கருகிய செம்மலர்கள் -- part 1

நினைவு கூறுதல்

இந்த நேரத்திலே எனக்கு ஜோலார்பேட்டை நக்சல்கள் பற்றித் தகவல் தந்த அன்றைய S.I. இந்நாள் தெய்வத்திரு DSP. J. பாஸ்கரன் அவர்களையும், காவலர் ஜோலார்பேட்டை ராஜு அவர்களையும், ஓய்வு பெற்ற S.P. திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற டி.எஸ்.பிக்கள் - ராமசாமி, ஹென்றி ஜோசெப், சின்னராஜ், அண்ணாத்துரை, கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சையத் இமாம், RSI செல்வராசையும், சீராளனின் சம்பவத்தில் ஈடுபட்டு நல் காவல் பணிபுரிந்த, ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் 2174 காசி, காவலர்கள் 1902 சிவலிங்கம், 670 ராமசாமி ஆகியோரையும், தீவிரவாதி இருட்டுப் பச்சையால் தாக்கப்பட்டத் தலைமைக் காவலர் சுப்பிரமணி, TNJ 1111 ஓட்டுனர் பெருமாள் ஆகியோரையும் நினைவு கூறுகிறேன்.

கூடப்பட்டு காக்கனாம்பாளையம் கோவிந்தசாமி நாயக்கர் மற்றும் எங்களை உபசரித்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். இந்தப் புத்தகத்தை நான் எழுத மிகவும் உதவி புரிந்த என் மகன் V.P. Rajkumar B.E., மகள் V.P. Gayathri M.A. M.Phil., அவர்களையும், என் மனைவி T.Hemalatha B.Sc., யும் நான் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்கிறேன்.

இந்தப் புத்தகத்தைப் படித்து வாழ்த்துத் தெரிவித்த பெருமதிப்பிற்குரிய தமிழக முன்னாள் காவல் துறை டைரக்டர் ஜெனரல் ஆப் போலிஸ் திரு. வால்டர் தேவாரம் I.P.S. அவர்களையும் நான் நினைவு கூறுகிறேன்.
R.பழனி. B.A.
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு).
Vellore, August 2018.



முன்னுரை
சீன கம்யுனிஸ சித்தாந்தங்கள்:

1. "உன் திறமைக் கேற்ப உழை உன் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்!"

2. "பெற்றோர் மடியில் தவழும் குழந்தைகளைத் தவிர எந்த சொத்தின் மீதும் நீ உரிமை கொண்டாட முடியாது!"

3. "அழுத்தமும், அடக்கு முறை கொண்ட அரசாங்கம் மெல்ல ஒழிந்து போகும்!!"

இந்த சித்தாந்தங்கள் சீனாவில் கூட பொய்த்துப் போனது. உலகப் பெருஞ் செல்வந்தர்கள் 270 ல் 53-க்கும் மேற்பட்டவர்களைச் சீனா தன்னகத்தே கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளதாம். சிறிது கற்பனைக் கலந்த இந்த உண்மைக் கதையில் சில நபர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சித்தாந்தங்களை ரஷ்யா, சீனா மற்றுமுள்ள 11 கம்யூனிஸ்ட்டு நாடுகளிலே பின் பற்றாத போது இங்கு மல்லுக்குக்கு மாரடித்து கம்யூனிச கனவுலகில் திளைத்து வருகிறார்கள்.

கம்யூனிசம் என்பது கடவுள் படைத்த இயற்கைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. 1910-ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி வெடித்து அந்த புரட்சி வெள்ளம் சீனா வரைப் பரவியது. ஆனால் அது பொய்த்துப் போனது. எது எதற்கு எதிர் என்கிறோமோ அந்த இரண்டும் இருந்து கொண்டு தானிருக்கும்.பொய் என்றால் உண்மையும், வீரனென்றால் கோழையும், அழகென்றால் அருவருப்பும் போன்று பணக்காரன் ஏழை என்பது ஒழிக்க முடியாத ஒன்று. இதை மட்டும் மனிதர்கள் ஏனோ புரிந்தும் புரியாததுபோல் நடந்துகொள்கிறார்களோ தெரிவில்லை. அதனால்தான் அளவிட முடியா சக்தி படைத்த பரபிரும்மக் கடவுளையும் முட்டாள்தனமாக ஏற்க மறுக்கிறான். புளுவேல்ஸ் விளையாட்டில் பிள்ளைகள் கடைசியில் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளுதற்கு ஒப்பாகும் இந்தக் கம்யூனிசக் கொள்கை.

மானுடர் அழியும் வரை கட்டுப்பாட்டிலிருந்தே எந்திர வாழ்க்கையை அனுபவித்து சாக நேரிடும். அதே சமயம் மக்கள் திருட்டு வழியில் வேறு வாழ்க்கையில் ஈடுபட்டு அடக்குமுறையால் தண்டிக்கப் படுவார்கள். இப்படியொரு வாழ்க்கைத் தேவைதானா? கம்யூனிஸ கொள்கையைக் ரஷ்யா சோசியலிஸ்ட் எனக் கொள்கையைத் தளர்த்திக் கொண்டது. ஆனால் சீனாவோ கம்யூனிஸ பெயர் மாற்றாது பல மாற்றங்களை செய்து கொண்டு மக்களை அடக்கி யாண்டு கொண்டிருக்கிறது. இந்த விஷத் தத்துவ விதைகளை இந்தியாவிற்கு கொண்டுவந்து விதைத்தவர் வங்காளத்தைச் சேர்ந்த நரேந்திர நாத் பட்டாச்சார்யா என்கிற Manibenthra Naath Roy. இவர் 1917-ல் ரஷ்யப் புரட்சிக்குப் பின் ரஷ்யா சென்று கம்யூனிசக் கொள்கைகளைக் கற்று வந்து இந்தியாவில் பரப்பினார். இந்த விஷ வித்துக்கள் அதிகமாக ஆந்திராவில் பரவியது. அப்போது நம் முன்னாள் காவல் துறை I.G. F.V. அருள் தென் ஆந்திராவில் A.S.P. யாக வேலை பார்த்தபோது ஒரு நகைக் கடையில் கம்யூனிஸ்டுகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொள்ளை அடித்துள்ளனர்.

ஒரு சமயம் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் குற்றவாளி ஒருவனை போலீசார் கைது செய்து ரயிலில் கொண்டு சென்றுள்ளார்கள். அப்போது மற்றொரு கும்பல் ரயிலில் ஏறி காவலர்களைச் சுட்டு வீழ்த்திவிட்டு குற்றவாளியை மீட்டுச் சென்றுள்ளது. அப்போது இருந்த வெள்ளையனின் அரசாங்கம் 1937-ல் உடனடியாகக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்துவிட்டது. சுதந்திரம் வந்த போது மீண்டும் கம்யூனிஸ்டுகள் துளிர்த்து விட்டார்கள்.

இந்தியாவில் எமெர்ஜென்சி அமலில் இருந்த போது மார்ச் 1, 1976 அன்று நக்சல் என்று கருதப்பட்ட ராஜன் என்கிற காலிகட் பொறியியல் கல்லூரி மாணவனைக் கேரள போலீஸ் கைது செய்தது. ராஜனை கேரளா போலீசார் சித்ரவதை செய்து கொன்று மறைத்த வழக்கில் ஜெயராம் படிக்கல் IPS என்ற கேரள காவல் துறை DIG அதிகாரியை கேரள உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்ததது. இச்சம்பவம் மிகவும் பிரபலமாகி நாடு தோறும் உள்ள போலீசார் நக்சல்களைத் தொட விடாமல் செய்ததது.

🙟 1 🙜
செழுமைமிகு ஆம்பூர்
சங்க காலத்தில் ஆந்திரர் 'அரவர்' என்று அழைத்த தமிழர் வாழ்ந்த ஊர்தான் ஆமூர் ('ஆம்' என்னும் சொல் ஊற்று நீரைக் குறிக்கும்) தற்போது மருவி ஆம்பூர் ஆனது). 1976-லிருந்து 1982 வரை ஆம்பூர் அடுத்த ஜோலார் பேட்டையின் குளு குளு ஏலகிரி மலை, தணல் கக்கும் எரிமலையாக மாறி அது வெடித்து தீக்குழம்புகளை நாலாப்பக்கமும் சிதறி அது எப்படி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது, காவல் துறையை அது எப்படி யெல்லாம் அலை கழித்தது, ஏலகிரி மலை மீது எப்படி மனித ரத்தங்கள் தெளிக்கப்பட்டது. அந்த ரத்தம் பட்ட இடங்களில் எவ்வாறு செம்மலர்கள் பூத்துக் குலுங்கியது. அந்த செம்மலர்கள் எப்படி பெருகிப் பின் எப்படி கருகியது என்பதை பற்றி தான் உண்மை சம்பவங்களைத் தொகுத்து அளிக்கப் பட்டுள்ளது.

ஏலகிரி ஜோலார்பேட்டை அருகில் உள்ள மலை. அது சுமார் 4,350 அடி உயரமுள்ள மலை. அந்த மலை மீது 12 கிராமங்கள் இருக்கிறது. மலை வாழ் மக்கள் அனைவரும் அப்பாவி மக்களாவார்கள். ஆனால் அடிவார மக்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

1976-ல் ஆம்பூர் ஒரு சிறிய நகரமே. எப்போதும் ஜன நெரிசலாக எல்லா விதமான கன ரக மோட்டார் வாகனங்களும் செல்லும் சென்னை - காலிகட் ரோட்டில் அமைந்துள்ளது. இது தவிர கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கும் செல்லலாம். ஆம்பூர் எல்லைக்குக் கிழக்கே வீர கோயிலில் ஆரம்பித்து மின்னூர், மாராப்பட்டு வரை நீள்கிறது. சாலையின் இருபக்கமும் வழி நெடுகிலும் புளியம், பனை, புன்னை, புங்கன், மருத மரங்கள் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் தென்னந் தோப்புகள் நிறைந்து ஆம்பூரை எப்போதுமே குளிர்ச்சியாக வைத்திருக்க முயல்கிறது. டவுனில் நுழையும் போதே O.A.R. தியேட்டர் பின்புறம் ரோட்டின் இருபுறமும் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்த்தவர்களும் குடிசைகள் போட்டு ஒரு சிறிய கிராமத்தையே உருவாக்கி விட்டார்கள். B-கஸ்பாவைத் தாண்டும் போது மல்லிகை, இருவாட்சி, முல்லை, தாழம்பூ, சாமந்தி, தவனக் கொழுந்து இவைகள் கலந்த நறுமணம் நம்மை வரவேற்கிறது.

அவைகள் இங்கு பயிரிடப்படுவதே அதற்குக் காரணம். இதை தாண்டிச் சென்றால் நல்லதம்பி டிஸ்பென்சரி, முஸ்லிம் ஹைஸ்கூல், தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன், நடுவில் சில தொழில் பட்டறைகளும், ஒரு பெட்ரோல் பங்க்கும் உள்ளது. இதை தாண்டினால் எல்லோர் மூக்கையும் துளைத்து, நாவில் எச்சிலை ஊறவைக்கும் சலாம் ஓட்டல் பிரியாணியின் வாசம் தூக்குகிறது. ஓட்டலின் அருகில் எப்போதும் போலீஸ் விசில் அடித்துச் சப்தம் போட்டபடி போலிஸார் நேராக வருவார்கள். மெயின் ரோட்டின் இருபக்கமும் லாரிகளையும், கார்களையும் பயணிகள் நிறுத்தி விட்டு சலாம் ஓட்டலின் பிரியாணியை ருசித்து சுவைத்த வண்ணம் இருப்பார்கள். பிறகு பிரியாணி பொட்டலங்களைப் பார்சல் கட்டிக் கொண்டு தான் வெளியே வருவார்கள். போலிசின் ஏச்சையும், விசில் சப்தத்தையும் கேட்டு அவசரம் அவசரமாக அவரவர் வாகனங்களை எடுத்து ஓட்டிச் செல்வார்கள்.

எதிரில் மார்டன் கேப் எனும் ஐயர் ஓட்டல் ஒன்று இருக்கிறது. இதைத் தாண்டினால் M.A.R. லாட்ஜும் எதிரில் வேலூர் A.S.A பேக்கரியின் கிளையும் வலது பக்கத்தில் ஸ்ரீ டாக்கீசும் இருக்கிறது, அதற்கு எதிரில் இடது புறம் ஓலை வேய்ந்த சுமார் ஏழெட்டுக் கடைகள் உள்ளன. கடைகளில் போலீஸ் இன்பார்மர் முகமது அலியின் சைக்கிள் ரிப்பேர் கடை உட்பட பல விதமான வியாபாரங்கள் நடந்து கொண்டிருக்கும். முகமதலிக்கு ஆம்பூரில் எது நடந்தாலும் தகவல் கிடைத்து விடும். உடனே முகமதலி அதை டவுன் போலீசுக்கும், தாலுக்கா போலீசுக்கும் சொல்லி நடவடிக்கை எடுக்க உதவி செய்வார். அதையும் தாண்டினால் வடக்கில் போலீஸ் ஸ்டேஷன் ரோடு. அதன் உள்ளேச் சென்றால் அரசு மருத்துவ மனை, காவல் நிலையம், கோர்ட்டு, முனிசிபல் மார்கெட், ஆம்பூர் நகர மக்களின் குடியிருப்பு, மாடி வீடுமுதல் ஓட்டுவீடுகளும் காணப்படும்.

மெயின் ரோட்டின் தெற்கில் இரயில்வே ஸ்டேஷன் ரோடும் போக்குவரத்து நெரிசலோடுக் காணப்படும். ரயில்வே ஸ்டேஷன் உட்புறம், டிராவலர்ஸ் பங்களா அடர்ந்த தேக்கு மரத் தோப்புகளிடையே மறைவாக அனாதையாக நிற்கிறது. அங்கும் முஸ்லீம்களின் குடிசைகள் நிரம்ப ஆக்ரமித்து இருக்கிறது. ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம், சோமலபுரம், ஆலாங்குப்பம், பெரியான் குப்பம் இருக்கிறது. ஆலாங்குப்பம் கிராமம் உள்ளே இருந்தாலும் மெயின் ரோட்டில் தனியாக குடிசைப் போட்டுக்கொண்டு அங்கு நேரு சிலைக்குப் பக்கத்தில் டீ கடையொன்றை தங்கவேல் முதலியார் நடத்தி வந்தார். தங்கவேல் முதலியின் டீ கடை எதிரில் இரண்டு பெரிய ஜமீன்களின் அரண்மனை வீடுகளும், அங்கேயே அவர்களின் நிலங்களும் இருக்கிறது. பெரியான்குப்பம் மெயின் ரோட்டில் சவுத் இந்தியன் டேனரியும், T.A. அப்துல் வாஹித் டேனரியும் வண்ண வண்ணத் தோலாடைகள் தயாரிக்கின்றன. பெண்களின் கைப்பைகள், ஷூக்கள், செருப்புகள் , தோல் கால்சட்டை, மேலாடை, கையுறைகள் எல்லாம் தயார் செய்து மேலை நாடுகளான ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இங்குக் கூலி வேலைகளுக்குப் பஞ்சமில்லை.

டேனரிகளும், பீடி பேக்டரிகளும், தேங்காய் மண்டிகளும், கயிர் மண்டிகளும், வெல்ல மண்டிகளும் தங்கள் தொழிலாளர்களை மன நிறைவுடன் மிகவும் அமைதியாக வைத்திருக்கிறது. மின்னூரில் ஒரு அரசு டேனரியும் இயங்கி வருகிறது.மின்னூர் கிராமத்தின் பின் புறத்தில் இருந்து, ஆலங்குப்பம், சோலூர், சான்றோர் குப்பம் கிராமங்களின் பின் புற மண் ரோட்டின் வழியாக ஆம்பூர் வயல் வெளியை வந்து அடையலாம். இங்கு தான் கரும்புக் கொல்லையின் மத்தியில் ஆம்பூர் போலீஸ் சர்கிள் ஆபீஸ் இருக்கிறது.



🙟 2 🙜

காவலரைத் தாக்குதல்
ஆம்பூர் போலீஸ் சர்க்கிள் ஆபிஸ் இருக்கும் இடத்தில் ஜன நடமாட்டம் சிறிதும் கிடையாது. இந்த மண் ரோடு பள்ளிக் கொண்டா வரை சுமார் 30 K.M. நீண்டுச் செல்கிறது. இந்த போலீஸ் சர்க்கிள் ஆபீஸில் ஒரு சர்கிள் ஆய்வாளரும், ஒரு ரைட்டரும், ஒரு காவலர் எடுபிடிக்கு எனவும் இருப்பார்கள். உதவியாள் சரியாக 1 மணிக்கெல்லாம் சாப்பாட்டிற்கு சென்று விடுவார். 30-9-1976 அன்று பகல் 2 மணிக்கு வழக்கம் போல சர்க்கிள் ஆய்வாளர் வெங்கடாசலம் பகல் சாப்பாட்டிற்குப் போக வேண்டி தன்னுடைய ஸ்கூட்டரைத் தள்ளினார். ரைட்டர் தேசிங்கு ஓடி வந்து சல்யுட் அடித்து அவரை வழியனுப்பி வைத்தார்.

ரைட்டர் தேசிங்கு மட்டும் ஆபீசில் இருந்தார். ஆய்வாளர் சென்றபின் அவரும் முகம், கை கால்களை கழுவிக் கொண்டு சாப்பிட வந்தார். தூரத்தில் சிகப்பான ஒல்லியான ஒரு நபர் சைக்கிளை மிதிக்க, கருப்பாக ஒரு மெல்லிய தேகமுள்ள ஆசாமி பின் காரியரில் உட்கார்ந்தபடி சர்க்கிள் ஆபீசை நோக்கியவாறு வந்து கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் சைக்கிளில் டபுல்ஸில் போவது சட்டப்படிக் குற்றமாகும். அவர்களைப் பார்த்து விட்ட ரைட்டர் தேசிங்கு ராஜன் அவர்களை மடக்கிப் பிடித்து

"டேய்!! சைக்கிளை நிறுத்துங்கடா!! என்ன தைரியம் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் முன்னாலே டபுள்ஸில் வருவீர்கள்? !!!"
என்று சொல்லி அவர்களின் முதுகில் ஆளுக்கு இரண்டு அடி அடித்தார்.

சைக்கிள் நிறுத்தப் பட்டது. காரியரில் உட்கார்ந்து இருந்தவன் "மன்னிச்சிடுங்க சார்" என்று சொல்லி தேசிங்குவின் கைகளில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டைத் திணித்தான். டபுள்ஸ் கேசுக்கு மாஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆளுக்குத் தலா மூன்று ரூபாய் தான் அபராதம் விதிப்பார். தனக்கு அவர்கள் ஐந்து ரூபாய் கொடுக்கவே ரைட்டர் தேசிங்குவிற்கு சந்தேகம் வந்ததுவிட்டது. சைக்கிளை ஆபிஸினுள் கொண்டு வந்து நிறுத்தினார். கருப்பாக இருந்த ஆள் தேசிங்குவின் கையில் இன்னொரு 5 ரூபாய்த் தாளை திணித்தான். அது ரைட்டர் தேசிங்குவிற்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியது. சைக்கிளில் தொங்க விடப்பட்டு இருந்த இரண்டு கைப்பைகளிலும் என்ன இருக்கிறது காட்டுங்கடா என்று அவர்கள் முதுகின் மீது தலா ஒரு குத்து ஓங்கிக் குத்தினார். பிறகு தானே கைப்பைகளை எடுத்து சோதிக்க முற்பட்டார்.

உடனே சிகப்பாய் இருந்தவன் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிச்சுவாக் கத்தியை எடுத்து ரைட்டர் தேசிங்குவின் இடுப்பிற்கு மேல் ஓங்கி ஒரு குத்து குத்தினான். கத்திக்குத்து வாங்கிய தேசிங்குராஜன் அலறிக் கீழே சாய்ந்தார். பிறகு சைக்கிளில் வந்த இருவரும் கரும்புக் கொல்லையினுள் ஓடி தேவலாபுரம் நோக்கி ஓடி மறைந்தார்கள். கத்திக் குத்துபட்ட தேசிங்கு "ஐயோ !! கத்தியால் குத்திட்டு ஓடுரானுங்க, பிடியுங்க, பிடியுங்க !" என்று கூச்சல் போட்டார்.

அலறலைக் கேட்டு சுமார் 5 க்கும் மேற்பட்டவர்கள் அருகில் இருந்தக் கரும்புக் கொல்லையில் இருந்து ஓடி வந்தார்கள். தேசிங்குவின் காயத்திற்கு துணி வைத்து அழுத்திக் கட்டினார்கள். ரத்தம் பீரிட்டபடியே இருந்தது. காவலர் தேசிங்கு ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து உதவிக்கு ஆட்களை வரச் சொன்னார்.

ஆம்பூர் டவுன் ஸ்டேஷனில் இருந்த ஒரு ஏட்டும், சில காவலர்களும் ரிக்க்ஷாவுடன் வந்தார்கள். தேசிங்குவை ஏற்றி ஆம்பூர் டவுன் ஸ்டேஷனிற்கு பக்கத்திலே இருந்த ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். ஆம்பூர் ஆய்வாளர் தகவலின் பேரில் அவருடைய ஆபிஸிற்கு வந்தார். அவர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களின் சைக்கிளில் இரண்டு கைப் பைகள் அப்படியே இருந்ததை அவர் சோதித்து பார்க்க, ஒன்றில் ஒரு சட்டை, ஒரு லுங்கி, "கங்கையிலிருந்து ஓல்கா வரை" என்ற கம்யூனிஸ்ட் புத்தகமும், இன்னொரு பையில் ஒரு சட்டை, ஒரு லுங்கியும், நூல் சுற்றப்பட்ட இரண்டு நாட்டு வெடிகுண்டுகளும் கூடவே சில ஜெல்லெட்டின் குச்சிகளும் இருந்தது. ஆய்வாளர் வெங்கடாசலம் ஆம்பூர் டவுனில் F.I.R. போடச் சொன்னார். Ref:- (Ambur Town P.S. Cr.No: 1236/76 U/S 307 I.P.C. r/w 286 I.P.C.). இரண்டு நாட்டு வெடி குண்டுகளையும் தண்ணீர் வாளிகளில் போடச் செய்தார். ஆய்வாளர் வெங்கடாசலம் மாவட்ட S.P., Q-Branch S.P. க்கும் தகவல் அனுப்பினர்.

சர்கிள் காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் காவலர்களை சுற்றுப்புற கிராமங்களுக்கு அனுப்பி ஓடி மறைந்தக் குற்றவாளிகளைத் தேடச் சொன்னார். போலீசை கத்தியால குத்திட்டாங்க, கத்தியால குத்திட்டாங்க என்று ஆம்பூர் மருத்துவ மனை முன்பாக ஊர் மக்கள் கூடி விட்டார்கள். அவர்களைக் கலைக்க போலீசாரால் முடியவில்லை. திரி ஸ்டார் லாரி ஓனர் இஸ்மாயில், சைக்கிள் ஷாப் முகமது அலி, மாடர்ன் கேப் ஐயர், பழைய M.L.A. க்கள் சம்பங்கி, பன்னீர் செல்வம் ஆகியோர் மருத்துவ மனைக்குச் சென்று தேசிங்குவைப் பார்த்து ஆறுதல் சொன்னார்கள். மேல் சிகிச்சைக்காக தேசிங்குவை வேலூர் மருத்துவ மனைக்கு காரில் அனுப்பி வைத்தார்கள்.

Q-பிரிவு D.S.P. (சென்னை), ஆய்வாளர் ஹென்றி ஜோசெப், உதவி ஆய்வாளர் R.பழனி ஆகியோர் கத்திக் குத்து பட்ட தேசிங்கு ராஜனை அன்றே வேலூர் அரசு மருத்துவ மனையில் விசாரித்தார்கள். தேசிங்குராஜன் சமீபத்தில் தான் வேலூர் ஆயுதப்படைப் பிரிவிலிருந்து லோக்கல் போலிசுக்கு மாற்றலாகி வந்த படியால் போலீஸ் வேலைகள் அவருக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை. சிகப்பான ஒல்லியான ஆசாமி குத்தியதாகக் கூறினார். அவர்கள் யார் எந்த ஊர் என்று கேட்பதற்குள் தன்னைக் குத்தி விட்டார்கள் என்று சொன்னார். கத்தியால் குத்தி விட்டு ஓடியவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆறு மாத காலமாக போலீசார் பல இடங்களிலும் தேடிக் கொண்டே இருந்தார்கள். தீவிரவாதிகளைக் கண்டு பிடிக்கவா முடியும்?

Q-பிரிவு உதவி ஆய்வாளர் R.பழனி தீவிரவாதிகளிடம் எப்படி நாட்டு வெடிகுண்டுகள் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேலூரில் இந்திய ராணுவ சர்விஸ் அலுவலகத்தில், சென்னை இன்ஜினியரிங் பிரிவில் (Madras Engineering Group) ஒய்வு பெற்றவர்கள் கற்றுத் தந்து இருக்க வேண்டும் என்று கருதி Sappers and Miners-களைப் பற்றி தீவிரமாக விசாரித்தார். ஆனால் விவரம் எதுவும் கிடைக்க வில்லை. அந்த பிரிவு விக்டோரியா மகாராணி காலத்தில் ஆரம்பித்ததாம். அந்த சமயம் அந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் மூன்று பேர்களுக்கு மேல் உயிருடன் இல்லை. மேலும் அவர்கள் மிகவும் அப்பாவிகளாகவும், வயதாகியவர்களாகவும் இருந்தார்கள்.

நாட்டு வெடிகுண்டுகளை நக்ஸல் தீவிரவாதிகளே செய்து அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டார்கள் என்று பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி நாட்டு வெடி குண்டுகளைத் தயார் செய்யும் போது தான் தமிழரசன், ஆம்பள்ளி முனிராசு என்பவர்கள் ஜெயங்கொண்டம் என்ற ஊரில் பிடி பட்டனர். நாட்டு வெடிகுண்டுகள் - கரிமருந்து, வெடியுப்பு, கந்தகம் - சேர்த்து செய்கிறார்கள். அதனோடு சைக்கிள் பல்சக்கர இரும்பு பால்ஸ் ரவைகள் நடுவில் வைத்து அதனுள் திரியையும் வைத்து நீட்டி வெளியில் கொண்டு செல்கிறார்கள். அந்த திரியை தீப்பெட்டியின் உரசும் இரண்டு பட்டிக்கு நடுவில் தீக்குச்சியுடன் வைத்து தீக்குச்சிகளை நூல் கட்டி விடுகிறார்கள். நூலை இழுத்தால் தீக்குச்சி எரிந்து திரியைப் பற்றவைக்கும். திரி எரிய கரிமருந்தும் கந்தகமும் வெடிக்கும் வகையில் நாட்டு வெடி குண்டுகள் தயார் செய்கிறார்கள்.

இது தவிர தீவிரவாதிகளுக்கு எப்படி ஜெல்லெடின் குச்சிகள் கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று Q-பிரிவு உதவி ஆய்வாளர் R.பழனி, ஏட்டு செல்வராஜை கூட்டிக் கொண்டு வடாற்காட்டில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வெடிமருந்து விற்பனையாளர்களை (Gun Powder K-License Holders and Gelatine sticks and Detonators L-Form License Holders) செக் செய்தார். இது தவிர தருமபுரியின் பார்டர் பேராம்பட்டு கிராமத்தில் ஜெல்லெட்டின் குச்சி டெட்டர்னெட் தாயத்துகள் (கிராமங்களில் அழைப்பது) விற்பனை குடோன்களைப் பார்வையிட்டு கணக்கு வழக்குகளை செக் செய்தார்.

வேலூர் கலக்டர் அலுவலகத்தில்தான் இவர்களுக்கு உரிமம் வழங்கப் படுகிறது. எல்லா விவசாயிகளுக்கும் கிணறு வெட்ட ஜெலட்டின் குச்சிகளின் தேவைகளுக்கு அவர்கள் கலெக்டர் ஆபிசில் அனுமதி வாங்கித் தேவைப்படும் போது சுமார் 25 குச்சிகள் வரை L-Form உரிமம் குடோனிலில் இருந்து ஓனரிடம் வாங்கிக் கொள்வார்கள். இப்படி விவசாயிகள் ஒரு முறைதான் வாங்க முடியும். அதன் பிறகு அவர்கள் வாங்க முடியாது. கலக்டர் ஆபீஸில் எந்தெந்த தாலுக்கா வில் எந்தெந்த விவசாயிகள் அனுமதி பெற்றார்கள் என்ற லிஸ்ட் இருக்கும். கலெக்டர் அலுவலகத்திற்கு L-Form உரிமம் ஓனர்கள் சென்று அந்த நகலை திருட்டுத் தனமாக வாங்கிக்கொள்வார்கள். ஜெல்லெடின் குச்சிகளை உரிமம் பெறாமல் யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு அதிக விலைக்கு விற்று முறைகேட்டில் ஈடு படுவார்கள்.

அவர்களுடைய தினசரி விற்பனை புத்தகங்களைப் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட 5 நபருக்கு மட்டும் மாற்றி மாற்றி சுமார் 100 தடவைக்கும் மேல் விற்பனை செய்திருப்பார். வாங்கிய நபரிடம் சென்று விசாரித்தால் அவர் ஒரே ஒரு முறைதான் கிணறு வெட்ட அவருடைய தாலுக்காவில் மற்றொரு உரிம தாரரிடம் வாங்கியதாகக் கூறுவார். இப்படி குடியாத்தம் செட்டி குப்பத்தில் இரண்டு பேர்கள் சக்கரபாணி, சாரங்கபாணி - அண்ணன், தம்பிகள் பல ஆயிரம் தடவைக்கு மேல் திருட்டு விற்பனை செய்து நிலபுலன்களை சம்பாதித்து பெரிய வீட்டைக்கட்டிக்கொண்டு ராஜ போகமாக வாழ்ந்து வந்தார்கள். அப்படி அவர்கள் செய்துள்ள திருட்டுத் தனத்தை Q-பிரிவு உதவி ஆய்வாளர் R.பழனி கண்டு பிடித்து. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் கலைக்டருக்கு தகவல் அனுப்பி அவர்களுடைய உரிமத்தை கேன்சல் செய்ய வேண்டுகோள் அனுப்பினார். இப்படி அவர்கள் விற்பனை செய்வதைத்தான் நக்சலைட்டுகள் திருட்டுத் தனமாக வாங்கி உபயோகப் படுத்திக் கொண்டார்கள் என்ற உண்மை பிறகுதான் தெரிய வந்து வியாபாரிகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.





ம்

எழுதியவர் : பழனி ராஜன் (10-Oct-20, 4:42 am)
பார்வை : 130

மேலே