கருவினில் சுமந்தவளே
இறக்கைகள் இல்லா தேவதையாய்
புவியில் வாழும் கலைமகளாய்
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
பாசத்தை அரணாக்கி பத்து
திங்கள் சுமந்தாய்- தொப்புள்கொடி
உருவாக்கி உயிரையும் காத்தாய்
உதிரத்தை பாலாக்கி பசிதனை
போக்கினாய்- ஊர்கண் படாமல்
பொத்தி என்னை வளர்த்தாய்
உயிர் கொடுத்த கதிரவனாய்
இருள் போக்கிட்ட சந்திரனாய்
வாழ்வில் ஒளியை கொடுத்தவளே!
இறைவனும் பொறாமை கொள்கிறான்
என்னிடத்தில் - தேவனும் உறவாட
விரும்பி வருகிறான் நம்மிடத்தில்
விடியும் பொழுதினில் இன்பம்
பெருக்கி- தங்கும் இடத்தை
சுற்றி எங்கும் நிரப்பி
ஆசை மொழியாலும் ஆறுதல்
வார்த்தையாலும் - உறவுகள் எங்கும்
தழுவி அன்பினாலே இணைக்கின்றாய்
உன் அன்பு என்னை
நிரப்ப- காகிதப்பூ மணக்கும்
வேப்பம்பூ இனிக்கும்
வயது இருபது ஆனாலும்
உன் மடி என்னை தாலாட்டும்
வசந்தம் எனக்கு வாடிக்கையாகும்
பாசத்துக்கு நிலையாய் நீ
இருக்க - எப்பிறவிலும் உன்
சேயாய் நானிருக்க வரம்வேண்டுமே...