பட்டரின் ஈகை - கட்டளைக் கலித்துறை
திருப்பனந்தாளிலே ஒரு பட்டர் இருந்தார். அவருடைய சோற்றுக் கொடையினைச் சிறப்பித்து இப்படிப் பாடுகிறார் கவி காளமேகம்.
கட்டளைக் கலித்துறை
விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்பிமழைத்
தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற கால(த்)திலே
உண்ணீருண் ணீரென் றுபசாரஞ் சொல்லி யுபசரித்துத்
தண்ணீரும் சோறுந் தருவான் திருப்பனந் தாட்ப(ட்)டனே. 193
- கவி காளமேகம்
பொருளுரை:
"வானத்திலிருந்து பெய்கின்ற மழைவளமும் இல்லாமற் போய், நிலத்தினின்று கிடைக்கும் ஊற்று நீரும் வெளிவராமல் வற்றிப்போய், புலவர்கள் உணவற்றுத் தவிக்கின்ற காலத்திலே, மனம் விரும்பி, உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உபசார வார்த்தைகளைச் சொல்லி உபசரித்துத், தண்ணீரும் சோறும் அவர்களுக்குத் தருபவன் திருப்பனந்தாள் பட்டன் ஒருவனே யாவான்.
விண்ணிர் - ஆகாய கங்கை எனவும் உரைப்பர். .