திருமதி விவசாயி

கழத்துமேட்டில் தொட்டில்கட்டி

கண்மணியை தூங்கவிட்டு
காதுக்கெட்டும் தூரத்துக்குள்
களை பறிச்சா நெல் வயலில்

வரப்பு மேல துணியை விரிச்சு
வச்சிருந்த செல் போனில்
செண்பகத்தக்கா கூப்பிட்டு
வம்பா அந்த சேதி சொன்னா

சீக்கு ஏதோ பரவுதாமா
சீனாக்காரனுக்கு தொத்திகிச்சா
காத்து கருப்பு வந்தா கூட
கழிச்சு போட்டு பொழைச்சுகலாம்

இந்த

தொத்து நோவு தொத்திகிட்டா
செத்து தான போவனுமாம்

ஊரடங்கை போட்டுகிட்டு
ஊட்டுகுள்ள ஒழிஞ்சுகனுனு
டிவி எல்லாம் சொல்லுதக்கா
பாவி சனம் என்ன செய்ய ?

கோவில் கொளம் சாத்திட்டாங்க
காரு பஸ்ஸு நிறுத்திட்டாங்க.....

அடி

செல்லாத்தா புள்ள
செண்பகமே கொஞ்சம் கேளு
வெள்ளாமைய விட்டுபுட்டு
வீட்டுக்குள்ள ஒழிஞ்சுகிட்டா

ஆடு மாடு கத்தாதா
வவுறு வாயி பத்தாதா
ஊரடங்கை நான் பார்த்தா
உசுரடங்கி போவுமடி

சொத்து சேத்து வச்சவனுக்கு
சோத்துக்கொன்னும் பஞ்சமில்ல
செத்த நேரம் வீணாப்போச்சு
வச்சிடுடி செல்போன

சத்தமாவே சொல்லிபுட்டு
மத்தவேலை பார்க்க போனா
பேச்சை கேட்ட பயிருக்கே
தூக்கி வாரி போட்டிடுச்சே.....

க.செல்வராசு

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

எழுதியவர் : க.செல்வராசு (29-Sep-20, 9:05 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 108

மேலே