கண்ணிமைக்கும் நேரம்

......................................................................................................................................................................................................
(பின்னுக்குப் போகும் கதை- non-linear story) பலவீன மனதுக்காரர்கள் படிக்க வேண்டாம்.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தெரிந்தான் கார்த்திக். திட்டமிட்ட படு கொலையாகத் திருப்பப்பட்ட வழக்கில் கைதாகி, சட்டப்பிரிவு முன்னூற்றி இரண்டின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி அவன். வெள்ளைச் சட்டையில் முன்னூற்றி நான்கு என்ற எண் அவன் அடையாளமாயிருந்தது. தலையில் காயம், கையெங்கும் “தீர்த்தனா தீர்த்தனா” என்று கீறியிருந்தான். சிறையின் சுவரெங்கும் அதே பெயர் ரத்தத்தில் தீற்றியிருந்தது. எதைக் கொடுத்தாலும் தலையில் கொட்டிக் கொள்கிறான். கோர்ட் அவனை மனநல மருத்துவ மனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்திருந்தது.

கார்த்திக்கின் வயது இருபத்தி நான்கு; தந்தை சண்முக நாதன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். தாய் சாக்ஷி குடும்பத்தை கவனிக்க அரசு வேலையை ராஜினாமா செய்தவர்.

கார்த்திக்கின் வக்கீல் செண்பகராமன் தனக்குத்தானே பேசியபடியும் இளித்தபடியும் இருந்த கார்த்திக்கை வேதனையோடு பார்த்தபடி இருந்தார். சிறையின் பார்வையாளர் பகுதியில் அவரைப் போலவே வேறு சிலரும் இருந்தனர். எல்லோரும் தன்னையே பார்ப்பது போலவும் தன்னைப் பற்றியே பேசுவதைப் போலவும் செண்பகராமனுக்குத் தோன்றியது. அவர் எண்ணத்தைப் பிரதிபலிப்பது போல, இடப்புற கோடியிலிருந்து இருவர் அவரையும் கார்த்திக்கையும் சுட்டிக் காட்டி தங்களுக்குள் பேசிக் கொண்டனர்;

“அதோ நிக்கிறானே கிறுக்கன், அவன்தான் அந்த காலேஜ் பொண்ணு தீர்த்தனா மேல ஆசிட்
கொட்டினவன்! ”

“ஐயையோ! அட சண்டாளப் பாவி! பொண்ணுக்கு என்னாச்சு? ”

“அவ படியேறிப் போயிட்டிருக்கும் போது ஆசிட் தெளிச்சிருக்கான். ஆசிட் கழுத்துல பட்டிருக்கு. அப்படியே குரல்வளை வெந்து போயிடுச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க; வெந்து போன இடம் அழுகி செப்டிக் ஆகி பொண்ணு துள்ளத் துடிக்க செத்துப் போயிட்டா. பெண்ணோட சொந்தக்காரங்களும், காலேஜ் பசங்களும் பையன் வீட்டை கேரோ பண்ணி கல்லால அடிச்சிருக்காங்க. பையனைப் பெத்தவங்க வெளியே தலை காட்ட முடியல. வசவுன்னா வசவு ஏகப்பட்ட வசவு! சாபம்... பையனோட அம்மா தூக்கில தொங்கிட்டா. தலைமறைவா இருந்த அந்த தறுதலை தானாப் போய் போலிசுல சரண்டர் ஆயிடுச்சு. பைத்தியம் பிடிச்சுடுச்சோ, பைத்தியம் மாதிரி நடிக்குதோ- யாருக்குத் தெரியும்? ”

“இப்ப அந்தப் பையனுக்குத் திருப்தியா? என்ன கிடைச்சுதாம் அவனுக்கு? ”

“அவனும் காலேஜ் படிக்கிற பையன்தான். கடைசி வருஷம்...இவனுக்கு அந்தப் பொண்ணு வயசில தங்கச்சி ஒருத்தியும் உண்டு. இவன் பண்ண காரியத்துக்கு இவன் தங்கச்சிய சம்பந்தா சம்பந்தம் இல்லாம எவனெவனோ வந்து மிரட்டிட்டு போறானாம். அப்பன்காரன் அரண்டு போயி பையன் எக்கேடோ கெடட்டும்னு மகளை கூட்டிகிட்டு வெளியூரோ வெளிநாடோ போயிட்டாராம்.....தோ போறான் பார்! ”

கூட்டம் அவனை பயத்துடனும் வெறுப்புடனும் பார்த்து ஒதுங்கியது.

சிறையிலிருந்து வெளிப்பட்ட கார்த்திக் வக்கீலை பார்த்த பார்வையில் அந்நியமிருந்தது. அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தான். “நா அவ மேல ஆசிட் தெளிக்கல; பன்னீர்தான் தெளிச்சேன். பூ மாதிரி உடம்பு பன்னீருக்கே தாங்கல. வெந்துடுச்சு; வெந்...துடுச்சு; வெ...ந்து....டுச்ச்ச்சுஇஇஇஇ.. ” முணுமுணுப்பு ஆக்ரோஷ சத்தமாக மாறியது.

“தீர்த்தனா நீ... நீ எங்க போயிட்டே, சொல்லு, சொல்லு” வக்கீலின் தோள்களை போட்டுக் குலுக்க, வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் வக்கீல் அவனை ஒரே தள்ளு தள்ளினார். கான்ஸ்டபிள் அவனை இறுக்கிப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சென்னை பாரதி கலைக் கல்லூரியில் இண்டர் காலேஜ் காம்பெடிஷன். பாட்டுப் போட்டி. குன்றத்தூர் அன்னை கமலாம்பாள் கலைக் கல்லூரி மாணவி தீர்த்தனா பாடுகிற வரை பரிசு தனக்குத்தான் என்று இறுமாந்திருந்தான் கார்த்திக். அவன் பூவிருந்தவல்லி திகம்பர நாடார் பொறியியல் கல்லூரி மாணவன்.

தீர்த்தனா பாட ஆரம்பித்ததும் முதல் பரிசு கை நழுவிப் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தன் கை மோதிரத்தைக் கழற்றியவன் நண்பன் சுதீரை அழைத்தான். “டேய், சுதீர்! அந்த ஜட்ஜைப் போய் பாருடா. ஃபஸ்ட் பிரைஸ் எனக்குக் கிடைச்சாகணும்! ”

“ஏண்டா, ஜெயிச்சா மணி மகுடமா வைக்கப் போறாங்க? ஒரு சர்ட்டிபிகேட்டும் குட்டி கப்பும் தரப் போறாங்க.. இதுக்கு ஏண்டா ரெண்டு சவரன் மோதிரத்தை தியாகம் செய்யிற? ”

“நான் ஜெயிச்சாகணும்; ஜெயிச்சாகணும்! ” கார்த்திக் தலையை பிலுபிலுவென்று உதற, அலுத்துக் கொண்டே நகர்ந்தான் சுதீர். இத்தனைக்கும் கார்த்திக் தோல்வியை அறியாதவனல்ல. கை நிறைய அரியர்ஸ் வைத்திருக்கிறான். ஆனால் அரியர்ஸ் வைத்திருப்பதை அவன் தோல்வியின் கணக்கில் சேர்ப்பதில்லை! முதல் பரிசு அவனுக்குத்தான் கிடைத்தது. எல்லோரும் பாராட்டினார்கள். அவள் சின்னப் புன்னகை சிந்தி சென்று விட்டாள். எனினும் மேகத்தை நீங்கி நிலவு வெளிப்பட்டபோதெல்லாம் கார்த்திக் சிந்தனைக்கு கூந்தலை ஒதுக்கி வெளிப்பட்ட அவள் முகம் தெரிந்தது. மல்லிகை மொட்டுக்கள் சரமானதை பார்க்கிற போது அவள் பல் வரிசை தெரிந்தது. அவளைப் பல வகையிலும் தொடர்பு கொள்ள முயற்சித்தான். அதில் சிக்கலில்லை.

“ நீ ஹீரோவாச்சேடா? உனக்குப் படியாத ஃபிகரா? ” ஏற்றி ஏற்றி குளிர் காய்ந்தது நண்பர் கூட்டம்.

தொடர்பை வலுப்படுத்த முயற்சித்த போது அவள் நழுவினாள். தனக்கென ஒரு எல்லை வகுத்துக் கொண்டு தானும் மீறாமல் பிறரையும் மீற விடாமல் ஒரு நதியைப் போல் பயணப்பட்டாள் அவள்.

அவள் கூட்டமில்லாத ரெஸ்டாரெண்ட்டில் தனித்திருந்த போது அங்கு வந்த கார்த்திக் தன் காதலைத் தெரிவித்தான். “ ஐ லவ் யூ.” அப்போதும் அவளிடம் சின்னப் புன்னகைதான். “ நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? ” என்றாள் அவள்.

“ எஞ்சினியரிங் காலேஜ்.. கடைசி வருஷம்.. ”

“ சரி, இந்த வார்த்தைகளை ரிசர்வ் பண்ணி வைங்க. நீங்க படிச்சி முடிச்சி நல்ல வேலையில சேர்ந்ததும் உங்க உலகம் மாறிப் போகும்; ரசனை மாறிப் போகும். அப்ப உங்களுக்குப் பிடிச்சவ கிட்ட இதைச் சொல்லுங்க... ” அவள் நாசுக்காக காபியை முடித்துக் கொண்டு கௌண்ட்டரை நோக்கி நடந்தாள்.

“ யெஸ்ஸா நோவா? ”

பொறுமையிழந்து கேட்ட கார்த்திக்கை ஆச்சரியமாகப் பார்த்தவள் “சரியான எஸ் கே” என்று தனக்குள் சொல்லிச் சென்றாள். “எஸ் கே” என்றால் கல்லூரி பாஷையில் “சாவு கிராக்கி” என்று அர்த்தம்.

“அவ அழகா இருக்கற திமிருடா.. அழகு குறைஞ்சா ஆட்டமாடிக்கா உன் கிட்ட வருவா”. பாக்கெட் சிகரெட்டுக்கும் பைக்குக்கும் தூபம் போட்டனர் தோழர்கள்.

அன்றைக்கு யாரோ ஒருவனும் அவளும் சிரித்து சிரித்துப் பேசுவதைப் பார்த்தான் கார்த்திக். அவன் பெயர் பிரசாத். அடிக்கடி சந்திக்கிறார்களாம்! வீடும் பக்கத்திலாம்! மூளைக்குள் ‘கபகப’ வென்று பற்றி எரிந்தது.

மாணவன் என்கிற அடையாளத்தை வைத்து அடர் சல்ப்யூரிக் அமிலம் வாங்கினான்!

குன்றத்தூரில் கல்லூரிக்குப் போகும் வழியில் சின்ன விளையாட்டுத் திடல். அதை படியேறிக் கடந்து இடப்புறம் திரும்பினால் கல்லூரி.

தீர்த்தனா படியேறிக் கொண்டிருந்த போது எதிர்பட்டான் கார்த்திக். “ஏண்டி, எனக்கு உபதேசம்; பிரசாத்துக்கு பிரசாதமா?” கண்ணிமைக்கும் நேரத்தில் அமிலத்தை அப்படியே வீசினான்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

முகப்பில் திருப்பதி வெங்கடாஜபதி விக்கிரகம் பதித்த பாலாஜி அபார்ட்மெண்ட். பச்சை பெயிண்ட் அடித்த முதல் தளத்தில் முதல் வீடு. வாசலுக்கு முன் துளசிச் செடியும் சோற்றுக் கற்றாழையும் தொட்டிகளில் நின்று வரவேற்றன. இந்த வீட்டில்தான் மகள் தீர்த்தனாவுடன் சுந்தரேசன்- வத்சலா தம்பதியினர் வசித்து வந்தனர்.

சுந்தரேசன் கனரா பாங்க் மானேஜர். கீழ் தளத்தில் சுந்தரேசனின் அக்கா குடும்பமும், இடப்பக்கம் அவரது தம்பி குடும்பமும். இரண்டாம் தளத்தில் வத்சலாவின் தம்பி தன் மனைவி, மகள் கீர்த்தனாவுடன் வசித்து வந்தார். தீர்த்தனாவும் கீர்த்தனாவும் சம வயது. இருவருக்கும் ஒரே மாதிரி உடை அணிவித்து ஒரே மாதிரி அலங்கரித்து ரைமிங்காக பேர் வைத்து அழகு பார்த்திருந்தது சுற்றம். சுந்தரேசனின் தம்பி மகன் அதாவது தீர்த்தனாவின் சித்தப்பா பையன் பிரசாத், தீர்த்தனாவுக்கு விளையாட்டுத் தோழன். தீர்த்தனா மேல் அவ்வளவு பிரியமாக இருப்பான். நேரம் தெரியாமல் பேசுவார்கள் இருவரும்.

இந்த சொந்தங்கள் தவிர அந்த அபார்ட்மெண்ட்டில் வசிக்கிற ஜோதி டீச்சர், ஆர்த்தி ஆன்ட்டி, பத்திரிக்கை நிருபர் சற்குரு என்ற நண்பர்கள் வட்டமும் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து நெருக்கமாகி இருந்தது.

அபார்ட்மெண்ட் என்றால் வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் சுவர்கள் இருக்கும். பாலாஜி அபார்ட்மெண்ட்டில் இவர்கள் வீட்டுச் சுவர்கள் தாங்குவதற்கும், சம்பிரதாயத்துக்கும்தான். கார சட்னி, குழம்பு ரசம் சாப்பாடு ஐட்டமாகட்டும்; காபி பொடி, சர்க்கரை, பச்சை மிளகாய் போன்ற மளிகை சாமானாகட்டும்; அல்லது புடவை துணிமணி, சூட்கேஸ், மூக்குக்கண்ணாடி- எதுவாகட்டும்; தீர்த்தனா வீட்டின் பொருள்கள் சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும். அதே போல் அவர்கள் பொருள்கள் இவர்கள் வீட்டில் கை மாறும். சுந்தரேசன் மொபைலுக்கு வத்சலா அழைத்து “என்னங்க” என்றால் “ஹிஹி, என்ன அண்ணி” என்று விளிக்கப்படுவது சகஜம்.

இது தீர்த்தனாவின் ஒரு நாளையப் பொழுது. முதல்நாள் இரவு கிட்டத்தட்ட ஐந்து குடும்பம் மொட்டை மாடியில் உட்கார்ந்து நிலாச்சோறு சாப்பிட்டது. மொட்டை மாடிக்கு வர முடியாத பெரியம்மாவுக்கு தீர்த்தனா சாப்பாடு கொண்டு போய் கொடுத்தாள். ரெகார்ட் நோட்டில் வரைந்தபடி தூங்கிப் போன தீர்த்தனாவை அப்பாவும் சித்தப்பாவும் ஏலேலோ கப்பலாய் இரண்டு முறை ஆட்டி பெரியம்மா வீட்டுப் படுக்கையில் தூங்க வைத்தனர்.

அதிகாலையில் பெரியம்மாவுக்கு முதுகு தேய்த்து விட்டு அப்படியே பல் விளக்கி கொண்டு மாடியேறிப் போய் தன் வீட்டு வாஷ்பேசினில் துப்பி, அங்கேயே பிரசாத்துடன் காபி குடித்து, மாமா வீட்டில் குளித்து மாமா பெண்ணின் சிவப்புப் பூப் போட்ட வெளிர் மஞ்சள் சுரிதாரை அணிந்து கீழே வந்தாள்.

அப்பா ஆபிசுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக அவர் பைக்கை எடுத்துப் போய் பெட்ரோல் போட்டு வந்தாள். எல்லார் வீட்டுத் துணியையும் சேகரித்து சித்தப்பா வீட்டு வாசிங் மெஷினில் துவைக்கப் போட்டாள்.

“அம்மா, இன்னைக்கு தேங்காய் சாதம் எடுத்துட்டுப் போகவா? ” வெள்ளை வெளேர் தேங்காய் துண்டுகளை பார்த்தபடி சமையலறையில் தாயைக் கேட்டாள்.

“மதியம் வரை தாங்குமா? ”

“அன்னைக்கு தாங்கிச்சே? ”

“நாலு பேர் எதிர்ல டிபன் பாக்ஸை திறக்கணும். சாதம் ஊசிப் போயிருந்தா சங்கடம். நீயும் பிரசாத்தும் தக்காளி சாதம் எடுத்துக்குங்க. தேங்காய் சாதத்தை ஹாலி டே சமயத்துல சாப்பிட்டுக்கோயேன்”.

“ஹாலி டேதான் முடிஞ்சிடுச்சே, இனி எங்கே சாப்பிட?” மெதுவாக முணுமுணுத்து ஒரு துண்டுத் தேங்காயை வாயில் போட்டுக் கொண்டாள்.

“தீர்த்தனா, தலை வாரிட்ட உடனேயே பூவை வச்சிக்கோ. அப்புறமா உனக்கும் மறந்துடுது, எனக்கும் மறந்துடுது. ”

ஒரு பட்டுச்சேலை, சோளி, இமிடேசன் நகைகளை எடுத்து வைத்த தீர்த்தனா, தாயிடம் சொன்னாள்.

“அம்மா, க்ளாஸ்மேட் நித்யாவுக்கு இன்னிக்கு சாயந்திரம் மேரேஜ் ரிசப்ஷன். நா காலேஜ் முடிச்சுட்டு பக்கத்துல ரம்யா வீட்டுல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடறேன். ”

“பத்திரமா போயிட்டு வாம்மா ” என்று சொல்ல வந்த தாய் ஏதோ ஞாபகத்தில் “டயத்துக்கு போயிடும்மா” என்றாள்.

பிரசாத்தோடு பைக்கில் பஸ் ஸ்டாண்ட் போனபோது வானம் துணுக்கு மேகங்களற்று நிர்மல நீலமாகத் தெரிந்தது. தீர்த்தனாவுக்கு ஏதோ ரெக்கை முளைத்த உணர்ச்சி!

குன்றத்தூர் புத்தகக் கடையில் மாமாவுக்காக சுந்தர காண்டம் வாங்கினாள். நிதானமாகத் திடலைக் கடந்து

ப..

டி..

யே..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Oct-20, 1:07 pm)
Tanglish : kannimaikum neram
பார்வை : 199

மேலே