படகோட்டி

படகோட்டி

அறுபது வயதை கடந்து விட்ட சாத்தப்பனுக்கு மனம் குழம்பி கிடந்தது. மருமகள் ஒத்தைப் பிடியாய் நிற்கிறாள்.தனிக்குடித்தனம்
போக வேண்டும் என்று. இப்பொழுது அவர்கள் இருப்பதும் தனி குடித்தனம் போன்றதுதான். என்ன வீட்டு உரிமையாளனான தான் வீட்டு திண்ணையில் கிடப்பது அவளுக்கு தொல்லையாக தெரிகிறது.இது விஷயமாக அவர்கள் இருவரும் வார்த்தையில் உரசிக்கொள்வது இவர் காதில் ஈயத்தை ஊற்றி செல்கிறது.
இவர்தான் என்ன செய்ய முடியும்? மகராசி சண்முக வடிவு இவரை விட்டு போய் இரண்டு வருடமாகிறது. அவள் இருந்திருந்தால் இவரே தைரியமாக மகனிடம்
தனிக்குடித்தனம் போக சொல்லி விடுவார். இப்பொழுதும் இவர் சொல்ல தயார்தான். வயிறு என்று ஒன்று என்றிருக்கிறதே!
சண்முக வடிவு இருந்த வரையில் அவரை சமையல் அறை பக்கம் போக விடாமலேயே வைத்திருந்தாள். சாப்பாட்டுக்காவது இவர்களை நம்ப வேண்டி இருக்கிறது. நாள் முழுக்க வாசம் செய்யும் வீட்டு திண்ணையில் டக்கென்று வைக்கப்படும் காலை நேர காப்பி ஒன்பது மணிக்கு மகன் வேலைக்கு கிளம்பிய பின் திண்ணையில் வைக்கப்படும் ஆறிப்போன இட்லி, தோசை,உப்புமா.
சண்முக வடிவு இருந்த வரையில் வேலை வெட்டி இல்லா விட்டாலும் வீட்டுக்குள் உட்கார்ந்து உரிமையாய் சாப்பிட்ட காலம் எல்லாம் அவளோடு போய் விட்டது. பவானி ஆற்றில் பாலம் கட்டாமல் இருந்திருந்தால் நமக்குத்தான் வீட்டு திண்ணையில் கிடக்க வேண்டிய நிலை வருமா? தான் திண்ணையில் உடுப்பது, உறங்குவது, உண்ணுவது எல்லாம் மகன் பார்க்காமலா இருப்பான்! ஆனால் இதை பற்றி மனைவியிடம் பேசினால் அப்பாவுக்கு இதுவும் கிடைக்காமல் போய் விட்டால்! அந்த பயத்தில் பேசுவதில்லை.

நடு இரவில் விழிப்பு வந்து விடுகிறது. கொசுக்கடி வேறு, விடிய விடிய விசிறிக் கொண்டு விடியலுக்காக காத்திருப்பது ,பாயும் தலையணையும் நைந்து போய் கிடக்கிறது. இதை திண்ணையில் வைத்தால் மகன் பரிதாபப் பட்டு புதிதாய் வாங்கி தருவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்பொழுது எதிர்பார்ப்பதை மே விட்டு விட்டார். மற்றபடி குளிக்க, கழிக்க எல்லாமே பவானி ஆளுதான்.

காலை ஐந்து மணிக்கு விழிப்பு தட்டி விடும். பாய் தலையணை எல்லாம் சுருட்டி வைத்து விட்டு ஆற்றை பார்க்க நடந்தால் எல்லாம் முடித்து விட்டு காலை ஏழு மணிக்கு அவள் திண்ணையில் வைக்கும் காப்பியை சூடாக குடிக்க விழுந்தடித்து வருவார். அடுத்து ஒன்பது மணி வரை காத்திருந்து கொடுக்கும் டிபனை முடித்து விட்டு மீண்டும் ஆற்றை நோக்கி நடப்பார்.

ஒரு காலத்தில் விடியலில் படகுடன் கரையோரம் நின்றால் சண்முக வடிவு வந்து காப்பியும் காத்திருப்பாள். சில நேரங்களில் கரைக்கு போக
காத்திருப்பவர்கள் அவசரப்படுத்த குடிக்காமலேயே கிளம்பிய அனுபவமும் உண்டு.

சோக்காளிகள் ஐந்தாறு பேர் ஆற்றின் கரையோரம் இருந்த ஆலமரத்தடியில் அரட்டை அடித்து கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அங்கு போய் உட்கார்ந்து விட்டால் சூரியன் உச்சி தாண்டி மேற்கு பாயும்போது தான் வீட்டுக்கு வருவார்.காலையில் வந்தது போல் வேகமாக வரமாட்டார். காரணம் மருமகள் தோணும் போதுதான் சாப்பாட்டை எடுத்து வைப்பாள். வெளியில் எங்காவது போவதென்றால் பனிரெண்டுக்கே சாப்பாட்டை வைத்து விட்டு கிளம்பி விடுவாள். இவர் வரும் போது ஆறி ஆவலாய் இருக்கும்.மற்ற நேரங்களில் நேரம் கழித்தே வைப்பாள். சூடாக வாழ்வது சாப்பிடலாம் என்ற எண்ணத்திலேயே மெதுவாக வருவார், பசி குடலை பிடுங்கினாலும்.

அன்று அப்படித்தான், சோக்காளிகளுடன் பேசி கொண்டிருந்த பொழுது திடீரென கூக்குரல்கள் கேட்க ஆற்றங்கரைக்கு அனைவரும் ஓடினர். எதிர்
கரையில் நான்கைந்து பெண்கள் கூக்குரலிட்டபடி இருக்க தண்ணீருக்கு மேல் தலை தெரிய வேகமாய் இழுத்து வர பின்னால் மற்றொரு தலையும் தண்ணீரில் அடித்து வந்து கொண்டிருந்தது.

இங்கு தடாரென்று சத்தம், அனைவரும் திரும்பி பார்க்க சாத்தப்பன் எதிர் கரையை நோக்கி தண்ணீரின் வேகத்துடனேயே நீந்தி சென்று கொண்டிருந்தார். தண்ணீரின் வேகம் அளவு கடந்து இருக்க இவர் விரைவாக முதலாமவனை நெருங்கினார். சட்டென அவனை விட்டு விலகி தலை முடியை பிடிக்க அது பெண்ணாக இருக்க வேண்டும், கூந்தல் முடி கையில் இறுக்கமாய் அடங்க கொஞ்சம் முன்னேறி பின்னால் இழுத்து வருபனுக்காக விலகி நீந்தியவர் இவரை தாண்டி செல்ல முற்பட்டவனின் சட்டையை வலது கையில் பற்றி ஆற்றின் வேகத்துடனே கரையை ஒட்டி நீந்தினார்.
கரையை ஒட்டியபடி வந்தவர் ஓரமாய் காத்திருந்து நின்ற இளந்தாரிகள் இருவரிடம் அவர்களை ஒப்படைத்தார்.

இனி தான் கரை ஏறலாம் என்று நினைத்தவர் மனதில் சட்டென ஒரு கேள்வி எழுந்தது. இனி நான் கரை ஏறி என்ன செய்ய போகிறேன் ? இந்த எண்ணம் அவர் மனதில் உதிர்க்கும் போது சண்முக வடிவு எதிரே தோன்றி "வந்துடு மச்சான்"அவரை அழைக்க அவளை நோக்கி சென்றார்.

சாத்தப்பன் பெரிய நீச்சல் காரணாச்சே! அவங்களை கரை ஏத்திட்டு அவன் ஏன் ஏறலை? ஊர் மக்கள் அடுத்த ஒரு மாதமாய் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Nov-20, 7:28 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 148

மேலே