இதனாலேயே . சம்சாரத்தை சமாதானப் படுத்த முடியாம பல பேர் வாழ்வு நாசமாகி இருக்கு. குழந்தைங்க படிப்பும் நாசமாயிடுது. இதுக்கெல்லாம் துணிந்து மேலே போக முடியரவனாலே மட்டுந்தான் இந்தத் தொழில்லே முன்னுக்கு வரமுடியும். கிடைக்கிற பேருக்கும் புகழுக்கும் இவங்க கொடுக்கிற விலை ரொம்ப அதிகம். ஊர் ஜனங்க நெனைக்கிற மாதிரி இது ஒண்ணும் அவ்வளவு க்ளாமரஸ் ஃபீல்ட் இல்லே. நான் சின்ன வயசுலே விவரம் தெரியாத போது படிப்பை விட்டுட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். என் பையனை படிக்க வெச்சு ஏதாவது தொழிலோ, வேலையோ பண்ணுன்னு சொல்வேனே ஒழிய, அவன் ஆசைப்பட்டாலும் அவனை இதுலே முழுமையா ஈடுபட விரும்ப மாட்டேன். என் பெண்டாட்டியும் இந்த வேஷம் கட்டற வேலை ‘என்னோட போகட்டும். நம்ம பிள்ளையாவது இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாம, நிம்மதியான, கௌரவமான வாழ்க்கை வாழட்டும்’ னு நெனைக்கிறா. . அதனாலே அவனுக்கு இந்த நடிகர் தொழில் வேணாம், வேணாம், வேணவே வேணாம். ஆளை விடுங்க.

எழுதியவர் : ரா.குருசுவாமி (6-Sep-20, 8:38 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 93

மேலே