குமரேச சதகம் – தகாத செயல்கள் - பாடல் 95
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அண்டிவரும் உற்றார் பசித்தங் கிருக்கவே
அன்னியர்க் குதவுவோரும்
ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
அற்பரை அடுத்தபேரும்
கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
கொண்டாடி மருவுவோரும்
கூறுசற் பாத்திரம் இருக்கமிகு தானமது
குணம்இலார்க் கீந்தபேரும்
கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்
கைவிட் டிருந்தபேரும்
கரிவாலை விட்டுநரி வால்பற்றி நதிநீர்
கடக்கின்ற மரியாதைகாண்
வண்டடர் கடப்பமலர் மாலிகா பரணம்அணி
மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 95
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
வண்டுகள் நெருங்கும் கடப்பமலரால் ஆன மாலையையும் அணிகலனையும் அணிந்த மார்பினனே! அருளையுடையவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
நெருங்கிப் பழகும் உறவினர் பசியுடன் இருக்கும் போதும் பிறர்க்குதவும் தன்மையினரும், குற்றம் அற்ற நல்லோரிடங் கொண்ட நட்பை விடுத்துக் கீழோரை நட்புக் கொண்டவரும்,
மணம் புரிந்து கொண்ட இல்லாள் ஒருத்தியிருக்கவும் வேசையைப் பாராட்டிக் கலப்போரும், கூறப்பட்ட தகுதியோர் இருக்கவும் தகாதவர்களுக்கு மிகுந்த பொருளை வழங்கியவரும்,
(அப்போதுதான்) பார்க்கப்பட்ட புதியவர்களை நம்பி முன்னிருந்தவரை நீக்கி விட்டவர்களும், யானையின் வாலை விட்டு விட்டு நரியின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்று நீரைக் கடக்கும் தன்மையாகும்.
விளக்கவுரை:
மாலிகா – மாலை, ஆசு – குற்றம், தபுதல் – கெடுதல்,
சற்பாத்திரம்: தாமே பொருளீட்டி வாழ முடியாத கூன், குருடு, முடம் முதலான உறுப்புக் குறையினரும் முதியவரும் சிறு குழந்தைகளும் பெண்களும் ஆவர்.
கரிவாலை விட்டு நரிவால் பிடித்தல்: மரபுத்தொடர்.
‘செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்' ‘
பெரியோரைத் துணைக்கொள்'
'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்பவை இங்கே கருதத்தக்கவை.
கருத்து:
உறவினர் முதலானோரையே ஆதரிக்க வேண்டும்.