தீயன செய்பவன் தீயன் எனஇழிந்து மாயும் பழியுள் மடிகின்றான் - தீமை, தருமதீபிகை 681
நேரிசை வெண்பா
தீயன செய்பவன் தீயன் எனஇழிந்து
மாயும் பழியுள் மடிகின்றான் - தூயவினை
செய்வோன் சிறந்து திருவும் புகழும்கொண்(டு)
உய்திபெறு கின்றான் உயர்ந்து. 681
- தீமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தீயசெயல்களைச் செய்பவன் தீயவனாயிழிந்து பழிகள் பல படிந்து அழிகின்றான்; நல்ல செயல்களையுடையவன் நல்லவனாயுயர்ந்து செல்வமும் புகழும் எய்திச் சிறந்து விளங்கி மேலான கதிகளை அடைந்து கொள்கிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
நல்லவர் எனவும், கெட்டவர் எனவும் மக்கள் சுட்டிச் சொல்லப்படுகின்றனர். தங்கள் குணம் செயல்களால் அவர் அவ்வாறு சொல்ல நேர்ந்தனர். நெறியோடு நடந்து பிறர்க்கு இதமான செயல்களைச் செய்து வாழ்பவர் நல்லவராய் உயர்ந்து நலம் பல பெறுகின்றார். நெறிகேடராய் நின்று கெட்ட காரியங்களைச் செய்து வருபவர் கெட்டவராய் நிமிர்ந்து அல்லல்களை அனுபவித்து அவலமாய் அழிகின்றார். எல்லாச் செயல்களுக்கும் எண்ணங்கள் மூல காரணங்களாயுள்ளன.
தன் எண்ணம் நல்லதாயின் அந்த மனிதன் நல்லவன் ஆகின்றான்: அது தீயதாயின் அவன் தீயவனாய் வருகின்றான். அக நினைவுகள் புற வாழ்வுகளாய்ப் பொங்கி நிகழ்கின்றன. அந்தக் கரணத்தின் இயக்கங்கள் அதிசய நிலையின. அதில் படிந்துள்ள வாசனையின்படியே வளர்ந்து கிளர்ந்து வெளியே உயர்ந்து தோன்றுகின்றன. மனோவிருத்திகள் அளவிடலரியன; ஆயினும் அவை நன்மை, தீமை என்னும் இருவகை நிலைகளில் அடங்கி மனிதனுடைய பலவகை நிலைகளுக்கும் காரணங்களாயுள்ளன. நினைவின் விளைவுகள் மனித வுலகமாய் நிலவுகின்றன.
நல்லது, நன்று, நன்மை என்னும் மொழிகள் தருமம், நீதி, இனிமை முதலிய மகிமைகளை உணர்த்தி வருகின்றன. தீயது, தீங்கு, தீமை என்பன பாவம், பழி, இடர் முதலிய படர்களைக் குறித்து நிற்கின்றன.
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை விளைத்து வருதலால் அந்த மனிதன் நல்லவனாய் உயர்ந்து புகழ் புண்ணியங்களை அடைந்து கொள்கிறான்; அதனால் இருமையும் இன்பம் பெறுகின்றான். இனிய கருமங்கள் தனி மகிமைகள் தருகின்றன.
தீய எண்ணங்கள் தீய செயல்களை விளைத்து அந்த மனிதன் தீயவனாயிழிந்து பழி பாவங்களை அடைகின்றான்; இம்மை மறுமை என்னும் இருமையிலும் துன்பங்களை நுகர்ந்து துடித்து உழல்கின்றான்.
தன்னை நல்லவன் என்று உலகம் சொல்ல வேண்டும் என்றே எல்லாரும் பிரியப் படுகின்றனர். கெட்டவன், தீயவன், பாவி என்னும் பேரை யாரும் விரும்புவதில்லை; அவைகளை எவரும் வெறுக்கவே செய்கின்றார், சீவர்களுடைய இயற்கையான சுபாவங்கள் இவ்வாறு இயைந்து நிற்கின்றன. நின்றும் பிறவிகள் தோறும் பரம்பரையாய்ப் பழகி வந்துள்ள பழக்க வாசனைகளால் இழுக்கி வீழ்ந்து இழிவுறுகின்றனர்.
மனித இனம் அரிய பிறவியை அடைந்து வந்துள்ளது; நல்லது, தீயது இது என்று பகுத்து நோக்கி வகுத்து அறியும் திறனுடையது; நல்வினையாளர் புண்ணியவான்களாய் உயர்ந்து இன்ப உலகங்களை அடைகின்றனர்; தீவினையாளர் பாவிகளாயிழிந்து நரக துன்பங்களில் அழுந்துகின்றனர் என இன்னவாறான உறுதி உண்மைகளைத் தெளிவாக உணரவுரியது; இத்தகைய மகிமை வாய்ந்த பிறப்பைப் பெற்று வந்தும் சிறப்பான பேறுகளைப் பெறாமல் மனிதன் பிழையாயிழிவது கொடிய பரிதாபமாயுள்ளது. பழமையில் பழகியது.வளமையாய் வருகிறது.
தனது வாழ்வு உயர்ந்த செல்வங்களை அடைந்து சிறந்த வளங்களோடு வளர்ந்து வர வேண்டும் என்றே எந்த மனிதனும் சிந்தனையோடு முயன்று வருகிறான்; அவ்வாறு வந்தும் கருதிய பலனைக் காணாமல் மறுகி அலைகிறான். எண்ணம் சரியான குறிக்கோளோடு மருவி வருமளவே அதன் பலன்கள் பெருகி வருகின்றன; மருவாவழி யாவும் வீணாய் விளிந்து போய் அவன் வறிதே இழிகிறான்.
தன் உள்ளம் பொல்லாத தீமைகளில் பழகி வரவே மனிதன் எல்லா நன்மைகளையும் இழந்துபோய் இழிந்து திரிய நேர்ந்தான். நல்ல உணவுகளை உண்டு சிறந்த உடைகளை அணிந்து வெளியே களிப்போடு மினுக்கித் திரிந்தாலும் மனம் மொழி மெய்கள் பிழைபாடுடையவர் இழி நிலையாளராய் அழிவே அடைகின்றார். மேவிய செயல்களின் அளவே யாவும் விளைகின்றன.
நல்லது நினைந்து, நல்லது பேசி, நல்லது செய்ய உரிய கரணங்களைப் பொல்லாத வழிகளில் பழக்கி எல்லாத் தீமைகளையும் துணிந்து செய்து மான மனிதர் ஞான சூனியராய் ஈன நிலையில் இழிந்து திரிவது இஞ்ஞான்று எங்கணும் விரிந்து வருகிறது. அவல வாழ்வைக் கவலையின்றி நடத்தி அவமே அழிந்து கழிகின்றார். வையக வாழ்வு வெய்ய பழிகளாயுள்ளது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)
பொய்பேசிப் புறங்கூறிப் புன்மைகளே செய்து
புலைவாழ்வே தலைவாழ்வாய்ப் போற்றுகின்ற உலகீர்!
மெய்பேசி மெய்நினைந்து மேன்மைகளே செய்யும்
மேலான குலவாழ்வை மிகமறந்து போனீர்!
கைபூசி முகம்பூசிக் கால்பூசி உண்டே
களியாட்டம் புரிகின்றீர் ஒளிநாட்டம் இழந்தீர்!
மைபூசி இருண்டுள்ள கண்ணாடி எனவே
மனமிருண்டு மதிமருண்டு மடிகின்றீர் அந்தோ! 1
நாள்தோறும் செத்துநீர் நாசமடை கின்றீர்!
நாசநிலை தெரியாமல் நீசமுறு கின்றீர்!
வாள்தோறும் அறுபட்டு மடிந்துபடும் மரம்போல்
வாணாட்கள் தேய்ந்துவர மாய்ந்துபடு கின்றீர்!
ஆள்தோறும் அழிவேறி ஆண்டுவரும் உலகின்
அழிவுநிலை தெரியாமல் அகம்களித்து வாழ்வீர்!
நீள்தோறும் சிறிதேனும் நினைந்துநீர் பார்மின்
நெறிவிலகி அழிகின்ற நிலைதெரிய லாமே. 2
தீய பழக்கங்களைப் பழகி மக்கள் தீயராயிழிந்து அழிந்து வரும் அவல நிலைகளை இவை கவலையோடு காட்டியுள்ளன. பழியான பிழைகளை நீக்கி விழிதிறந்து நோக்கி மேலான நல்ல வழிகளில் ஒழுகி வர வேண்டும். அவ்வாறு வரின் மனித சமுதாயம் புனிதமாய் உயர்ந்து இனிது வளர்ந்து வரும்.
நேர்மையான நல்ல தரும நெறிகளில் செல்லமாட்டாமல் அல்லலான அவல நிலைகளிலேயே மனிதர் ஆவலோடு செல்லுகின்றனர். செயல் முறைகள் மயல்களாய் மாசு படிந்துள்ளன.
சத்தியமே பேசி வாழும் உத்தம நிலை ஒழிந்து போயது. பொய் பேசாமல் இந்த உலகில் வாழ முடியுமா? என்று யாரும் நீளமாய் எதிர்ந்து பேசும் காலம் நேர்ந்துள்ளது. படுமோசமான நீச நிலையில் மனித வாழ்வு நாசமடைந்திருத்தலை இந்த வாசகம் நன்கு விளக்கி நிற்கிறது. பொல்லாத வழிகளில் ஆசை பொங்கி ஓடுகின்றது; நல்ல நெறிகளில் நாட்டம் குன்றி இழிகின்றது. யாண்டும் புலைகளே நீண்டு நிலவி நெடிது உலாவுகின்றன.
பொய் பேசு, களவு செய், புறம் கூறு என்று யாரும் போதிக்கவில்லை. எவரும் பள்ளிக்கூடங்கள் வைத்து இவற்றைச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. இவை எல்லாரிடமும் எங்கும் பொங்கி நிற்கின்றன. மெய்யே பேசுக, எவ்வுயிர்க்கும் இரங்கி யருளுக, யாருக்கும் இடர் செய்யாதே; அயலார் உரிமைகளை மயலாய் விரும்பாதே; புலையும் கொலையும் களவும் ஒழி; என இன்னவாறு மேலோர் பலர் காலம் தோறும் நல்ல நெறிகளைப் போதித்து வந்துள்ளனர்; நூல்களும் சாதித்து வருகின்றன; வந்தும் ஒருபயனையும் காணோம்.
யாரும் சொல்லிக் கொடாமலே அல்லலான தீமைகளை அள்ளிக் கொண்டு யாண்டும் துள்ளித் திரிந்து துடுக்காய்ச் செய்து மனிதர் உள்ளம் களித்து வருவது அதிசய வியப்பாயுள்ளது. பழி வழிகளில் களி மீதூர்ந்து வருகின்றனர்.
பாவம் என்றால் ஏதும் பயமின்றிச் செய்ய இந்தச்
சீவனுக்(கு)ஆர் போதம் தெரித்தார் பராபரமே!
என்று தாயுமானவர் இவ்வாறு இறைவநை நோக்கிப் பரிதாபத்தோடு வினவியிருக்கிறார். மனிதரது போக்கை நோக்கி அந்தப் புனித உள்ளம் துடித்திருப்பதை இதில் ஊன்றி உணர்ந்து கொள்கிறோம். அவல நிலைகள் கவலைகளை விளைத்துள்ளன.
பழகி வந்த பழக்கங்களால் இழிநிலைகளை யுணராமல் ஈனங்களைத் துணிந்து செய்து மானமழிந்து மாந்தர் மாய்ந்து ஒழிகின்றார். ஆய்ந்து தெளிந்தவர் அவங்களை விலகி உய்கின்றார்.
தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்;
தீவினை என்னும் செருக்கு. 201 தீவினையச்சம்
தீவினைகளை அஞ்சி ஒதுங்குவார் மேலோர்; அவற்றை அஞ்சாமல் துணிந்து செய்வார் கீழோர் என இது குறித்துள்ளது. தீமை செய்பவன் பாவியாயிழிந்து படுதுயரடைகின்றான். அந்தக் கேடு நேராமல் நாடிக் காத்துப் பீடு பெற்று வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.