நெருப்பை அடைகாக்கும் சிட்டுக்குருவி

................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... .நெருப்பை அடைகாக்கும் சிட்டுக்குருவிகள்..

ஒரு பதினெட்டு வயது புற்று நோயாளிப் பெண்ணின் டைரியிலிருந்து…

.............நான் சுவர்ணா. ஏழு வருடங்களுக்கு முன் என் இடது காலில் கட்டி வந்தது.. வலி.. வலி…! நடக்க முடியவில்லை..! சகல விதமான பரிசோதனைக்குப் பின் எலும்புப் புற்று நோய் என்றார்கள். காலை வெட்டி எடுத்த பிறகு செயற்கைக்கால் வைத்துக் கொண்டிருக்கிறேன். கால் போன பிறகு கால்வலி இல்லை.

............இருந்தாலும் உடல் முழுக்க ஒரு வலி பரவுகிறது. யாரோ நம் உடலைச் சுருட்டி அமிர்தாஞ்சன் பாட்டிலுக்குள் அடைக்க முயல்வதைப் போல அப்படி ஒரு வலி..! முகம் கோணிக் கொள்ளும்.. கண்கள் பஞ்சடையும்.. ! எழுந்து நிற்க முடியாதபடிக்கு ஒரு தள்ளாமை.. சோர்வு..! அப்படியே பூமிக்குள் புதைந்து போய் விடலாமா என்று தோன்றும்.. ! அப்புறம் அம்மா ஓடி வந்து ஒரு ஊசி போடுவார்கள்..! வலி அப்படியே போய்விடும்.. இந்த உலகம் புதிதாக இருக்கும்.. !

...........அம்மா தயிர் சாதத்தில் மாதுளை முத்துக்களைக் கலந்து ஊட்டுவார்கள்.. ! விரைவாக…. மிக விரைவாக…! ஏன் தெரியுமா? கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்து விடும்.. அந்த வலி மரப்பு ஊசி அவ்வளவு ஆற்றல் மிக்கது..! பிறகு நான் எப்போது எழுவேன் என்று தெரியாது.. எழாமலும் போகலாம்..!

............கண் விழிப்பேன்.. அப்படியே ஒரு பரவசம் உண்டாகும்.. ! இன்னும் நான் இருக்கிறேன்..! இவை எனக்கான நாட்கள்.. ! பணத்தை விடவும் பொன் மணி வைரங்களை விடவும் மதிப்பு மிகுந்த மணித்துளிகள் என் கையில்..! வலி இன்னும் வந்திருக்காது.. ஓடுகிற மின்விசிறியின் சப்தம் கவிதை மாதிரி இருக்கும்.. சூரியனின் பொன் கிரணங்கள் ஒரு ஆனந்தப் பாற்கடலை என் முன் கொண்டு வந்து கொட்டும்..

............போன வருடம் வரை பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தேன்.. இப்போதெல்லாம் பள்ளித் தோழிகளும் தோழர்களும் ஆசிரியர்களும் என்னைப் பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள்.. நான் மகிழ்ச்சியோடு அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறேன்..

...........அம்மா கண்கள் பெரும்பாலும் சிவந்திருக்கும்.. இருப்பினும் முகத்தில்அப்படியோர் அமைதி.. அவர் எனக்கு யூ டியூபில் எதையேனும் காட்டுவார்.. அல்லது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பேன்.. சில சமயம் அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் இறக்குவார்.. ஈர மண்ணின் ஸ்பரிசம் ஒரு காலை வருடிக் கொடுக்கும்..! நான் வைத்த தக்காளிச் செடி பூ விட்டிருக்கும்..!

...........சில சமயங்களில் திருக்குறள் கீதாஞ்சலி என்று எதையாவது படிப்பேன்.. ஏதாவது வரைந்து வர்ணம் தீட்டுவேன்.. அம்மா நகங்களுக்குப் பூச்சிட்டு கண்ணில் மை வைப்பாள்.. கண்ணாடியில் ரசிப்பேன்..

..............‘’துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு’’ என்ற குறளுக்கு, துப்பாக்கியால் சுடுவது போல தம்பி சைகை காட்டுவான்.. நான் விழுந்து விழுந்து சிரிப்பேன்..

இதற்கு மேல் வலி ஆரம்பித்து விடும்..!

நெருப்பை அடைகாக்கும் சிட்டுக்குருவி நான்..! இந்த நெருப்பு எப்போது என்னை எரிக்கும் என்று எனக்குத் தெரியாது..

இன்று இந்த நிமிடம் நான் இருக்கிறேன்.. அல்ல.. அல்ல…! நான் வாழ்கிறேன்..! ! !

மரப்பு ஊசி போட்டு வலி மறைந்த பின்னும் தூக்கம் வருவதற்கு முன்னும் உள்ள காலமும் தூங்கி எழுந்த பின் இன்னொரு வலி வருவதற்குள் உள்ள காலம்தான் நான் வாழ்க்கையை நுகரும் காலம்..

அது இனிமையாக இருக்கிறது.. அழகாக இருக்கிறது..!

அம்மா சட்டென்று என்னை உள்ளே அழைத்துச் செல்கிறாள்.. அப்படியும் என் காதுகளுக்கு அந்தக் கூக்குரல் கேட்டு விடுகிறது…


‘’நீட்டுல சீட் கிடைக்கலேன்னு தூக்குல தொங்கிட்டாளே..! !’’

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Oct-20, 11:44 am)
பார்வை : 98

மேலே