குடவாசல் விண்ணாள் - கட்டளைக் கலித்துறை
திருக்குடவாசல் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரூர். இவ்வூரில் வாழ்ந்திருந்த விண்ணாள் என்பவள் மிகவும் குறும்புக்காரி, காளமேகப் புலவரிடம் சென்று தன்னைப்பற்றியும் ஒரு வசை கவி பாடுமாறு கேட்டாளாம். அவள் அழகுள்ளவள், அவள் மீது அன்புடையவர் கவிஞர். என்றாலும் அவளுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியவில்லை. அதனால், இந்தச் செய்யுளைப் பாடினார்.
கட்டளைக் கலித்துறை
செக்கோ மருங்குல் சிறுபய றோதனஞ் சிக்கலிதம்
வைக்கோற் கழிகற்றை யோ?குழி யோவிழி? வாவிதொறும்
கொக்கேறி மேய்குட வாசல்விண் னாள்வரைக் கோம்பியன்னீர்
எக்கோ படைத்தது நீரே நெருப்பில் எரிந்தவரே! 218
- கவி காளமேகம்
பொருளுரை:
'சிவபெருமானின் நெற்றிக் கண் நெருப்பில் பட்டு எரிந்து போன காமதேவரே! இவள் இடையோ செக்குப் போலப் பருத்திருக்கிறது. இவள் மார்பகங்களோ சிறு பயற்றின் அளவாகச் சிறுத்துள்ளன. சிக்குப் பிடித்த இவள் கூந்தல் வைக்கோற் கற்றைக் கழித்துப் போட்டாற் போலத் தோன்றுகின்றது. விழிகள் இருக்க வேண்டிய இடத்திலே குழிகள் விளங்குகின்றன. குளங்கள் தோறும் கொக்குகள் சென்று மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும் குடவாசல் நகரத்தில் இவ்விண்ணாளும் இப்படித் தோன்றுகின்றாள். மலையகத்துக் காணப்படும் ஒணானைப் போன்றவரே! எதற்காகத்தான் இவளையும் பெண்ணென்று படைத்தீரோ?
செய்யுளைக் கேட்டதும் விண்ணாள் சிரித்து விட்டாள். அழகிற் சிறந்த அவளுக்குக் கவிஞர் பாடிய வசைப்பாடல் வேடிக்கையாகவே இருந்தது.