முன் வைத்த இருநிலையில் வையாப்பொருள் செத்தொழிந்த தாமே தெளி - உலோபம், தருமதீபிகை 676
நேரிசை வெண்பா
ஈதல் அனுபவித்தல் இல்லாமல் நாசமாய்ப்
போதலிம் மூன்றே பொருள்நிலையாம் - ஓதிமுன்
வைத்த இருநிலையில் வையாப் பொருள்கடையாய்ச்
செத்தொழிந்த தாமே தெளி. 676
- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உயிர்களுக்கு இரங்கி உதவுதல், போகங்கள் நுகர்தல், வேகமாய் அழிந்துபோதல் ஆகிய இம்மூன்று நிலைகள் பொருளின் இயல்புகளாய் அமைந்திருக்கின்றன; முதலில் உள்ள இருவகைகளில் சரியாக வைக்கவில்லையானால் இறுதி வழியில் முழுதும் விரைந்து ஒழிந்துபோகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் பொருளின் நிலைகளை உணர்த்துகின்றது.
மனிதனுடைய முயற்சியால் பொருள் ஈட்டப்படுகிறது. அவ்வாறு ஈட்டிய பொருளை அவன் அனுபவிக்கிறான். அனுபவங்கள் பலவழிகளாய்ப் பரவியுள்ளன. ஐம்பொறிகளும் நுகர்தற்கு ஏதுவாயிருத்தலால் பொருளுக்குப் பொறி என்று ஒரு பெயரும் வந்தது. பொருள் போகங்களாகி மனிதனை ஊட்டியருளுகிறது. இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, படுக்கப் பாய், படிக்க நூல், நடக்க வாகனம், அணிய அணி என இன்னவாறு மனிதனுடைய வாழ்க்கையைப் பல வகைகளிலும் பரவி நின்று பொருள் வளம்படுத்தி வருகிறது. ஆக்கம், பாக்கியம் என்னும் பேர்களும் நோக்கவுரியன.
சீரும் வெறுக்கையும் விபவமும் திருவும்
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும்
ஆகும் செல்வத்(து) அபிதா னம்மே. – பிங்கலந்தை
மனிதனுடைய வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாய்ச் செய்து வருகிற செல்வத்துக்கு இவ்வாறு பெயர்கள் வந்திருக்கின்றன.
அனுபவித்தல் தன் உடலளவில் உரிமையாகிறது. ஈதல் உயிருக்கு உறுதி புரிகிறது.
கல்விக்கு அறிவும் ஒழுக்கமும் பயனாதல் போல் செல்வத்துக்கு அனுபவித்திலும் ஈதலும் பயன்களாயுள்ளன. பிறர்க்கு உபகாரமாய் ஈவது புண்ணியமாய் விளைந்து வந்து தன்னுயிர்க்கு இன்பம் தருதலால் ஈதலே தலையாய பயனாய் நின்றது.
உயிர்க்கு ஊதியமாய் அது உறுதி புரிதல் கருதி அனுபவித்தலினும் ஈதலை இதில் முதலில் குறித்தது. எடுத்த உடம்பு அளவில் அனுபவம் முடிகிறது, ஈதல் உயிரோடு புகுந்து தொடர்ந்து எவ்வழியும் இதமாய் இன்பம் சுரந்து வருகிறது.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 புகழ்
உயிர்க்கு ஊதியம் ஈதலே என வள்ளுவர் இங்ஙனம் குறித்துள்ளார். இதனால் அதன் மகிமையும் மாண்பும் அறியலாகும். ஒரு பிறவியில் செய்த ஈகை உயர்ந்த தருமமாய் ஓங்கி உயிர்புக்குழியெல்லாம் புகுந்து உரிமையாய் மருவி யாண்டும் உய்தி புரிந்து வருதலால் ஈதல் உயிரின் ஊதியம் என வந்தது.
'ஈதற்குச் செய்க பொருளை' என்றார் கல்லாதனார்.
இன்னிசை வெண்பா
செல்வம் விரும்பிற் பிறர்க்களிப்பத் தேடுக;
கல்வி விரும்பி னெறிநிற்பக் கற்கமன்
அல்லலிலா இன்பமுற எண்ணி அருநெறியிற்
செல்லினிடர் நோன்றல் செயல். 50
- நல்வினையாட்சி, இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார்
செல்வம், கல்வி, தவங்களை இது நல்வகையாக உணர்த்தியுள்ளது. நல்ல உபகாரம் செய்வதே செல்வம் ஆகும்.
பிறர்க்கு உதவி செய்யும் பொருட்டே உயர்ந்தோர் செல்வத்தைத் தேடுவர் என்றதனால் அதன் பாடும் பயனும் நாடி அறியலாம். அருள் நலமுடைய மேலோர் பொருள் ஈட்டம் எல்லாம் புண்ணிய நாட்டமாகவே கண்ணியம் படிந்து வந்துள்ளது.
இல்லோர்க்(கு) இல்என்(று) இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே. அகம், 53
தன்னிடம் இரந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டுமே என்னும் ஆவலால் தனது அருமைக் காதலியையும் பிரிந்து ஒரு தலைவன் பொருள் தேடப் போயிருத்தலை இது குறித்திருக்கிறது.
ஈட்டிய பொருளைப் போகங்களாக்கி நன்கு அனுபவிப்பவன் சுகி, போகி என நிற்கின்றான். வந்த விருத்தினரைப் பேணி எந்த வகையிலும் யாருக்கும் உதவி புரிந்து வருபவன் உபகாரி, தருமவான் எனப் பெருமை மிகப் பெறுகின்றான்.
’இரு நிலையில் வையாப் பொருள் கடையாய் ஒழிந்தது’ ஈதலிலும் அனுபவித்தலிலும் செலவு செய்யாமல் வீணே சேர்த்து வைத்திருக்கும் பொருள் தானாகவே நாசமாயழிந்து போகின்றது.
பொருள் எவரிடமும் நிலைத்து நில்லாது; விரைவில் அழியும் இயல்பினது; அது அழிந்து போகுமுன் புண்ணியத்தையும் இன்பத்தையும் விரைந்து செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்து கொண்டவன் செல்வத்தின் பயன்களைப் பெற்ற பாக்கியவான் ஆகின்றான். அங்ஙனம் செய்து கொள்ளாதவன் வறிய வெறியனாய் வையம் இகழ வசை பட்டழிகின்றான்.
நீர் நிறைந்த ஒரு குளத்திற்கு இரண்டு மதகுகள் அமைந்திருந்தன. அந்த மடைகள் வழியே நீர் வெளியே பாய்ந்து பயிர்களையும் உயிர்களையும் நெடிது வளர்த்து வந்தன. ஒரு நாள் ஒருவன் வந்து அவற்றை இறுக்கி அடைத்து விடவே தண்ணீர் பெருகிக் கரையை உடைத்துக் கொண்டு முழுதும் வெளியே போய்விட்டது; அது போல் ஒருவனிடம் நிறைந்த பொருளை ஈதல், அனுபவித்தல் என்னும் இரண்டு இனிய வழிகளில் செலவு செய்து வர வேண்டும்; அவ்வாறு செய்யாமல் உலோபமாய்க் குவித்து வைத்திருந்தால் அது விரைந்து சிதைந்து அடியோடு அழிந்து போய்விடும்.
தான் அனுபவியாமலும் தக்கார்க்கு உதவாமலும் வீணே பொருளைத் திரட்டி வைத்திருப்பது மதிகெட்ட மருளர் செயலாதலால் அவர் பழிபட்டு இழிவுறுகின்றனர். ஈட்டி வைத்த செல்வமும் அவரை எள்ளி இகழ்ந்து விட்டு அயலே அகன்று போய் விடுகின்றது. மயலோடு உலோபர் மறுகி மாய்கின்றார்.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்(கு) அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். 1005 நன்றியில் செல்வம்
ஈவதும் நுகர்வதும் இல்லாதவர் பலகோடி பொருள்களை எய்தியிருந்தாலும் அவற்றால் அவர்க்கு யாதொரு பயனும் இல்லை என இது உணர்த்தியுள்ளது. எண்ணரிய காட்சிகள் எதிரே எய்தியிருந்தாலும் கண் இல்லாத குருடன் காணாதிழிதல் போல் புண்ணியம் இல்லாத உலோபி பொருளின் பயன்களை அடையாது மருளனாய் மடிந்து ஒழிகின்றான்.
பொருள் கிடைத்தால் அதனை விரைந்து பயன்படுத்திக் கொள்பவர் நயனுடையராகின்றார். போகத்தை நுகர்வதினும் ஈகையாகிய புண்ணியத்தையே மேலோர் கண்ணும் கருத்துமாய் எண்ணி விரைந்து யாண்டும் அடைந்து கொள்ளுகின்றனர்.
தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புக பலவே. - நக்கீரர்
உலகம் முழுவதையும் ஆளுகின்ற சக்கரவர்த்திக்கும் ஒன்றும் இல்லாத ஏழைக்கும் உணவும் உடையும் இனமாயமைந்துள்ளன; அந்த அளவில் நின்றுவிடின் பெருமையாகாது; செல்வத்தின் பயன் ஈதலேயாம்; அதனை விரைந்து செய்ய வேண்டும்; செய்யாது நின்றால் அறம் புகழ் முதலிய அரிய நலங்கள் பல ஒழிந்து போகும் எனக் கல்வி வீரராகிய நக்கீரர் செல்வத்தின் பயனை இங்ஙனம் நன்கு உணர்த்தியுள்ளார்.
பயன் படுத்தாத செல்வம் பாழ்படுகின்றது; தன்னைத் தடைப்படுத்தி வைத்திருந்தவனுக்கும் கொடிய பழியை விளைத்து விட்டு நெடிய வழியில் விரைந்து போய் விடுகின்றது.
நேரிசை வெண்பா
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம், - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம். 151 பழமொழி நானூறு
ஈதலும் துய்த்தலும் தெரியாத உலோபியின் செல்வம் நாய் பெற்ற தேங்காப் போல் நோய் பற்றியுளது என இது குறித்திருக்கிறது. ’நாய்க்குத் தேங்காய் தக்குமா?’ என்னும் பழமொழி உலோபியை நோக்கி வந்துள்ளது.
கொடுத்தலால் புண்ணியம் விளைகின்றது; துய்த்தலால் இன்பம் விளைகிறது; இந்த இரண்டையும் ஒருங்கே இழந்து பழியும் துன்பமும் எய்தி உலோபி இழிவடைவது முழுமடமையாயுள்ளது. விழிதிறந்து பார்த்தவர் தெளிவடைந்து உய்கின்றார்.
மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்
இன்மொழியால் ஏத்தப் படும். 81 சிறுபஞ்ச மூலம்
இங்கே இரங்கி ஈவானை அங்கே தேவர்கள் புகழ்ந்து போற்றி உவந்து தழுவிக் கொள்வர் என இது காட்டியுள்ளது. இத்தகைய திவ்விய நிலைகளையெல்லாம் இழந்து உலோபத்தால் மனிதன் சிறுமையடைந்து போகிறான்.
மருள்மண்டிய உலோபத் தீமையை ஒழித்துப் பொருளின் பயனை அடைந்து கொள்பவன் தெருளுடைய குலமகனாய்ச் சிறந்து திகழ்கின்றான். சிறப்பு இழந்தவன் சீரழிந்து கழிகிறான்.
புல்லியன் ஆக்கிப் புலைக்கும் உலோபத்தை
ஒல்லை ஒழிக உடன்.
புலை நிலை நீங்கித் தலைமையில் ஓங்குக என்கிறார் கவிராஜ பண்டிதர்,
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
