மதுரைக்கு எவ்வாறு சென்றீர் - கட்டளைக் கலித்துறை

"ஞானவரோதயர்' என்பவர் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கேயுள்ள வயலூர் என்னுமிடத்தில் வாழ்ந்த சிவசமயத் துறவியாராவார். தமிழ் வடமொழி என்னும் இரண்டினும் வல்லவராகவும், சித்தாந்த புராண நூல்களுள் ஆழ்ந்த புலமையும் தெளிவும் உடையவராகவும் இவர் விளங்கினார்.

கந்த புராணத்தைக் கச்சியப்ப முனிவர் தமிழ்ச் செய்யுளாற் பாடினார்.

அதன் பிற்பகுதியாக உபதேச காண்டத்தைப் பாடுமாறு, தம் ஆசிரியராகிய ஆறுமுக சுவாமி ஆணையிட, இவர் அதனை 2600 செய்யுட்களால் பாடினார் என்பர்.

இந்த ஞானவரோதயரைக் "காளமேகத்திற்கு ஆசிரியர்' என்று, உயர்திரு. மு. இராகவையங்கார் போன்ற ஆராய்ச்சிப் பெரியோர்கள் கருதுவர்.

இந்தப் பெரியார், ஒரு சமயம் மதுரை நகருக்குச் சென்று வந்தனர். இப்பொழுது, இவரைக் கண்டு தரிசித்த காளமேகப் புலவர், இவருடைய பெருமையை வியந்து கூறிய செய்யுள் இதுவாகும்.

கட்டளைக் கலித்துறை

முதிரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே
எதிரொக்கக் கோப்பதற் கேழேழு பேரில்லை; இன்றமிழின்
பதரைத் தெரிந்தெறி கோவில்லை; யேறப் பலகையில்லை;
மதுரைக்கு நீசென்ற தெவ்வாறு ஞான வரோதயனே! 209

- கவி காளமேகம்

பொருளுரை:

“ஞான வரோதயப் பெருமானே! முதிர்ந்த சுவையோடு தமிழினிமை புலப்படும் தங்களது பாடல்களை முறையாக அறிந்து, எதிரேயிருந்து கோத்து ஒழுங்கு செய்து வைப்பதற்கு, நாற்பத்தொன்பதின்மராகிய சங்கப் புலவர்களும் இப்போது இல்லை;

இனிதான தமிழிடத்தே கலந்து கிடக்கும் பதர்களைத் தெரிந்து கழித்துப் போடுதற்குறிய தலைவனான பிள்ளைப் பாண்டியனும் இப்போது இல்லை;

சங்கப் பலகையில் ஏறித் தங்களின் புலமையை நிலைநாட்ட வென்றால், அந்தப் பலகையும் இப்போது இல்லை.

இருந்தும், தாங்கள் மதுரைக்குச் சென்றது தான் எதற்காகவோ? அதனைச் சொல்வீர்களாக" என்பது இதன் பொருள்.

இதனால், ஞானவரோதயரின் ஒப்பற்ற புலமைச் சிறப்பை உளமுவந்து போற்றுகின்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Oct-20, 5:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே