சோதி ஏற்றுவது யார்
=======================
தேயிலைத் தோட்ட மெங்கும்
-தேவதை போன்ற பெண்கள்
வாயிலாப் பூச்சி யாக
-வாழ்ந்திடும் நாட்டின் கண்கள்
ஆயிரம் ரூபாய் கேட்டு
-அழுமிவர் நெஞ்சில் புண்கள்
மாயுமா வென்று கேட்டால்
-மறுமொழி இல்லை யென்பார்.
**
தேர்தலில் வென்று வந்தால்
-தேவைகள் தீர்ப்ப தாக
மார்தனில் தட்டிப் பேசி
-மயக்கியே வென்று போனார்
வேர்விட வைத்த வார்த்தை
-விதையது முளைக்கு மென்று
ஊர்சனம் நம்பி நிற்க
-ஊரையே மறந்து விட்டார்.
**
இன்னொரு தேர்தல் காலம்
-எதிர்வரு கின்ற வேளை
முன்னரிம் மக்கள் வாழ்வில்
-முடிப்பதாய் சொன்ன வற்றைப்
பின்னரு மெடுத்து வந்து
-பிதற்றியே வாக்கு கேட்பார்
சின்னதாய் கூட இவரைச்
-சிந்தனை செய்யா தவரே
**
ஆதியில் அடிமை போன்று
-அலைகடல் தாண்டி வந்து
வீதியும் நகரும் தோன்ற
-விரைந்துழைத் திட்ட வர்க்கம்
பீதியி லுழலும் வாழ்வின்
-பெருந்துய ரிருளைப் போக்கும்
சோதியை ஏற்றி வைத்து
-சுகம்பெறச் செய்வ தாரோ
**
*