வாழ்க வாழ்க - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சாரங்க பாணியாரஞ் சக்கரத்தல் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர் - பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிவரும்மைக்
காத்திடுவர் எப்போதும் காண். 208 - கவி காளமேகம்
பொருளுரை:
சிவ பரமாக:
சாரங்கபாணியார் - மானேந்திய கையினர்; அஞ்சு அக்கரத்தர் - பஞ்சாட்சர சொருபமானவர்,
கஞ்சனை முன் ஓரங்கம் கொய்த உகிர்வாளர் - தாமரை வாசனாகிய பிரமனை முன்காலத்திலே ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்;
பார் எங்கும் ஏத்திடும் உமை ஆகர் - உலகமெல்லாம் போற்றுகின்ற உமையம்மையைத் திருமேனியிற் பாதியாகக் கொண்டிருப்பவர்;
இவரும்மை எப்போதும் காத்திடுவர் காண் - இத்தகைய ஈசர் உங்களை எந்நாளும் காத்திடுவாராக..
திருமால் பரமாக:
சாரங்க; பாணியர் - சாரங்கம் ஆகிய வில்லினைக் கைக்கொண்டவர்;
அஞ்சக்கரத்தர் - அழகிய சக்கரப் படையினை உடையவர்;
முன் ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் - மாமனாகிய கஞ்சனை முன்னாளிலே ஒப்பற்ற உடலைக் கிழித்த நகத்தினையுடையவர்;
பார் எங்கும். ஏத்திடும் மையாகர் - உலகெங்கும் போற்றிடும் கரிய திருமேனியுடையவர்; திருமாலாகிய இவர் உம்மை எப்போதும் காத்திடுவாராக!
இருவகையினரும் உவக்குமாறு பொருளை விரித்துரைத்துக் காளமேகம் அவர்களை மகிழ்வித்தார்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
