ஈகை இலாமையினால் ஓகை அடையாது ஒழிகின்றான் - உலோபம், தருமதீபிகை 677

நேரிசை வெண்பா

ஈகை அடைந்திருந்தும் ஈகை இலாமையினால்
ஓகை அடையா(து) ஒழிகின்றான் - ஈகை
உடையான் அடையும் உயர்நலங்கள் கண்டும்
அடையான் மடையன் அவன். 677

- உலோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொருள்கள் பல நிறைந்திருந்தும் ஈகை ஒன்று இல்லாமையினால் உலோபி புகழின்பங்களை இழந்து வறிதே ஒழிகின்றான்; ஈகையாளன் அடைகின்ற உயர் நலங்களை நேரே கண்டும் உள்ளம் தேறி உதவாமல் ஒழிவது அந்த மடையனுடைய மதிகேடேயாம்; அறிவுகெட யாவும் கேடாய் முடிகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நல்ல அறிவும் உள்ளப் பண்பும் மனிதனைத் தனி நிலையில் உயர்த்தி வருகின்றன. இந்த இரண்டும் இல்லையானால் அந்த மனிதன் எவ்வளவு செல்வங்களை அடைந்திருந்தாலும் சீர்மையிழந்து சிறுமையே யுறுகின்றான்.

செல்வம் எவரையும் சிறப்புடையராக்கும் இயல்பினது; ஆயினும் அறிவிலிகளிடம் அது வறிதே அவலமடைகின்றது.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. 1008 நன்றியில் செல்வம்

உலோபியிடம் கிளைத்துள்ள செல்வம் ஊர் நடுவே நச்சு மரம் பழுத்தது போலாம் என வள்ளுவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். நச்சப்படாதவன் என உலோபியைச் சுட்டியிருப்பது உய்த்துணர வுரியது. யாருக்கும் யாதும் கொடானாதலால் அவனை எவரும் விரும்பார்; எல்லாரும் வெறுத்தே பழிப்பர்; ஆகவே இப்படி அவன் அவப்பேர் பெற்றான்.

நல்ல செல்வம் புல்லன் கையில் சிக்கினமையால் அதுவும் புலையடைய நேர்ந்தது. தனது சேர்க்கையால் இனிய திருவும் இன்னாதாய் இகழும்படி ஆனமையின் அவனது ஈனமும் இழிவும் இயலும் மயலும் விழி தெரிய வந்தன.

ஈகை இரண்டனுள் முன்னது பொன்; பின்னது கொடை. ஈகை இல்லாதவனிடம் ஈகை சேர்ந்திருப்பது செத்தவனிடம் பூமாலை சேர்ந்திருப்பது போலாம். விழுமிய செல்வம் இடத்தின் புன்மையால் இழிவுடையதாயது.

நேரிசை வெண்பா

சுற்றும் கருங்குளவி சூரைத்தூ(று) ஆரியப்பேய்
எற்றும் சுடுகாடு இடிகரையின் - புற்றில்
வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததேன் ஒக்கும்
தளர்ந்தார்க்(கு) ஒன்(று)ஈயார் தனம். - ஒளவையார்

ஈயாத உலோபி பொருளைக் குறித்து ஒளவையார் இவ்வாறு பாடியிருக்கிறார். நல்ல பயனுடையதாய் எல்லார்க்கும் இன்பம் தருகிற பொருள் பொல்லாத உலுத்தன் கையில் சிக்கியதால் புலைபடிந்து நிலைகுலைந்து நின்றது. சேர்ந்த இடத்தால் சிறுமை ஆயது.

தானும் பழியடைந்து தன் கைப்பொருளையும் இழிவடையச் செய்தலால் உலோபியின் வாழ்வு ஈனமாய்க் கழிய நேர்ந்தது.

’ஈகை இலாமையால் ஓகை அடையாது ஒழிகின்றான்’ என்றது பிசுனனுடைய வாழ்வின் பிழைபாடு தெரிய வந்தது.

ஈதலில் புகழும் புண்ணியமுமேயன்றி ஈகின்ற பொழுது ஓரின்பமும் உள்ளது. ஈயும் பொருளை ஏற்றுக் கொள்கின்றவர் இன்பம் உறுகின்றார். அந்த மகிழ்ச்சியைக் கண்டு ஈகையாளன் பேரின்பம் அடைகின்றான். எதிரே நின்ற உயிர் மகிழத் தன் உள்ளமும் மகிழ்கின்றது. புண்ணியத்தோடு கலந்து எழுகின்ற இந்த அரிய இன்பத்தை ஈயும் இயல்புடைய வள்ளல்களே தனி உரிமையாக அடைந்து கொள்கின்றனர். புனிதமான இந்த நல்ல இன்பத்தை உலோபிகள் எள்ளளவும் அறியாமல் இழந்து எள்ளலும் இழிவும் ஏகமாயடைந்து சாகின்றார்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். 228 ஈகை

தம் பொருளை யாருக்கும் கொடாமல் அவமே தொகுத்து வைத்து இழக்கின்ற வன்கண்ணர் ஈந்து மகிழும் இன்பத்தை அறியாரோ? என வள்ளுவர் இவ்வாறு பரிதாபமாய் உரைத்திருக்கிறார். அந்த ஈகையின் இன்பத்தை அறிந்திருந்தால் துன்பமும் பழியும் அடைந்து வீணே தம் பொருளை இழந்து போகார்; அறியாமையினாலேதான் பெரிய இழவை அவர் மருவி அழிகின்றார் என வள்ளுவர் மறுகியுள்ளமை துணுகி யுணர வந்தது.

புகழும் புண்ணியமும் அரிய இன்ப நலங்களை அருளி மனித வாழ்வை எவ்வழியும் இனிமை செய்து புனிதமாய் மகிமை புரிந்து வருகின்றன. உயிரின் உயர் ஊதியங்களான அவை ஈகையால் அமைகின்றன. ஈகையாளன் கீர்த்திமான், தருமவான் எனக் கிளர்ந்து விளங்குகிறான்.

இத்தகைய ஈதலை இழந்தவன் உலோபியாயிழிந்து நோதலை அடைகின்றான் பழியும் இழிவும் எவ்வழியும் அவனைச் குழ்ந்து கொள்ளுகின்றன. பொருளின் பயனான அறமும் இன்பமும் எய்தாமல் மறமும் துன்பமும் எய்துதலால் அவனுடைய வாழ்வு தாழ்வாய் அவலமுறுகின்றது. செல்வமிருந்தும் உலோபத்தால் சீரழிந்து அல்லலடைய நேர்ந்தான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

கல்விகல் லாரின் கற்றறி வில்லார்
கடையரென்(று) உரைப்பது கடுப்பச்
செல்வமில் லாரின் செல்வமுற் றிருந்தும்
செய்வினை செய்வகை செய்யார்
பல்விதத் தினிலும் கடையரே; உலகில்
பார்த்தவர் பழிக்கவும் பின்னர்ப்
புல்லிய நரகில் புகுதவும் போந்த
பூரியர் இவரலால் எவரே?' - குமணன்

கற்றிருந்தும் கல்வியின் பயனாகிய ஒழுக்கம் இல்லாதவர் கல்லாத மூடரினும் கடையரே, அதுபோல் செல்வம் பெற்றிருந்தும் அதன் உரிமையான ஈகை இல்லாதவர் யாதும் இல்லாத ஏழைகளினும் ஈன மிடியரே என இது உரைத்துள்ளது. பூரியர், நரகர் என உலோபரை இதில் குறித்திருக்கிறார். பூரியர் – நீசர், அரிய திருவின் பயனை இழந்து, பழி இழிவுகளில் படிந்து கொடிய நரகம் புகுதலால் உலோபரது மடமை மருள்களை யாண்டும் மேலோர் கடுமையாக இகழ நேர்ந்தனர்.

நேரிசை வெண்பா

உற்ற பொருளை உதவா உலோபத்தால்
பெற்ற பிறப்பும் பிழையாகிக் - குற்றம்
பலபடிய நின்று பழிதுயரே கன்றி
அலமருவர் அந்தோ அவம். - கவிராஜ பண்டிதர்

கருமி இவ்வாறு பரிதாபமாய் இழிந்து அழிகின்றான். பொருளின் பயனை உணர்ந்து புண்ணியம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Oct-20, 6:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 159

மேலே