வட்டிக்குப் பொன்கொடுப்போர் வஞ்சமுடன் கோளுரைப்போர் - கொடுமை, தருமதீபிகை 667

நேரிசை வெண்பா

காட்டு விலங்குள் கரடி புலிகொடிய
நாட்டுட் கொடியர் நவையூறக் - கூட்டிநின்று
வட்டிக்குப் பொன்கொடுப்போர் வஞ்சமுடன் கோளுரைப்போர்
ஒட்டல் ஒழிக வுடன். 667

- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

காட்டில் திரியும் மிருகங்களுள் கரடியும் புலியும் கொடியன; நாட்டில் வாழும் மக்களுள் வட்டியாளரும் வஞ்சக் கோளரும் கொடியவர்; ஆகவே அவரை அணுகாமல் அகன்று வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் விழுமிய வாழ்வை விழி தெரிய விளக்கியது.

கூட்டம் கூட்டமாய்க் கூடிவாழும் இயல்புகள் மக்களிடமும் மாக்களிடமும் ஒக்க மருவியுள்ளன. சீவப் பிராணிகளுடைய சீவிய முறைகள் பலவாறு பிரிந்திருக்கின்றன. நாடு, காடு என்னும் மொழிகள் பாடு படிந்து வந்துள்ளன. மக்கள் கூட்டமாய் உயர்ந்த தேட்டங்களை விரும்பித் தம் வாழ்க்கையை நாடி நடத்தும் நிலப்பகுதி நாடு என வந்தது. அந்த நாட்டம் கடந்துள்ள இடம் காடு என நின்றது.

மனித சஞ்சாரம் இல்லாத காட்டில் மிருகங்கள் கூட்டமாயிருக்கின்றன. அந்த மிருக இனங்களில் புலியும், கரடியும் கொடிய இயல்பின. பிற உயிர்களுக்கு அல்லலான செயல்களைத் தாம் இயல்பாகவுடைமையால் அவை கொடிய மிருகங்கள் என நெடிய பேர் பெற்றன.

அந்தக் காட்டு மிருகங்களை இங்ஙனம் குறித்துக்காட்டியது நாட்டு மிருகங்களைக் கூர்ந்து காண வந்தது. உருவநிலையில் மனிதராய்த் தோன்றியிருந்தாலும் குணம் செயல்களில் கொடியராயுள்ளவர் மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்.

நல்ல நீர்மைகள் குன்றியபொழுது மனிதரும் பொல்லாத விலங்குகளாய்ப் பொங்கி எழுகின்றார். உள்ளம் கொடுமையாகவே கடுமையான கேடுகளைச் செய்து கடுவாய் புலிகளைப் போல் அவர் அஞ்சத் தக்கவராகின்றார்.

புல்வாப் பசு முதலிய மெல்லிய பிராணிகளைப் புலி அடித்துத் தின்னும்; அதுபோல் யாண்டும் அல்லலே செய்து பிழைப்பவர் பொல்லாத மிருகங்கள் என்று சொல்ல நேர்ந்தார்.

கோள் கூறும் கொடியவர் மனித சமுதாயத்துள் பெருங் கேடுகளை ஒருங்கே செய்துவிடுவராதலால் அவர் பாம்பினும் தீம்பினர்; பேயினும் தீயவர்; புலியினும் கொடியவராவர்.

’வாள் செய்யாத கொலையைக் கோள் செய்யும்’ என்னும் பழமொழியால் கோளரது பழிபாதகங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். கூனி கூறிய ஒரு கோளுரையால் அரிய பல அரச செல்வங்களை இழந்து காடு புகுந்து இராமன் கடுந்துயர் உழந்தது காவியமாய் வந்துள்ளது. காதில் ஓதிக் கடுங்கேடுகள் புரியும் காதகர் கொடிய பாதகராதலால் அவரை அருகே அணுக விடுவது பெரிய அபாயமாம்.

தீயனெனும் பாம்பு செவியிலொரு வற்கவ்வ
மாயுமே மற்றை யவன்.

கோளன் செய்யும் கொலை பாதகத்தை இது குறித்திருக்கிறது. இவ்வாறு கொடுந் தீமைகளைச் செய்து வருதலால் கோளன் வாழ்வு கடும்பாதகமாய் முடிந்து நிற்கிறது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். 183 புறங்கூறாமை

கோளன் உயிர் வாழ்ந்திருப்பதை விடச் செத்துப் போவது நல்லது என்று வள்ளுவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். விரைவில் இறந்து போனால் புறங்கூறும் பாவம் அதிகமாய் அவனைச் சேராது. பாவத் துயரிலிருந்து அவனை விடுதலை செய்தலால் அந்தச் சாவு அவனுக்கு அறமும் ஆக்கமுமாய் அமைந்தது. கோள் உரைப்பது எவ்வளவு கொடுமை என்பதை இதனால் ஓர்ந்துணர்ந்து கொள்கிறோம்.

’வட்டிக்குப் பொன் கொடுப்போர்’ கொடிய இனத்தை இது இங்ஙனம் சுட்டிக் காட்டியுள்ளது: தன்னிடமுள்ள பொருளை ஊதியத்தை விரும்பிப் பிறரிடம் கொடுப்பவன் வட்டியாளன் எனப்பட்டான். வட்டி என்பது வட்டம் கருதியது என்னும் ஏதுவான் வந்தது.

நூறு ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் விதம் வரையறை செய்து வட்டிக்குக் கொடுப்பது இந் நாட்டில் வழக்கமாயுள்ளது. இதற்கும் மேலே அதிகமாக வாங்குவதை அநியாய வட்டி என்பர். கூட்டி நின்று என்று இங்கே சுட்டியது இந்தக் கொடிய வட்டியையே.

நியாயமான வட்டியே குடிகேடுடையது; அதனினும் வட்டிக்கு மேல் வட்டியாய்க் கூட்டிக் கொண்டு போவது நாட்டுக்குக் கொடிய கேடாம்.

நூறு ரூபாயை நியாயமான முறையில் வட்டிக்குக் கொடுத்தால் ஆறு ஆண்டுகளுள் அதன் வட்டியே நுாறு ரூபாய் ஆகும். இந்த மாதிரி செய்து வந்தால் ஒரு 100 ரூபாய் 85 ஆண்டுகளுக்குள் (16,50,000) பதினாறு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய்கள் ஆகின்றன. வட்டிக்குக் கடன் வாங்குகிறவன் கதி என்னாகும்? இந்தவாறு கேடும் மோசமும் கூடியிருத்தலால் வட்டியால் பொருளை ஈட்டுவது பாவம் என வந்தது. நேர்ந்துள்ள நீதி கூர்ந்து சிந்திக்க வுரியது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நட்பிடை வஞ்சம் செய்தும்
..நம்பினார்க் கூன்மா றாட்டத்(து)
உட்படக் கவர்ந்தும் ஏற்றோர்க்(கு)
..இம்மியும் உதவா ராயும்
வட்டியின் மிதப்பக் கூறி
..வாங்கியும் சிலர்போல் ஈட்டப்
பட்டதோ? அறத்தா(று) ஈட்டும்
..நம்பொருள் படுமோ என்னா. - திருவிளையாடல் புராணம்

சொக்கநாதப் பெருமான் செட்டி வடிவில் மாமனாக வந்து வழக்காடிய போது இவ்வாறு உரையாடியிருக்கிறார். ’என் பொருள் வட்டியால் ஈட்டியதல்ல; தரும நெறியே ஈட்டியது; ஆதலால் அதற்குப் பழுது வராது’ என்று முழுமுதல் பரமன் இங்கே மொழிந்துள்ளமை உணர்ந்து தெளிந்து கொள்ளத் தக்கது. ’பொருளை வட்டியால் சம்பாதிப்பது தீது’ என மேலோர் யாவரும் ஓதியுள்ளனர்.

It is with lent money that all evil is mainly done. – Ruskin

'பொருளை வட்டிக்குக் கொடுப்பதாலேயே எல்லாத் தீமைகளும் முக்கியமாய்ச் செய்யப்படுகின்றன” என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். வட்டிக்குக் கடன் வாங்கிய குடிகள் பல அடியோடு அழிந்து போயுள்ளன. ‘வெளியே கடன் கொண்டான் உள்ளே விடம் கொண்டான்' என்னும் முதுமொழியால் அதன் கொடுங்கேடுகளைக் கூர்ந்து ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

நேர்ந்தவொரு சிறுகடனால் நிலைத்திருந்த நிலங்களொடு
வளங்கள் யாவும்
ஆர்ந்தகரை யான்படிந்த அணிமரம்போல் அடியோடும்
அழிந்த(து) அந்தோ!
சார்ந்தகடன் புகுந்தவன்றே சனியன்வந்து புகுந்ததெனச்
சலமே கண்டேன்
கூர்ந்தகுடி கெடுத்துயிரைக் குடித்தகொடும் பேயெனவே
கொண்டேன் அம்மா!

செல்வ வளங்களால் ஓங்கியிருந்த தன் உயர்குடி வாங்கிய ஒரு சிறுகடனால் நிலைகுலைந்து இழிந்தழிந்து போன நிலையை ஒரு கடனாளி இப்படிக் கடுந்துயரோடு கதறிக் கூறியிருக்கிறான்.

வட்டி ஈட்டம் இவ்வாறு கேடு படிந்து வருதலால் அது கொடுமை என வந்தது. வட்டித் தொழில் புரிய உதவியாய் நின்றவரும் கொடுமையாளர் என வந்தார்.

'வட்டிக்குப் பணம் கொடுப்போனும், அதனை வாங்குவோனும், அதன் சம்பந்தமான பத்திரங்களை எழுதுவோனும், அதற்குச் சாட்சியாயிருப்போனும் ஆகிய எல்லோரும் ஒரே விதமான குற்றத்தையே செய்கிறார்கள்’ (நபி, 428) என மகமது நபி அரபி மொழியில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மனித சமுதாயத்திற்கே இடரிழைத்து வருவதால் வட்டித் தொழில் கெட்டது என்று பெரியோர்களால் இப்படித் திட்டப்பட்டது. சுட்டி இகழ்ந்துள்ள குறிப்புகள் உய்த்துணர வுரியன.

காட்டில் வாழும் கரடி ஒரு புற்றில் போய் வாய் வைத்தால் அதில் உள்ளவற்றை யெல்லாம் உறிஞ்சிவிடும்; அது போல் வட்டியாளனும் ஒரு குடியில் கைவைத்தால் அதனை அடியோடு தடவி விடுவான்; ஆதலால் கரடியோடு இனமாய் ஈண்டு அவன் எண்ண நேர்ந்தான்.

’ஒட்டல் ஒழிக’ என்றது இந்தப் பட்டிகளோடு ஒட்டிப் பழகாதே எனத் தெளிவாக வலியுறுத்தியது. இனம் தீதானால் மனம் தீதாகும்.

கோளும் வட்டியும் நாளும் கெட்டது. அந்தப் பாழ் வழியாரோடு பழகாதே; பழகின் வாழ்வு பழுதாம். கொடுமை கடிந்து கொடியாரை ஒதுக்கி இனியனாய் உயர்ந்து யாண்டும் இதமாய் ஒழுகிட, புனித வாழ்வு புண்ணியமாய் மிளிர்கிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Oct-20, 6:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே