என் காதல் வாகனம்
உனக்காகத்தான் உயிர் கொண்டேன் என்பதில் ஐயமொன்றுமில்லை. உன்னாலே உயிர் போனால், அதில் பயமொன்றுமில்லை!
உன்னாலே பலவும் அறிந்தேன், சிலவும் இழந்தேன். நேரத்திற்கு ஊண் இறங்கவில்லை, கண் உறங்கவில்லை. இவ்விழப்பும் ஓர் வரமே!
காதல் நோய்க்கு மருந்து கொடுத்தால் கூடிக்கொண்டேதான் இருக்கும். நீ விருந்தே கொடுத்து மரணம் வரை வாழவிடப்போவதில்லை!
நீ இல்லாது போனால் வாழ்வும் எனக்கு சாபமே! உனக்காய் செலவழிக்கும் ஒவ்வொரு காசும் எனக்கு லாபமே!
சுமையில் கிடைத்த சுகத்திற்கு வரையறை சொல்லத் தெரியவில்லை, என்னை நீயும் உன்னை நானும் சுமக்கும் தருணங்களில்!
ஒவ்வொரு அசைவும் ஒத்திசைவாய் உனக்கும் எனக்கும், தெரிந்தோ தெரியாமலோ தெரியவில்லை!
தளர்ச்சியில் கலைப்பு! மகிழ்ச்சியில் திழைப்பு!
ஒரு கணம்! இரு மனம்! - உன்னோடு வெகு தூரம் சென்ற நேரங்களில்!
விவரம் தெரிந்த நாளிலிருந்து கடவுளுக்கு நன்றி கூறியதில்லை. உனைக் கொடுத்ததற்காய்க் கூறாவிடில் எனக்கு விவரம் போதவில்லை!
வாழ்கையைத் தேடி நானும் செல்ல, செல்வதுதான் வாழ்க்கையென நீயும் சொல்ல, புரிந்துகொண்டேன் உன்னுடன் தேடிய முதல் நாளிலிருந்து!
தெரியவில்லை எனக்கு, வாழும் நாள் வரை உடன் இருப்பாயா என்று! நீ உடனிருக்கும் நாளை மட்டும் தான் வாழும் நாளாய் எண்ணியிருப்பேன்!