குமரேச சதகம் – பெரியோர் இயல்பு - சான்றோர் தன்மை - பாடல் 99
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அன்னதா னஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
ஆபத்தில் வந்தபேர்க்
கபயம் கொடுத்திடுதல் நல்லினம் சேர்ந்திடுதல்
ஆசிரியன் வழிநின்றவன்
சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
துணையடி அருச்சனைசெயல்
சோம்பலில் லாமல்உயிர் போகினும் வாய்மைமொழி
தொல்புவியில் நாட்டியிடுதல்
மன்னரைச் சேர்ந்தொழுகல் கற்புடைய மனைவியொடு
வைகினும் தாமரையிலை
மருவுநீர் எனவுறுதல் இவையெலாம் மேலவர்தம்
மாண்பென் றுரைப்பர் அன்றோ
வன்னமயில் மேலிவர்ந் திவ்வுலகை ஒருநொடியில்
வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 99
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
அழகிய மயில்மேல் அமர்ந்து இந்த வுலகத்தை ஒரு விநாடியிற் சுற்றிவந்த முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
(பசித்தவருக்கு) உணவுகொடுத்தல், பெரியோர் கூறிய நெறியிலே செல்லுதல், இடையூறென வந்தவர்களுக்குப் புகல் அளித்தல், நல்லோருடன் நட்புக் கொள்ளுதல், ஆசிரியன் போக்கிலே தானும் சென்று அவன் ஆணைப்படி நடத்தல்,
பெற்றோரின் இரு தாள்களிலும் மலரிட்டு வணங்குதல், உயிர்போனாலும் சோர்வு இன்றி உண்மை மொழியை (இப்) பழைய வுலகிலே நிலை நிறுத்தல்,
அரசரின் ஆதரவிலே வாழ்க்கையை நடத்துதல், கற்பிற் சிறந்த இல்லாளுடன் வாழ்ந்தாலும் தாமரையிலையிலே கலந்த நீரைப் போலப் (பற்றின்றி) இருத்தல் இவை யாவும் பெரியோருடைய நல்லியல்பென்று கூறுவர், அல்லவா?
கருத்து:
உண்டியளித்தல் முதலான இவை யாவும் பெரியோரின் பண்புகள் என்று பெரியோர் கூறுவர்.